Saturday, 19 October 2019

வாட்ஸ்-அப், கூகுள் பாதுகாப்பானதா?

வாட்ஸ்-அப், கூகுள் பாதுகாப்பானதா?


தற்போது மோசடியான பரிவர்த்தனைகளை பற்றி விசாரணை மேற்கொள்ள அமெரிக்காவுடன் அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. உங்களின் வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை.தகவல்களை உள்நாட்டிலேயே சேமித்து வைப்பதை கட்டாயமாக்க இந்தியா முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளினால் பன்னாட்டு இணைய பெரும் நிறுவனங்களான கூகுள், பேஸ்புக் மற்றும் இ-வணிக பெரு நிறுவனமான அமேசான் போன்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

பலம் வாய்ந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து இந்தியா முன்னெடுத்துள்ள சட்ட திருத்தத்தை வாபஸ் பெற கடும் முயற்சி செய்து வருகின்றன. திறந்த தகவல்கள் முறையை அமல்படுத்த கூறி போராடுகின்றன.

இந்தியா எடுக்க இருக்கும் கொள்கை முடிவுகள் இதர நாடுகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் அந்நாடுகளும் இந்தியாவை போலவே தகவல்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது.

விசா அல்லது மாஸ்டர் கார்டினை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களின் பரிவர்த்தனை பற்றிய தகவல்கள் அமெரிக்காவில் உள்ள சர்வர் ஒன்றில் சேமிக்கப்படுகிறது. அமேசான் மூலம் நீங்கள் எதையாவது வாங்கினால் அந்த பரிவர்த்தனை பற்றிய அனைத்து தகவல்களும் அமெரிக்காவில் உள்ள அதன் சர்வருக்கு செல்கிறது.

கூகுள் மூலம் நீங்கள் எதையாவது தேடினால் அந்த தேடுதல் விவரங்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள சர்வரில் சேமிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படும் அனைத்து தகவல்களுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது.

56.6 கோடி பயனாளர்களை கொண்ட இணைய பயன்பாட்டில் 2-வது இடத்தில் உள்ள இந்தியா ஒரு செழிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது. தகவல்கள் பாதுகாப்பு சட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.

தகவல்களை உள்நாட்டில் சேமிப்பதை கட்டாயமாக்கும் கொள்கை இந்திய குடிமகன்களால் உருவாக்கப்படும் அனைத்து முக்கிய தகவல்கள் மற்றும் அந்தரங்க தகவல்களை (கடவுச்சொற்கள், நிதி விவகாரங்கள் பற்றிய தகவல்கள், பாலிய சார்பு, பயோமெட்ரிக் தரவுகள், மதம் அல்லது சாதி பற்றிய தகவல்கள்) இந்திய எல்லைக்குள் சேமித்து வைக்க வலியுறுத்துகிறது.

2018-ன் துவக்கத்தில் உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று தகவல்கள் தான் மிகப்பெரிய சொத்தாக உள்ளது. உலக அளவில் வழிந்தோடும் தகவல்களினால் பெரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் உருவாகியுள்ளன.

மலை போல் தகவல்கள் குவிந்து வருகின்றன. அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போட்டி போடுகின்றனர். ஏனென்றால் தகவல்களை கட்டுப்படுத்துவரே உலகையும் கட்டுபடுத்துவார் என்று சொல்லப்படுகிறது” என்று கூறினார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், 34 கோடி சந்தாதாரர்களை கொண்ட மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை நடத்தி வருபவரும், ஆசியாவின் பெரும் செல்வந்தருமான முகேஷ் அம்பானி இந்தியாவில் உருவாகும் தகவல்களை பாதுகாக்க தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்.

“தகவல்கள் தான் இனி புதிய எண்ணெய் வளம். பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் நம்முடைய தகவல்கள் தளங்களை கட்டுபடுத்த அனுமதிக்கக்கூடாது” என்கிறார் அவர்.

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சர்வர்களில் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டும் என்று தகவல்கள் பாதுகாப்பிற்கான கிருஷ்ணா கமிஷனின் அறிக்கை பரிந்துரை செய்கிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தகவல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மிக முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இந்தியாவிற்குள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை இந்த கமிஷன் வலியுறுத்துகிறது.

தகவல்களை பாதுகாக்க ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு சட்ட வரைவு மசோதா 2018-ஐ இந்தியா உருவாக்கியது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி தகவல்களை உள்நாட்டிலேயே சேமித்து வைக்க விதிகளை உருவாக்கியுள்ளது.

மருத்துவ சேவை துறைக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தகவல்கள் பாதுகாப்பு சட்ட வரைவு மசோதா, மருத்துவ சேவைகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்நாட்டு சர்வர்களில் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கியவர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான மேகக கணிமை கொள்கைக்கான குழுவும் இந்தியாவில் உருவாகும் தகவல்களை இந்தியாவிலேயே சேமித்து வைக்க போராடுகிறது.

அந்த குழுவின் அறிக்கை இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் பாதுகாப்பு பற்றி இந்தியா முன்னெடுத்துள்ள முயற்சிகளினால் அமெரிக்க பெரு நிறுவனங்களின் ஏகபோகம் முடிவுக்கு வரும்.

கூகுள், பேஸ்புக், வாட்ஸ்-அப், அமேசான், விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே-பால் ஆகிய நிறுவனங்கள் தகவல்களை உள்நாட்டில் சேமிக்க வேண்டிய சட்டங்களில் இருந்து விலக்கு பெற கோரியுள்ளன.

பாதுகாப்பு பற்றிய வாதம் ஆதாரம் இல்லாதது. 2018-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளினால் 450 கோடி தரவுகள் அம்பலப்படுத்தப்பட்டன. 2019-ல் 77.4 கோடி மின்மடல் முகவரிகள் சம்பந்தப்பட்ட 270 கோடி அடையாளங்கள் பற்றிய தரவுகளும், 2.1 கோடி கடவுச்சொற்களும் இணையத்தின் மூலம் விற்பனைக்காக முன்வைக்கப்பட்டன.

இந்த இணையதள பெரு நிறுவனங்கள் நம்முடைய தகவல்களை பாதுகாக்க முடியாது என்பது இவற்றில் இருந்து திருடப்படும் தகவல்கள் பற்றிய செய்திகளில் இருந்து தெளிவாகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடந்த தேர்தல்களின் முடிவுகளை பாதிக்கும் வகையில் தமது பயனாளர்கள் பற்றிய தகவல்களை பேஸ்புக் நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்திற்கு அளித்த விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

சீனாவில் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற பெயரில் பன்னாட்டு இணையதள பெரும் நிறுவனங்கள் இயங்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கூகுளாக பைடுவும், அமேசானுக்கு இணையாக அலிபாபா நிறுவனமும் உள்ளன. வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் தடை செய்யப்பட்டு அவற்றிற்கு பதிலாக ‘வீச்சேட்’ உள்ளது.

இணையதள பெரு நிறுவனங்கள் தகவல்களை உள்நாட்டில் சேமிப்பதை ஏன் எதிர்க்கின்றன?

2019-ல் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 62.7 கோடியை எட்டும். இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 21.8 கோடி பேஸ்புக் பயனாளிகளும், 40 கோடி வாட்ஸ்-அப் பயனாளிகளும் உள்ளனர்.

“இந்த நிறுவனங்களுக்கு இந்திய சந்தை ஒரு பெரும் பணம் காய்ச்சி மரமாக இருக்கும்” என்று ஐ.எம்.ஆர்.பி என்ற சந்தை ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

“100 சதவீத திறந்த தகவல் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியாவில் தகவல் உள்கட்டுமானத்தை கட்டமைக்க, தகவல்களை உள்ளூர்வயப்படுத்துதலை ஓரளவு முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்” என்று சி.ஏ.ஆர்.இ ரேட்டிங்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளரான பாக்யஸ்ரீ பட்டி கூறுகிறார்.

தம் குடிமக்களின் அந்தரங்கள் தகவல்களை பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசுகள், தகவல்கள் வழிந்தோட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் என்று சமீபத்தில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு 2019-ன் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய அறிக்கை கூறுகிறது.

2013-ல் 900 கோடி சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பொருட்களின் இணையம், வேகம் பெற்று வருவதாக ஹெச்.பி. நிறுவன ஆய்வு கூறுகிறது.

2025-ல் இது ஒரு லட்சம் கோடி சாதனங்களை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரம் அல்லது தகவல்களின் கட்டற்ற வழிந்தோட்டம் என்ற பெயரில் ஒரு சில ஏகாதிபத்தியவாதிகளினால் தகவல்கள் ஏகபோகமாக்கப்பட்டால் அது ஒரு புதிய வகை காலனியாதிக்கத்திற்கு அதாவது தகவல்களின் காலனியாதிக்கத்திற்கு இட்டுச்செல்ல வாய்ப்புள்ளது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தகவல் பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.


Monday, 14 October 2019

ஐ லவ் யு செம்பருத்தி


#ஐ_லவ்_யு செம்பருத்தி
எங்க வீட்டில்
செம்பருத்தி கன்று ஒன்றை நட்டு வைத்தேன்,
அது ஒத்தச் செடியாய்
வளரத் தொடங்கியது,
பாவம் அதற்கு ஜோடி கன்று ஒன்றில்லை.
ஜோடி இருந்தால் தானே எனர்ஜியுடன் வளரும்.
அதனால் நானே ஜோடியானேன்,
அவளை தண்ணீர் ஊற்றி வளர்த்தேன்,
சில நாட்களுக்கு முன்புதான்
செம்பருத்தி தெளிந்தாள்,
நேற்று அழகாய் தெரிந்தாள்,
மொட்டு ஒன்று விரிந்திட நேரம் காத்திருந்தது,
காலையில் எழுந்தேன்,
கதவை திறந்தேன்,
அவள் மலர்ந்திருந்ததை கண்டேன்,
சோம்பல் தெளிந்தேன்,
என் கைப்பேசியில் அவளை விதம் விதமாக புகைப்படம் எடுத்தேன்.
ஏனென்றால் அவள் புத்தம் புது தென்றலில் அழகாய் தெரிகிறாள்,
வாடினாலோ, யாரேனும் களவாடினாலோ
என் செம்பருத்தியை எங்கு சென்று தேடுவேன்,
ஏன் என்றால் அவள் மலரல்லவா,
பெண்கள் கூட அவளிடம் ஆசைக் கொள்வார்கள்,
அதனால் தான் என் கைப்பேசி கிடங்கில் அவளை சிறைப்பிடித்தேன்.
#ஐ_லவ்_யு செம்பருத்தி

Wednesday, 9 October 2019

மாவீரா நாங்கள் உங்கள் வழியில்

மாவீரா நாங்கள் உங்கள் வழியில்
-------------------.
சத்ரியனுக்காக பிறந்த மாவீரா
உம் மறைவு எமக்கு பேரழிவா,
நீவீர் இருந்த வரை நீலத்திற்கு முற்றுப்புள்ளி - இனி
எம் குலத்திற்கு காவல் கேள்வி குறியோ!

நீங்கள் வாழ்ந்த சம காலத்தில்
மஞ்சளின் மகிமை கண்டோம்.
எம் இன இளைஞர்களின் வீரம் கண்டோம்,
சிங்கத்தின் பெருமைதனை உணர்ந்தோம்.

நீவீர் விதைத்த வீரம் களவு போகவில்லை
எம் குல தலைவா,
நம் பெண்களின் காவலாய்
நாங்கள் புறப்படுவோம்.

என் இளம்  சிங்கங்கள்
உம் உருவம் பொறித்த ஆடையுடன் காவல் பணியில்
சத்ரிய படையாய்
புறப்பட்டதை காண நீவீர் இல்லையே,
என் தலைவா!

நீவிர் விதையாய் விதைக்கப்பட்டீர்
நாங்கள் விருட்சமாய் வளருவோம்,
நாடக காதலை வேரறுப்போம்,
சம தர்மத்தை நிலைநாட்டுவோம்,
எம் குலத்தை காப்போம் என
சூளுரைக்கும் உம் படைதளபதிகளை
காணாமல்
மணிமண்டபத்தில் உறங்குகிறாயே
என் தலைவா,
சூலுரைகள் கேட்கிறதா உம் காதுக்கு!

ஆயிரம் வீணர்கள் வந்தாலும்,
ஒற்றை சிங்கமாய் வெகுண்டெழுந்து
எதிர்த்த என் தலைவா,
இனி ஒரு வீரனை எப்படி காண்போம்.
கோட்டை ஒன்றை கட்டி
குலதெய்வமாய் மாற்றி விட்டார்களே,

அக்கினியில் தோன்றிய என் தலைவா
காடுவெட்டியில் அணைந்து ஓய்வெடுப்பது ஏனோ,
உங்கள் மறைவு தீப்பிழம்பாய் எங்களை எரிக்கிறதே,
எங்களை வீரு கொண்டெழச் செய்யவா,

உம் மறைவால் நடக்கும் சதிவலைகள்
ஆயிரம், ஆயிரம்
உம்மை தூற்றிய மாற்று சமுக வாயெல்லாம்
போற்றுகிறது உம் வீரத்தின் வரலாறை .

ஒற்றுமைக்கு வித்திட்ட
வன்னிய தலைவா,
உம் புகழ் வாழ்க,
உங்கள் வழியில் எங்கள் பயணம் தொடரும்,
எம் இனத்தை மட்டும் அல்ல
நம் சகோதர இனத்தையும், மானத்தையும் காப்போம்.

தமிழா நீ புறப்படு

தமிழா நீ புறப்படு
உனக்கான நேரம் எழுந்திடு
வாய்ப்பு அமைந்தது விழித்திடு
மீண்டும் கிடைக்குமா நினைத்திடு

உன்னால் பாரதம் பெருமை கொள்ளுது
உலகில் தலைநிமிர்ந்தது
பழமை பேசியது போதும்
புதுமை படைத்திட புறப்படு

சினிமா மோகம் குறைந்தது
வேட்டி கட்டிய தமிழன் ஆளும் நேரம்
நீ மீசையை முறுக்கு
சிம்மாசனம் காத்திருக்கு

இந்தியை திணித்து
தர்ம யுத்தம் நடக்குது தமிழுக்கு
வடக்கத்தியான் ஆண்ட பாரதத்தை
தெற்கத்தியான் ஆளும் நேரம் இது

தூங்கி வழிந்த காலம் போதும்
விழிக்கும் காலம் வந்தது
பாரதத்தை காக்க எழுந்திடு,
பண்பாட்டை மீட்க புறப்படு,



Tuesday, 8 October 2019

சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி

நாமக்கல் அருகே

சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி

எருமப்பட்டி, அக்.9-

எருமப்பட்டி அருகே சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

திருவிழா

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி நாளில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது சாமி அழைக்கப்பட்டு தப்பாட்டம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதைத்தொடர்ந்து சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெறும்.

இதேபோல் இந்த ஆண்டும் அச்சப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. சாமியை அலங்கரித்து, காட்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு பக்தர்கள் தப்பாட்டம் ஆடியபடி வந்தனர். அங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சாட்டையால் அடித்து....

அதனை தொடர்ந்து சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது காட்டு கோவில் முன்பு வரிசையாக பெண்கள் மண்டியிட்டு, கைகளை உயர்த்தியபடி இருந்தனர்.

மண்டியிட்டு இருந்த பெண்களின் கைகளில் பூசாரி சாட்டையால் ஓங்கி அடித்தார். பெரும்பாலான பெண்கள் ஒரே அடியில் கைகளை உதறியபடி எழுந்து சென்று விட்டனர். சில பெண்கள் 4, 5 அடி வரை வாங்கி கொண்டு அப்படியே நின்றனர்.

குழந்தை பேறு

இதுகுறித்து சாட்டையடி வாங்கிய பெண் ஒருவர் கூறியதாவது:-

சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி இங்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பேயின் பிடியில் சிக்கியவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், கொடிய நோய்களில் இருந்து குணமாகவும் பெண்கள் சாட்டை அடி வாங்குவது வழக்கம். பேயின் பிடியில் சிக்கியவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட சாட்டையடி வாங்குவர். மற்றவர்கள் ஒரே அடியில் எழுந்து விடுவர்.

இங்கு நேர்ச்சையாக கொண்டு வரப்படும் ஆடுகளை வெட்டி, அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புகைப்படம்

அசலை நிழலாக்கும்,
நிஜத்தை காப்பியமாக்கும்,
உயிரை பிம்பமாக்கும்,
உள்ளத்தை கர்வமாக்கும்,
அவன் பெயரை கக்கும் புகைப் படம்!

நினைக்கும் வடிவில் உருவமாய்,
பின்புறம் கலங்கலாய்
முன்புறம் கவர்ச்சியாய்,
அசல் மட்டும் தெளிவாய்,
ஒரு தொடு திரையில் அழுத்தமாய்
பதிவானாய் - புகைப்படமாய்,

காலம் உள்ளவரை அழியாது,
முகநூல் இருக்கும் வரை தேயாது,
இணையம் சுற்றும் வரை உலகை சுற்றும்,
காற்றலையில் பட்டமாய் பறந்திடும் புகைப்படம்.





Sunday, 6 October 2019

நீங்கள் நீங்களாக இருங்கள்

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்)

2. முடிந்தவரை  அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....
குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ ,
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15.  வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24.  ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்.

Saturday, 5 October 2019

ஆரியனூர் கோணாங்குப்பம் ஆனது எப்படி:

ஆரியனூர் கோணாங்குப்பம் ஆனது எப்படி:

முகாசப்பரூர் ஜமீன் பாளையகாரர் ஆளுகைக்குட்பட்ட பகுதி ஆரியனூர். பின்னாளில் அரசர் வசிக்கும் பகுதி என்பதால் கோண் ஆண்ட குப்பம் எனவும்,  கோண் என்றால் அரசனையும், அரசன் ஆண்டதையும், மக்கள் குடியிருப்பு பகுதி குப்பம் என்பதாலும் கோணாங்குப்பம் என அழைக்கப்பட்டதாக செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரியனூர் என்றழைக்கப்படும் கோணாங்குப்பம் பண்டைய காலத்தில் இயற்கை வளமிக்க நீரோட்டம் உள்ள அழகான காடாக இருந்துள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுமாடுகளை மேய்க்கும் தொழிலை ஏற்றிருந்தனர். இந்த குறுங்காடு முகாச பரூர் பாளையகாரர் ஆட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த பகுதியாகும். இத்தாலி நாட்டில் பிறந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பெயரை உடைய பின்னாளில் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்டவர், தேம்பாவணி என்ற இலக்கியத்தை படைத்த புலவர். இவர் சிறுவயதில் இருந்து மரியன்னை மாதாவின் புகழை பரப்புவதற்காக இந்தியா வந்து 2 மாதா சிலைகளுடன் கால்நடையாக பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இவர் ஆரியனூர் என்ற தற்போதைய கோணாங்குப்பம் காட்டை கடந்து செல்கையில் சோர்வு ஏற்படவே வீரமாமுனிவர் அந்த காட்டில் ஓய்வெடுத்தார். காட்டில் இருந்த ஆலமரத்தடியில் தனது 2 மாதா சிலைகளையும் அருகில் வைத்து கொண்டு தூங்கிய போது அங்கு ஆடு, மாடு மேய்த்த சிறுவர்கள் வீரமாமுனிவர் தனது தோள்ப்பையில் வைத்து அணைத்து கொண்டு தூங்கிய போது அந்த சிலையின் அழகில் மயங்கி அதில் ஒரு சிலையை சிறுவர்கள் எடுத்து சென்றனர். பின்பு அதனை என்ன செய்வது என தெரியாமல் அப்பகுதியில் உள்ள ஒரு அடர்த்தியான முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

 வீரமாமுனிவர் எழுந்து பார்த்த போது தனது தோள் பையில் வைத்திருந்த ஒரு சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து முகாச பரூர் சென்று கச்சிராயர் என்ற பாளையகாரரை சந்தித்து மரியன்னையின் புகழை அவரிடம் கூறுகிறார். அப்போது அந்த ஜமீன் தனக்கு செல்வமும், அதிகாரமும் இருந்த போதும் தனக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது வீரமாமுனிவர் அந்த ஜமீனிடம் மாதாவிடம் வேண்டிகொள்ளுங்கள், தங்களுக்கு நிச்சம் குழந்தை இருக்கும் என கூறிவிட்டு, தான் கொண்டு வந்த மாதா சிலை காணாமல் போனதையும் அந்த ஜமீனிடம் கூறிவிட்டு ஏலக்குறிச்சி சென்றுவிடுகிறார்.

அந்த ஜமீன்தாரரும் தனக்கு குழந்தை வேண்டி வீரமாமுனிவர் கூறியபடி மரியன்னையிடம் மனம் உருகி வேண்டி கொண்டார். அப்போது அவர் தூங்கிய போது அன்னை கனவில் தோன்றி தான் காட்டில் தணித்திருப்பதாகவும், எனக்கு ஒரு கோவில் அமைத்து கொடுத்தால் உன் குலம் தழைக்க ஒரு ஆண்மகனை தருவேன் என கூற கனவு கலைந்துவிடுகிறது. மறுநாள் காலை எழுந்த கச்சிராயர் தனது கூலியாட்கள் மூலம் மாதாவைத் தேடி காட்டை தூய்மை படுத்திய போது சிறுவர்கள் காட்டில் புதரில் மறைந்து வைத்த அன்னையின் சிலை கிடைத்தது. தனது கனவில் வந்த அதே மாதாவின் சிலையை பார்த்து பூரிப்படைந்த கச்சிராயர் அந்த மாதாவை அங்கேயே வைத்து வழிபட தொடங்கினார். அதன்படி அந்த கச்சிராயருக்கு ஆண் வாரிசு பிறந்தது. இதனால் தன் வேண்டுதல் நிறைவேறியதால் அன்னை மாதா கனவில் கூறியது போலவே சிறு கோவில் கட்டி வழிப்பட்டார். இன்றும் அந்த மாதா சிலை தற்போதைய ஆலயத்தின் இடது புறமாக ஒரு மரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீரமாமுனிவர் தன் பயணத்தின் போது இந்த பகுதியை மீண்டும் கடந்த செல்கிறார். அப்போது தான் தொலைத்த சிலையை வைத்து ஆரியனூர் மக்கள் வழிபடுவதை அறிந்து அதனை காண அங்கு சென்றார். அங்கு தான் தொலைத்த சிலையை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுவதை பார்த்த வீரமாமுனிவர், மகிழ்ச்சியடைந்து பெரிய ஆலயத்தை அமைத்தார். தற்போது அமைந்துள்ள கோணாங்குப்பம் பெரியண்ணை ஆலயமே வீரமாமுனிவர் தன் பயண காலத்தில் முதன் முதலாக கட்டிய கோவிலாகும். இந்த கோவில் போர்ச்சுகீசியர் பாணியில் கட்டப்பட்டதாகும். வீரமாமுனிவரின் சின்னமாகவும் விளங்குகிறது. வீரமாமுனிவர் வெளிநாட்டவர் என்றாலும் தமிழை முறைப்படிபயின்று தேன் சொட்டும் காவியமாம் தேம்பாவணி என்ற காவியத்தை இயற்றினார். அதில் ஆரியனூர் அன்னையை பற்றியும் பாடியுள்ளார். இந்த இலக்கியத்தை கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில்தான் எழுதி முடித்தார் என கூறப்படுகிறது.

பரூர் பாளையகாரரின் குலதெய்வமான அம்மனை மங்கலநாயகியம்மன் என்றழைக்கப்படுவது போலவே பாளையகாரருக்கு குழந்தை இல்லாத குறையை நீக்கி குலத்தை தழைக்க செய்ததால் ஆரியனூர் மாதாவை புனித பெரியநாயகி அன்னை என்றும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். அதனால்தான் என்னவோ குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த புனித அன்னை பெரியநாயகியை வழிப்பட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

முகாசப் பரூர், மங்கலம்பேட்டை, கோணாங்குப்பம் இந்த 3 ஊர்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே அடக்கி வைத்திருப்பதாலும், வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுக்கு சொர்க்கப்புரியாக விளங்கி வருகின்றன. பல வரலாற்று ஆய்வாளர்கள் இந்த ஊர்களை பற்றியும், கல்வெட்டுகள், பண்டையகால சிலைகள், அரண்மனை குறித்தும், இப்பகுதியை ஆண்ட அரசகள் குறித்தும் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


பரூர் முகாச பரூர் ஆனது எப்படி:

பரூர் முகாச பரூர் ஆனது எப்படி:

மூகாசா என்ற ஆங்கிலேய தளபதி பரூர் பாளைய கார ஆட்சியை கைப்பற்றுவதற்காக படையெடுத்து வந்துள்ளான். அப்போது பாளைய காரர் சரணடையாததால் மங்கலம்பேட்டையில் இருந்து போரிட தயாரானான். முதலாவதாக பாளையகாரர் ஆட்சிக்குட்பட்ட மங்கலம்பேட்டையில் இருந்த மங்கலநாயகியம்மன் கோவிலை தகர்க்க முடிவு செய்தான். அர்ச்சகர் அந்த படை தளபதியை எச்சரித்தும் கேட்கவில்லை. அப்போது அவன் வாள் மங்கலநாயகியம்மன் பீடத்தை பதம் பார்த்தது. ஆனால் அந்த பீடம் அசைய மறுத்து வாள் தெறித்து விழுந்தது. அந்த பீடத்தை தாக்கியதற்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளதாம். அப்போது அம்மன் வெகுண்டெழுந்து மூர்க்கமாகி தனது வில்லினாள் அம்பெய்தாள். அந்த வில் மூகாசாவின் கண்களை குருடாக்கியது. அப்போது அவனது படை வீரர்களின் கண்களும் குருடாகியது.  அந்த படைதளபதியை எச்சரித்த அர்ச்சகர் நான் எச்சரித்தும் கேட்காததால் குருடாகிவிட்டீர்களே என கூற மூகாசா நெடுஞான்கிடையாய் விழுந்து அம்மனை வணங்க சினம் தணிந்த அம்மன் படைதளபதிக்கும் வீரர்களுக்கும் மீண்டும் பார்வை கிடைக்க அருள்புரிந்தாள். பார்வை பெற்ற மகிழ்ச்சியில் மூகாசாவும் அவன் படையும் போரை கைவிட்டு அங்கிருந்து சென்று. ஆங்கிலேயரும், நவாப் முகமது அலியும் கூட்டு படை அமைத்திருந்ததால் மூகாசா நவாப் முகமது அலியிடம் நடந்ததை கூற முகமது அலி அம்மனின் சக்தியை உணர்ந்து இந்த கோவிலுக்கு மானியமாக நிலங்களை எழுதி தந்துள்ளான். அதனை இன்றும் நவாப் மானியம் என அழைக்கிறார்கள். மீண்டும் மூகாசா தமது படையினருடன் சென்று பரூர் பாளையகாரருடன் போரிட்டு காயமடைந்து மரணத்தின் விளிம்பில் இருந்த போது தமது நினைவாக ஏதேனும் செய்தருளும் படி பாளையகாரரிடம் வேண்டியுள்ளான். பாளையகாரரும் அதற்கு இசைவு தெரிவிக்க மூகாசா பெயரில் மூகாச பரூர் என அழைக்க வேண்டும் என வேண்டிகொள்ள பரூர் மூகாச பரூர் ஆனது என வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பரூர் என்ற பருவூர்:
பருவூர் என அழைக்கப்பட்ட இந்த ஊரை கி.பி.1753ம் ஆண்டில் பிரெஞ்சி மற்றும் மராத்தியப்படைகள் இணைந்து தாக்கிய போது பரூர் ஜமீன் சரணடைந்ததாக தென்னாற்காடு மாவட்ட அரசு கெசட்டில் 489ம் பக்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் பிறகே இந்த ஊருக்கு முகாசா பரூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பரூவூர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தெரிகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் அனைத்தும் நாஜேந்திரசிம்ம வளநாட்டு இருங்கோளப்பாடி பருவூர் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் என குறிப்பிடப்படுவதால் விருத்தாசலத்தை விட பெரிய ஊராக பரூர் இருந்ததாக அறிய முடிகிறது.

கல்வெட்டுகள்:
உலகில் உள்ள 7 சிறந்த நகரங்களில் ஒன்று  காஞ்சி மாநகரம். தொண்டை நாட்டின் பல்லவர்களின் தலைநகரமாக இந்த ஊரை கி.பி. 892ல் முதலாம் ஆதித்த சோழனால் கைப்பற்றப்பட்டது. இதனால் பல்லவர்களால் முன்பு போல தலைதூக்க முடியவில்லை. ஆதலால் பல்லவ பரம்பரையினர் கச்சி என்ற காஞ்சிபுரத்தில் இருந்து தங்கள் ஊர்பெயருடன் புறப்பட்டு ராயர் என இணைத்து கச்சிராயராக மாறி தென்னாற்காடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதாவது சோழநாடு, நடுநாட்டில் குடியேறியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. பல்லவர்கள் காடவ ராயர்கள் என அழைக்கப்பட்டதால் நடுநாட்டிற்கு வந்த பரூர் பாளையகாரர்கள் பல்லவர்கள் என்பது புலனாகிறது. முகாச பரூர் ஜமீன் குடும்பத்தின் இளவரசி ராசாத்தி என்பவருக்கும், பிச்சாவரம் சோழப்பரம்பரையைச் சேர்ந்த சாமிதுரை சூரப்ப சோழனார் என்பவருக்கும் திருமணம் நடந்ததால் பரூர் ஜமீன் மற்றும் சோழர்களுக்கு இடையே பெண் கொடுத்து எடுக்கும் படலம் தொடர்ந்து வந்துள்ளது. எலவனாசூர் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டில் பரூர் உடையார் தேவர் கச்சிராயருடைய பிள்ளை காளத்திநாதர் நில தானம் வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளது.

அரண்மனை:
பரூர் ஜமீன் அரண்மனை கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயே படையெடுப்பின் போது வரிகட்ட மறுத்ததால் பீரங்கி குண்டுகளின் தாக்குதலால் அழிந்து போனதாக கூறப்படுகிறது. யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை, காலாட் படை ஆகிய படைகள் சிறந்து விளங்கின-. இன்றும் அரண்மனை இருந்ததற்கான ஆதாரமாக சில தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. யானைகள் கட்டப்பட்டிருந்ததற்கு ஆதாரமாக யானை கட்டி கல் இன்றும் அங்கும் உள்ளது. ஆங்கிலேயேர்கள் பாளையகாரரின் குதிரைப்படையை அழிப்பதற்காக ஒரே இடத்தில் அனைத்து குதிரைகளையும் நிறுத்தி கொன்றதால் ஊரின் ஒரு பகுதியை குதிரை கொல்லி மேடு என அழைக்கப்படுகிறது.

பல்லவ மன்னர்களாக வாழ்ந்த காடவராயர்கள் ஆங்கிலேயர் காலத்திற்கு முற் பகுதியில் பாளையகாரர்களாகவும், ஆங்கியேர் காலத்தின் பின் பகுதியில் ஜமீன்தார்கள் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவராக காடவராயர் கோன் என்பவர் இடம் பெற்றுள்ளார். பல வரலாற்று ஆய்வுகள் மூலமும், அன்னமங்கல கல்வெட்டின் மூலமும், பரூரை ஆண்ட காடவராயர்கள்தான் செஞ்சி கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. இவர்களின்  அனுமன் கொடியை பயன்படுத்தி வந்துள்ளனர்.  பரூரை ஆண்ட மன்னன் காடவராயர் கோப்பெருஞ்சிகன் குறித்த கல்வெட்டுகள் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர், சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு கோபுரங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பரூர் பாளையகார குறுநில மன்னர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட போர் கருவிகள், கஜ, புஜ ஆயுதங்கள் பரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளில் காணமுடிகிறது.

பரூர் அரண்மனை கோட்டையை ஆங்கிலேயேர்கள் பீரங்கி கொண்டு தகர்த்த போது அந்த பீரங்கி பல வருடங்களாக அந்த பகுதியில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை கடந்த 1964ல் தான் ஜமின் குடும்பத்தினர் அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.



பிரசவத்தை எளிதாக்கிய வாள்:
பரூரில் ஜமீன் குடும்பத்தில் பராமரிக்கப்பட்டுவரும் வாள் போன்ற கத்திக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆம் இந்த வாலினை வாங்கிச்சென்று  கர்ப்பிணிகள் பிரசவிக்க முடியாமல் அவதியுறும் போது ஒரு கயிறு மூலம் கர்ப்பிணி படுத்திருக்கும் நிலையில் அவருக்கு மேலாக அந்த வாளினை கட்டி தொங்க விட்டு அந்த வாளில் விளக்கெண்ணெய்யை விட வேண்டும். அவ்வாறு அந்த வாளின் வழியே வழிந்து வரும் விளக்கெண்ணெய் கர்ப்பிணியின் தொப்புள் பகுதியில் சொட்டு சொட்டாக படும் போது எளிதாக குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இன்றும் அந்த முறை அப்பகுதியில் பயன்பாட்டில் உள்ளது.

பல்லவர் காலம்:
பரூர் வரதராஜர்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மர் சிலை மற்றும் அனுமன் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் பல்லவர் காலத்து சிலைகளாக உள்ளன. இவற்றில் பல சிலைகள் போர் நடந்த போது சேதமடைந்த நிலையில் இன்றும் உள்ளது. கோவிலின் அருகே அரசமரத்தடியில் கலைநயமிக்க புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது, இந்த சிலை அருகில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், பல்லவர் காலத்தில் செய்யப்பட்ட சிலை எனவும் தெரிகிறது. ஆனால் இந்த சிலை சமண மதத்தை தோற்றுவித்த மகா வீரரின் சீடர்களில் 22 வது சீடர் சிலை என்ற கூற்றும் நிலவி வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சமண மத பக்தர்கள் இந்த சிலையை வணங்கி செல்வதுடன், அந்த சிலையை வைத்து கோவில் அமைக்கவும் அந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது இப்பகுதியில் அரசர்கள் ஆட்சி காலத்தில் இந்து, வைணவம், பௌத்தம், சமண சமயங்களும் வளர்ச்சி பெற்றிருந்ததை அறிய முடிகிறது.


கோரக்கர் சித்தரின் வரலாறு:


கோரக்க சித்தர்:
மு.பரூரில் அன்னபூரணி உடனுரை காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 2 ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என கூறுகின்றனர்.

காசிவிஸ்வநாதர் ஆலய வளாகத்தில் இடப்புறத்தில் கோரக்கர் சித்தர் ஜிவ சமாதி அமைந்துள்ளது. தரிசினம் செய்யும் போது அமைதியும், ஆற்றலும், நம்பிக்கையும் கிடைத்து விடுகிறது. அவரை குருவாக ஏற்றுகொண்டவர்கள் பலர். அவரை நேரங் கிடைக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் வந்து தரிசித்து விட்டு செல்வார். அவரை போலவே யாருக்கும் தெரியால் பல வி.ஐ.பி க்கள் வந்து செல்கின்றார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கோரக்கர் சித்தரை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்.

எண்ணி வந்த காரியங்களை அவரிடம் தெரிவித்து விட்டு அவர் சமாதி முன்பு  எழுதியுள்ள
ௐ, பசு, பரபதி, பஷீராஜ, நிரதிசயசித்ரூப, ஞானமூர்தேய, தீர்க்க நேத்ராய, கணகண் கம்கங் கெங்லங் லிங், லங், லாலீலம், ஆவ், பாங்ஆம், ஊம், பார்கவ்விய ஜோதி மய, வரப்பிரசன்ன, பாததெரிஸ்ய கோரக்க சரணாயநமஸ்து
என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தால் அவர் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருள்வார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சித்தர்கள் 18 பேர். அதில் பெண்ணின் கருவில் இருந்து தோன்றாமல் குப்பையில் கிடந்த சாம்பல் கலந்த திருநீரில் கோரை புற்களில் இருந்து தோன்றியவ-ர் என்பதால் கோரக்கர் என அழைக்கப்பட்டார். வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கோரக்கர். டெல்லி அருகே உள்ள கோரக்பூரைச்சேர்ந்த கோரக்க சித்தர் தமிழ்நாட்டில் சதுரகிரியை அடைந்து போகரை தோழராக கொண்டவர். Êசட்டை முனி கோரக்கருக்கு நெருக்கமானவர்கள்.

முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்த போது தேவி கண் அயர்ந்த போது மீன் குஞ்சி ஒன்று அதை கேட்டு மீன் மனித வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் என பெயரிட்டு ஞானத்தை அருள்புரிய அனுப்பி வைத்தார்.

அப்போது மச்சேந்திரர் டெல்லி அருகே உள்ள  கோரக்பூர் என்ற இடத்திற்கு சென்று ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்டார். அப்போது அந்த பிச்சை போட்ட பெண் மகப்பேறு இல்லாமல் வருந்துவதை கேட்டார். மச்சேந்திரர் அந்த பெண்ணிடம் சிறிது திருநீர் கொடுத்து அதனை நீ உட்கொண்டால் மகப்பேறு அடைவாய் என்றார். அவள் திருநீர் பெற்றதை அறிந்த அக்கம் பக்கத்து பெண்கள் அது போலியானது என கூறவே அந்த திருநீரை அந்த பெண் அடுப்பில் போட்டு விட்டார். பின்பு அடுப்பு சாம்பலுடன் சேர்த்து குப்பையில் போட்டு விட்டாள். 10 வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு வந்த மச்சேந்திரர் அந்த பெண்ணை அழைத்து உன் மகனை கூப்பிடு என்றார். அப்போது அந்த பெண் பக்கத்து வீட்டு பெண் பேச்சைக்கேட்டு அதை குப்பையில் போட்டுவிட்டதாக கூறிவிட்டார். அந்த இடத்திற்கு சென்று பார்த்த மச்சேந்திரர் அந்த இடத்தில் கோரைப்புல் முளைத்திருப்பதை அறிந்து கோரக்கா என்று அழைத்தார். அப்போது மச்சேந்திரர் திருநீர் கொடுத்த 10 ஆண்டு கால பாலகனாக ஒரு சிறுவன் தோன்றினான். அவனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். பலருக்கு சீடராக இருந்து பிரிந்து மு.பரூர் வந்தடைந்தார், கோரக்கர்.

அங்கு அன்னப்பூரணி காசிவிஸ்வநாதர், தெற்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்பவர், துர்கையம்மன், நந்திகளையும் பிரதிஷ்டை செய்து சுமார் 500 வருடங்கள் பூஜைகள் செய்தும், தன்னை தேடி வரும் மக்களுக்கு மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார். மேலும் ஒரு நாள் தன்னுடைய சீடர்களிடம் தான் ஜீவ சமாதியடைவதாக கூறிவிட்டு தற்போது ஜீவ சமாதி உள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்தவர் திடீர் என அங்கிருந்து மாயமானார். அப்போது அவ்விடத்தில் தீபம் மட்டுமே காட்சி தந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருளியுள்ளார். இதனை பக்தர்கள் செல்போனில் படமாக எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது அவர் ஜீவ சமாதி  முன்பு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆன்மிகத்திலும், அரசர் ஆட்சி தலைமையிடமாகவும் முகாசப்பரூர் பல வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.