நாத்து நடுதல்
- - - - - - - - - - - - - - -
ஆ: ஏ புள்ள செவுத்த தாயி
உழவு ஓட்ட நானும் போறேன்
நாத்து புடுங்க ஆளு வேணும்
மேற்கால தெருவுலத்தான்
சனங்க நிறைஞ்சிருக்கு
கூட்டி வாடி நீயும் புள்ளே,
பெ: ஏ கருத்த மச்சான்
நான் சொல்லுறத கேளு மச்சான்,
போன பருவம் நாத்து நட்ட காச
இன்னும் கொடுக்கல மச்சான்,
சனங்கள கூப்டா
அட எப்படி வருவாங்க மச்சான்,
ஆ: வானம் இருண்டுக் கிடக்கு,
சாயங்காலம் மழை வருமோ,
பெய்யாம போயிடுமோ,
தண்ணியில்லாம காஞ்சிக் கிடக்கு
வாரியில தண்ணி இறைக்க
ஆளுங்கல கூட்டி வாடி
பெ:நாத்து நட தண்ணியில்ல,
காவேரியில தண்ணி இருக்கா,
கர்நாடகா தடுத்துப் புட்டான்,
விவசாயி வயித்துல அடிச்சிப்புட்டான்,
குறை சொல்லியே காலத்தையும்
ஓட்டிப்புட்டோம்,
தண்ணியில்ல ஒன்னுமில்ல
ஆளுங்கள கூப்டு வந்து என்ன
செய்ய போற மச்சான்,
ஆ: மனிதன் செய்த தப்பு
இது தப்பு தப்பு தப்பு,
வாய்க்காலிலே வீடு கட்டுன மனிதனாலே
வாய்க்கா தூர்ந்து போய்ச்சுதடி,
வாய்க்காலிலே
தண்ணி வத்திப் போய்ச்சுதடி
மழைப் பேஞ்சா
வெள்ளமா ஓடி கடலிலே கலக்குதடி
மழைத் தண்ணி எல்லாம்
வீணாத்தான் போகுதடி,
பெ:காட்டையெல்லாம் அழிச்சீங்க,
தரணியை தவிக்க விட்டீங்க
நாத்து நட கடன வாங்கி
நாத்தையும் நட்டீங்க,
அட நீங்க செய்த தப்பு
பருவக் காலம் மாறிப்போச்சு,
மகசூலு நல்லாவே விளைந்தது
மழைப் பேஞ்சு நாசமாப் போச்சு
ஆ: அய்யோ என்ன செய்வது
கடங்காரன் வந்துடுவான்
வட்டியோட பணத்த கேட்டிடுவான்,
மானத்தையும் வாங்கிடுவான்,
சாவ நானும் போறேன் புள்ள,
நாத்த நட்டு நாசமாப் போனேன்,
நானும் இப்போ பரலோகம் போறேன்,
பெ: அய்யோ, அய்யோ மச்சான்
வருத்தப்பட வேணாம் மச்சான்,
புள்ளக் குட்டி தவித்திடும்
தெருவிலே நின்றிடும்
தன் மானம் நமக்கிருக்கு
நம்ம உழைப்பு நம்மக்கிட்ட இருக்கு,
மீண்டும் மீண்டும் உழைத்திடுவோம்
சாமி நமக்கு துணையிருக்கு,
ஆ: அப்போ நாத்த எடுத்துப் போடடிப் புள்ளே
சனங்க எல்லாம் நட்டிடட்டும்,
அட கடவுள் விட்ட வழி
அதுவே நமக்கும் வழியடி,
அட கடவுள் விட்ட வழி
அதுவே நமக்கும் வழியடி.
- - - - - - - - - - - - - - - - - - .---
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment