Monday, 9 October 2017

இரவின் மடியில்

இரவின் மடியினிலே
------------------------------
நிலா நிலா நீ ஓடி வா
காதலர்கள் அழைக்கின்றோம்,
குமரிக் கடலில் இருந்தே
எழுந்து வா,
முழு மதியாய் ஒளிர்கிறாய்,
இருளை நீக்கியே
நில்லாமல் ஓடி வா ,
கடற்கரை மணலிருக்கு,
கொஞ்சிப் பேசிட அலையிருக்கு,
வெப்பத்தை தணித்திட
இரவின் மடியினிலே
பூமியை சுற்றி வா.
_________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கிணற்றுத் தவளைகள்

கிணற்றுத் தவளைகள்
-----------------------------------
நாகரிக உலகிலே கோமாளிகளின் வேடங்கள் /
தாலியறுந்த மாதர்களுக்கு மறுவாழ்வு
தேவையன்று /
மூடர்கள் சாடினார்களே!/
மேல் சாதி கீழ் சாதி/
பிரிவு எல்லாம் ஒழிந்தும் போக/
சாதி அரசியல் செய்யும் மானிடா /
நீ திருந்துவதற்கு நேரத்தைப் பாரடா /
நல்ல நேரம் கெட்ட நேரம்/
நீயும் பார்த்ததாலே /
பல பெண்கள் முதிர் கன்னியாய் வாழுதடா /
உலகை ஆள்வதும் பெண்ணாயிருக்க /
உன்னைப் பெற்றெடுத்தவளும்
பெண்ணாயிருக்க /
பெண் குழந்தை வேண்டாம் என /
நீயும் கூறுவது ஏனடா /
விலங்குகள் கூட காதல் செய்கிறதே/
புனிதமான மனிதக் காதலை /
ஏற்க மறுப்பது ஏனடா /
கிணற்றுத் தவளையாய் வாழ்ந்தது போதும் /
உலகில் நன்றாய் வாழ்ந்திட வேண்டும்/
எழுந்து வாடா வெளியே நீயும் /
-----------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

வெட்கமென்ன வெண்ணிலவே

வெட்கமென்ன பெண்ணிலவே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பிரம்மன் வடித்த சிற்பமே,
வெட்கம் கொள்வது ஏனடியோ,
பெண் மனதை அறிவது கடினமோ,
உன் நாணத்தின் காரணம் என்னடியோ,
கண்ணாடி முன் நிற்கிறாய்
கண்ணாடி உற்று உற்று பார்க்கிறதே,
உன் அழகை நீ ரசிப்பதாய் நினைக்கிறாய்,
உந்தன் அழகை அதுவல்லவோ ரசித்திடுது,
பூக்களை நீயும் பறிக்கிறாய்
இஷ்டப்பட்டே மலர்கள்
தான் செய்த பாக்கியம் என்றே
உயிரையும்
உனக்கெனவே விடுகிறதே,
பூஞ்சோலையில் நீ புகுந்தாய்,
நாமே அழகென நினைத்த மலர்களோ
வெட்கி தலைக்குனியுதடி,
நீ வெட்கப்பட்டு சிரிப்பதை,
காண கண் கோடி வேண்டுமடி,
மலர்களை சுற்றிய வண்டுகளோ
தேனெடுக்க மறந்ததடி
உன் கூந்தலை சுற்றி வந்தே
உயிரையுமே விட்டதடி,
தவழும் என் தேவதையே
நான் மட்டும் உன்னை
பார்க்கையிலே
வெட்கமென்ன பெண்ணிலவே.
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

இல்லது வாராது உள்ளது போகாது

இல்லது வாராது, உள்ளது போகாது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வினை விதைத்தவன் வினைதனை அறுப்பான்,
பயிரிட்டவன் தானே மகசூலுக்கு அதிபதி
நீ செய்யாத பாவம்
உன்னைச் சேராது,
செய்திட்ட பாவங்கள்
உன்னை விட்டு நீங்காது
முற்பிறவியில் செய்த வினையாயினும்
இப்பிறவியில் அனுபவித்தே ஆக வேண்டும்,
தர்மமதனை நீ செய்தால்
உன் தலையினை காத்திடும்,
அதர்மத்தை செய்திட்டால்
உன் தலையினை கொய்துவிடும்,
வாழ்வது சில பல காலம்,
நல்லதையே செய்திடுவோம்
நன்றாக வாழ்ந்திடுவோம்,
கொலைதனை செய்யக் கூட
உனக்கு உரிமைக் கொடுத்தது யாரடா,
ஆண்டவன் படைத்த உயிரது,
உன் உயிரை நீயே
எடுக்கக் கூட அனுமதி இல்லை,
கொள்ளையாய் அடித்திட்டாய்
உறவுகள் எல்லாம் சுகமாய் வாழ
ஏழைகள் சாபமோ
உன்னை மட்டுமே கேட்குமே,
கற்பையெல்லாம் சூரையாடுபவனே
பாலியல் கொடுமை வேண்டாமே,
பெண் பாவம் உன்னை விடாது,
நீ நல்லவனாய் பிறந்திட்டாய்,
கெட்டவனாய் மாறிவிட்டால்
இல்லது வாராது, உள்ளது போகாது.
____________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

ஆலமரம் சாய்ந்தால்

ஆல மரம் சாய்ந்து போனால்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆல மரம் சாய்ந்து போனால்
காக்கை குருவிகள் தங்க இடமேது,
தாய் வீடாய் நினைத்தே வாழ்ந்த மரம்
இல்லாமல் போனால்
தாய் இல்லா பிள்ளைகள் ஆகிடுமே.

குடும்பத்திற்கு மூத்தவர் அப்பா
ஆலமரமாய் கிளை அமைத்தார்,
கோட்டை என்றே நினைத்து
வீட்டினை கட்டிட்டார்.
மனைவியை, பிள்ளைகளை காத்திட
உழைத்து உழைத்தே களைத்துப் போனார்,

குடும்பம் செழிப்பாய் வாழந்திடவே,
தன்னுயிரை கொடுத்தே உழைக்கின்றார்,
தாய் கூட ஒரு பிள்ளையை சுமக்க பத்து மாதம்,
தந்தையோ தன் குடும்பத்தை
ஆயுள் முழுவதும் சுமக்கின்றார்,
குடும்ப தலைவனாய் கடமையை செய்திடுவார்,
மனைவிக்கு நல்ல கணவனாய்,
பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய்,
நாட்டிற்கு நல்ல குடிமகனாய் விளங்கிடுவார்,
அவர் ஆல மரமாய் சாய்ந்திட்டால்,
உலகமே போற்றிடும்
அவர் குடும்பமே வீழ்ந்திடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

மார்கழி திங்கள்

மார்கழித் திங்கள்
--------------------------
மர்கழித் திங்கள் நீயல்லவா,
குளிர் கால முன் பனியே
இறைவனும் இறைவியும்
வாசம் செய்யும் மாதமிது,
உந்தன் நினைவுகள் மட்டும்
நான் குளிருக்கு அடக்கமாய்
உறங்கையிலே,
அனலாய் வந்து இதமாய் வீசியதடி,
தேன் சிந்தும் தூரிகை மலர் நீயடி
தெனெடுக்கும் வண்டாய்
நானும் காத்திருக்கேனடி,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கண்கள் சுமந்த கனவுகள்

கண்கள் சுமந்த கனவுகள்
_____________________________
நீயில்லையேல் நான் இல்லையே /
நீ அழுதாலும், நீ சிரித்தாலும் /
உறங்கினாலும், விழித்திருந்தாலும்/
அதுவாக நான் ஆகிடுவேன் /
பாதைதனில் முட்கள் இருந்தால்/
பாதத்தை என் கையில் தாங்கியே /
முட்களை என்னுள் வாங்குவேன் /
கண்ணீர் சிந்திடாமல் காத்திடுவேன் /
புன்னகை மாறாமல் வாழ்ந்திட /
என்றும் துணையிருப்பேன் /
மாது நீ இருக்க /
மது தேவையே இல்லை /
உறுதிக் கொடுத்து கரம் பிடித்தான் /
முப்பது நாள் மோகத்திலே /
அறுபது நாள் ஆசையிலே /
மூழ்கியே கிடந்திட்டான் /
கொடுத்த உறுதியை மீறிட்டான்/
கண்களில் கண்ணீரே சுமையாக /
காலம் முழுவதும்
கண்கள் சுமந்த கனவுகளை /
குழித்தோண்டி புதைத்திட்டான் /
---------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

ஒரு சொல் ஒரு முறையே

தேனாறு - 8
- - - - - - - - - - - - -
அழகு / தாவணி / திருவிழா / ரெட்டை சடை / கயல்விழி /தேவதை
----------------------------------------
#அழகு மயிலே
உன் நடை கூட நடனமடி,
மயில்கள் கூட்டமும்
ஏக்கமாய் பார்க்க,
குயில்கள் கூவலும் அடங்கிப்போக
#கயல்விழி பார்வையிலே
அழகு மலர்கள் அடங்கிப்போக
ஏக்கம் கொண்டேன் நானடி
#தாவணி அணியும் பைங்கிளியே
நீ தேரடி வீதியில் நடந்து வந்தால்
கூடிய கூட்டமோ
#திருவிழா என்பர்,
#உன் ரெட்டை சடை முன்னால்
கோழிகளின் கொண்டையும்
நாணம் கொண்டு நடனம் கூட ஆடிடுமே.
தேவர்களும் ரசித்திடும்
#அழகு தேவதை நீயடி!
____________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

காட்சியும் கானமும்

காட்சியும் கானமும்
_ _ _ _-_-_-_-_-_-_-_-_-_
கண்ணே,
கரிசல் காட்டுப் பூவே,
நித்தம் உன்னையே நினைக்கின்றேன்,
நிலவே
தேவர் நாட்டு மலரே
தினமும் உன்னையே பூஜிக்கின்றேன்,
மானே
மானமுள்ள ரோசாப் பூவே
உன்னை ரசிக்க வந்தேன்,
முட்களால் தீண்டினாய்,
இரத்தமாய் வடிகிறதே,
மயிலே
மலை நாட்டின் குறிஞ்சியே
தினசரி உன் நினைவே
கனவாய் ஆனதடி,
குயிலே
குபேரன் பெற்ற தங்க நிறத்தவளே,
ஒரு நாள் தவறவில்லை,
உன் பெயரை நான் மறக்கவில்லை,
நாணம் கொண்ட
திருஞான சுந்தரியே,
உன்னை மறந்தால்
நொடிப் பொழுதில் இறப்பேனடி,
கார்முகிலே
காட்டாற்று வெள்ளமாய்
உன்மீது காதல் வந்ததடி,
என் மீது காதல் கொள்வாயடி,
_________________----
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கண்கள்

கண்கள் எந்தன் மனதை திருடிய
களவாணியின் விழிகள்
உள்ளத்தைக் கவரும் கருவிழிகள்
கருவாச்சியின் காதல் ஊற்றுகள்.
___________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

சாபமாகும் வரங்கள்

சாபமாகும் வரங்கள்
-----------------------------
பெற்றவர்களை தெருவில் விட்டோம்,
கட்டியவளை மாளிகையில் வைத்தோம்,
பெற்ற வலிதனை நீயறிந்தால்
கட்டியவள் கட்டாந்தரையினிலே
பெற்றவள் பெருமைதனை கண்டிடுவாள்,
அற்ப சுகம் உனை மயக்கியதாலே,
சிற்றின்பத்திற்கு நீ அடிமையானதாலே
முதுமையை பழித்திட்டாய்,
பெற்ற தாய் தந்தையை ஒதுக்கிட்டாய்,
ஒரு நாள் உனக்கே
நீ வாங்கிய வரங்கள் எல்லாம் சாபமாகும்,
பெற்றோர் ஆசி உனக்குண்டு,
ஆனால் பாவம் உன்னை சேர்ந்திடுமே.
தெருவிலே நீயும் விட்டதாலே
கையேந்தி நிற்க மாட்டார்,
உழைத்தே வாழ்ந்திடுவார்,
இந்த கெதியை நீயும் அனுபவிப்பாய்,
உன் பிள்ளைகளால் வீதிக்கு வருவாய்
இது பெற்றவர் கொடுத்த வரமன்று
இறைவன் வகுத்த நியதியடா !
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

இரவின் மடியில்

இரவின் மடியினிலே
-----------------------------
உடலில் ஊனத்தை கொடுத்தவனே
மனதில் உறுதியை கொடுத்தான்,
ஊனம் அது உடலில் இல்லை
மற்றவர் பார்வைக்கே அது ஊனம்
உனக்கு அது ஓர் தன்னம்பிக்கை
முயற்சி ஒன்றையே துணையாய் கொண்டு
கையேந்தி வாழ்ந்ததில்லை,
அனுதாபமும் தேவையில்லை,
உழைத்தே வாழ்கின்றோம்
நிம்மதியாய் உறங்கினோம்
இரவின் மடியினிலே!
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

நான் இந்தியன்

நான் இந்தியன்
--------------------------
கனவு காண்போம் நாட்டை வளர்க்க /
நினைவில் கொள்வோம் இந்தியன் என்பதை /
ஒரு கோடி இளைஞர்கள் பட்டாளம் இருக்க /
விரைவில் உதயம் இந்திய வல்லரசு /
____________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

வேளாண்மை

வேளாண்மை
_______________
நாட்டின் முதுகெலும்பு ஒடிந்துப் போக /
பஞ்சம், பசி தலைவிரித்தாடுது, /
மழையும் இங்கே பொய்த்துப் போக/
கன்னடன் தண்ணீர் தர மறுக்கிறான்/
தெலுங்கன் அணைக்கட்ட முயல்கிறான் /
மலையாளி அணையுமே கட்டி விட்டான் /
தமிழன் தண்ணீர் இன்றி தவிக்கிறான்/
பட்டம், பட்டயம் பெறும் இளைஞனே/
வேளாண்மை பட்டம் வேண்டாமா /
விரும்பிப் படித்தே வேளாண்மை செய்திடு /
நிலங்கள் எல்லாம் மனையாய் போக /
மிச்சம் இருப்பதோ சில நிலங்களே/
நிலங்களை எல்லாம் காத்திடுவோம் /
பொழியும் மழையை சேமிப்போம் /
வேளாண்மை செய்தே வாழ்ந்திடுவோம் /
________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
நிருபர், தினத்தந்தி,
1 14, பாரதியார் தெரு,
பெரியார் நகர் வடக்கு
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம்
கைப்பேசி : 99435 49913

தீராத ஆசைகள்

தீராத ஆசைகள்
----------------------
மழலைக் குழந்தையை கொஞ்சிட வேண்டும்
அதனுடன் சேர்ந்தே தவழ்ந்திட வேண்டும்
உச்சி முகர்ந்து முத்தம்
கொடுத்திட வேண்டும்,

காதலன் கைப்பிடித்தே நடந்திட வேண்டும்,
இரவின் மடியினிலே
தோளோடு தோள் சாய்ந்தே
நிலாக் காயும் வெளிச்சத்திலே
காதல் மொழிகள் பேசிட வேண்டும்,

காதலியே மனைவியாய் வரவேண்டும்,
மழலைச் சத்தங்கள் ஒளிர வேண்டும்,
முத்த சத்தங்கள் சுடர் விட வேண்டும்.

முழுமையான மனிதன் ஆக வேண்டும்,
உலகம் எல்லாம் மதித்திடும் வகையிலே
பெயர்தனை வாங்கிட வேண்டும்,
ராஜ நடையில் நான் உலா வர வேண்டும்,

கவி பட்டங்கள் பல பெற வேண்டும்,
தமிழ் பாமாலை பல படைக்க வேண்டும்
தீராத ஆசைகள் தீர்ந்திட வேண்டும்
கடவுள் எனக்கு அருள் புரிய வேண்டும்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

படம்

படம் சொல்லும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
உண்ண உணவிருக்கு
சொந்த இடமில்லை
தெருவிலே அலைகிறோம்
தெருவோரம் உண்கின்றோம்,
தெருவிலே உறங்கினோம்,
கூடி நாங்கள்
உழைத்திட்டோம், மகிழ்ந்திட்டோம்,
விரைவில் உயர்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

பூ நாகம்

பூ நாகம்
____________
பூ நாகம் லிங்க நாகம்
சிவனே வாசம் செய்யும் மலரல்லவா,
குழந்தை மனம் என்றே
உன் மீது காதல் கொண்டேன்
அமிழ்தமாய் இனிப்பாய் என்று நம்பினேன்,
விஷமாய் கக்கினாய்
பார்வையிலே அமிழ்தத்தை வைத்தே
மனதிலே விஷத்தை கலந்தே
காதல் செய்தாய்,
நான் நடை பிணமானேன்
-----------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

மருத்தும் என்னும் மகத்தும்

1.மருத்துவம் என்னும் மகத்துவம்
--------------------------------
மருத்துவம் என்னும் மகத்துவம் /
நோய்களை நீக்கிடுமே /
நோய் வராமல் தடுத்திடுமே /
சித்தர்கள் கண்ட மருத்துவம் /
பல நோய்களை விரட்டி அடித்ததே!/

சித்தர் வைத்தியமே சித்த வைத்தியம்/
எல்லா மருத்துவத்தின் பிறப்பிடமே /
உணவே மருந்து என்றார் /
சரிவிகித உணவை பரிந்துரைத்தார் /

மூலிகைகள் பல கண்டெடுத்தார் /
மருத்துவக் குறிப்புகள் ஓலைதனில்
எழுதி விட்டார் /
என்ன அதிசயம்
பட்டமும் படிக்கவில்லை /
மருத்துவர் வேலைப் பார்க்கவில்லை /
கடவுளே கெதியென கிடந்தவர்/
ஆயிரம் நோய்களை கண்டிட்டார் /
மருத்துவத்தாலே ஒழித்துவிட்டார் /
ஆங்கில மருந்து பக்க விளைவாம் /
சித்த மருந்தோ பூரண ஆயுளைத் தந்திடுமே!
_ _ _ _ _ _
அன்புன்
இல.வீரபாண்டியன்
_______________________________________________
2.மகத்துவம் கொண்ட ஆசான்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மகத்துவம் கொண்ட ஆசான் /
எழுத்தை அறிவித்த இறைவன், /
தமிழை பயிற்றுவித்த தாய், /
அறிவைப் புகட்டிய தந்தை, /
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார் /
எல்லாம் அவனே ஆசான் என்றேன்./
ஊரான் பிள்ளை என நினைத்ததில்லை,/
ஒவ்வொரு பிள்ளையும்
தன் பிள்ளை என நினைத்திடுவான், /
அவனிடம் மட்டுமே சாதிகள் இல்லை, /
அதனாலே அவனை இறைவன் என்றேன், /
நல்வழிப்படுத்திடும் கலைஞன் அவன், /
எங்கே நம்மை மிஞ்சிடுவான் என்றே, /
எந்தக் கலைஞனும்
கலையை விரைவில் கற்பித்திட மாட்டான், /
ஆசான் என்ற கலைஞன் மட்டும், /
நீ உயரப் பறக்க உயர்த்திடுவான், /
நீ தாழ்ந்தால் அவனையே /
ஊர் கடுஞ்சொற்களால் இகழ்ந்திடுமே/
நீ உயர்ந்தால்
முதலில் பெருமைக் கொள்ளும் ஒரு ஜீவன் /
அவனே உன் ஆசான்/
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

பூமாலை ஊஞ்சலிலே

பூ மாலை ஊஞ்சலிலே
---------------------------------
பூ மாலையே
உன் ஊஞ்சலிலே
தேவதை ஒருவள்
ஆடிக் களித்தாலே,
அவள் ஆடியதாலே
பூ மாலை
என்ற தகுதியுடனே
உலா வருகிறாயே!
எனக்கு மனைவியானவளவள்
சரிக்கு சமமானவள்
--------------------=---
அன்புடன்
இல.வீரபாண்டியன்

காட்டுப் பூ பூத்திருக்கு

காட்டுப் பூ பூத்திருக்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - -
கு:காட்டுப் பூ பூத்திருக்கு
ஏலேலங் கிளியே,
தை மாசம் பிறந்துடிச்சி
ஏலேலங் கிளியே

ஆ : காட்டுப் பூ பூத்திருக்கு
கன்னமெல்லாம் உப்பியிருக்கு
ஆசை வைத்த அக்கா மகளே
சவுக்கியமா,

பெ: கருத்த மச்சானே
நான் சவுக்கியம் மச்சானே,
நானும் தானே ஆசை வச்சேனே
என் அத்த மகனே
தை மாசம் பிறந்துடுச்சே
நான் பூத்து பல நாளேச்சே
சொன்ன வார்த்தை என்ன ஆச்சு

ஆ: அவசரப்பட்டா ஆகுமா
நாளுங் கிழமை வேண்டாமா,
பெரியோர் பார்த்துப் பேசனும்
வெத்தலப் பாக்கு மாத்தனும்
டும் டும் கொட்டனும்
நான் பூத்த மலர பாக்கனும்
இரவு பூஜையில் வைத்தே பூஜிக்கனும்

பெ: அய்யோ அய்யோ மாமனே
நினச்சாலே இனிக்குது
தாவணிக் கூட நழுவதே
தேகமெல்லாம் ஊருதே
பூஜை எப்போ ஆரம்பம்
நானும் தயாராகனும்,

ஆ: முந்திக் கொள்ளும்
முந்தரிக்கொட்டை நீயடி,
எனக்கும் வேட்டி விலகுது,
தேகம் கூட சூடாகுது
பொறுத்திருக்க வேண்டுமடி

பெ: பூ மலர்ந்து நாளாச்சு
  நீ கவனிச்சு பல நாளாச்சு
பொறுத்திருந்தா ஆகாது,
பூ வாடி போகுமய்யா,
ஏக்கம் கொள்ள வைக்காதய்யா,

ஆ: ஏக்கம் கொள்ள வேண்டாமடி
கல்யாணம் கட்டிக்கலாம்,
பூஜையில பூஜிக்கலாம்,
மலைக் கோயில் பக்கம் வாடி
தாலிக் கூட கட்டிடுவேன்
சந்தோஷமா வாழ்ந்திடலாம்
காட்டுப் பூவே வாடிப்புள்ள

கு:காட்டுப் பூ பூத்திருக்கு
ஏலேலங் கிளியே,
தை மாசம் பிறந்துடிச்சி
ஏலேலங் கிளியே
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல. வீரபாண்டியன்



ஓடுகிற தண்ணியில

ஓடுகிற தண்ணியில ஒல ஒன்னு நான் அனுப்ப
அது சேர்ந்துச்சோ சேரலையோ
தெரியலையே நான் என்ன செய்வேன்,

ஒரு தலையா காதலிச்சேன்
ஒற்ற தலவலியால தவிக்கிறேன்
அவள் ஏறெடுத்து பார்க்கலையே
ஏளனமா சிரிக்கிறா
என் மனச புரியாம எரிக்கிறா

மனசோ போராடுது
தவியாய் தவிக்குது,
ஏக்கம் கொள்ள வைக்காதடி
மாமன் மனசு சுத்தமடி
காதல் கொள்ளடி கண்மணியே
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

விடியல்

விடியல்
- - - - - - - - -
தெருவில் ஆதரவற்று திரிபவர்களுக்கே
வேண்டும் விடியல்
ஒரு வேலை உண்ண
உணவில்லாதவர்களுக்கு
ஏற்றம் வேண்டும்
உடுத்த உடையில்லாதவர்களுக்கு
மாற்றம் வேண்டும்
மலத்தை  அள்ளும் அவலத்திற்கு
மறுமலர்ச்சி வேண்டும்,
ஒட்டு மொத்த இந்தியாவிற்கே
வேண்டும் விடியல்
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

காதலிக்க நேரமில்லை

காதலிக்க நேரமில்லை
- - - - - - - - - - - - - - - - - - - -
உழைத்தே வாழ வேண்டும்
கொடுப்பவர் எவருமில்லை,
இன்று வேலைப் பார்த்தால் தானே
வீட்டில் சமையல் ஆகிடுமே,
இருந்தும் கண்டேன் ஒரு தேவதையை
நானின்றி அவள் அல்ல
அவளின்றி நான் அல்ல,
அவள் கண்ணில் கண்ணீர் வருமுன்னே
என் மனமெல்லாம் வலித்திடுமே,
அவள் நினைத்தால்
நான் நினைக்க
இருப்பது வேறு வேறு இடம்
நினைவுகள் மட்டும் காதல் செய்ய
மனம் என்னவோ ஊஞ்சல் ஆட
பிரிவுகள் கூட சுமையாய் ஆக
இதயங்கள் துடிதுடிக்க
குடும்பச் சூழல் தடுக்கிறதே,
வறுமையில் குடும்பம் உழல்கிறதே,
குடும்பமா, காதலா
என்றெண்ணியே மனம் நோகிறதே,
சந்திக்க முடியவில்லை,
காதலிக்க நேரமில்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

ஆண்மையின் தாய்மை

ஆண்மையின் தாய்மை
- - - - - - - - - - - - - - - - - - - -
பெண் அவள் பத்து மாதமே சுமந்திடுவாள்
தன் பிள்ளையை ஈன்றெடுப்பாள்,
தாயும், சேயும் நலமாய் இருக்க
போராடிடும் குணம் உள்ளவனே ஆண் மகன்

ஆயுள் முழுவதும் குடும்பத்தை சுமப்பான்
வியர்வை ரத்தமாய் சிந்த உழைத்திடுவான்,
மனைவி, மக்கள் சுகமே
தன் சுகமாய் நினைத்திடுவான்,
அதனாலே அவனுக்கு
இறைவன் பிரசவ வலியை தந்ததில்லை.

தாய், தந்தையை வணங்கினான்,
மனைவியை போற்றினான்
தன் மக்களை காக்கவே உழைக்கின்றான்,
பிறந்தது முதல்
மண்ணிலே மட்குவது வரையிலே
தன் குடும்பத்தை  சுமையாய் சுமப்பவன்,
சுகமான சுமையாய் நினைத்திடுவான்,

தாயை கடவுளாய் போற்றும் மனம்
மனைவியை முதல் குழந்தையாய் பாவிக்கும் உள்ளம்
குழந்தைகளை
அன்பாய் உருகி கொஞ்சிடும் நெஞ்சம்
பெண்ணிடம் மட்டுமே கேட்டுப்பார்
தெரியும் ஆண்மையின் தாய்மை அப்பொழுது
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

இன்பத்திற்கான வழி

இன்பத்திற்கான வழி
- - - - - - - - - - - - - - - - - - -
துன்பம் அது அனைவருக்கும் வரும்
வருவதும் போவதும் அதன் வேலை
துன்பம் வந்தால் அனுபவம் கிடைக்கும்,
அனுபவித்தால் இன்பம் தானாய் கிடைக்கும்
- - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

நிலவுக்கு நீயே துணையானாள்

நிலவுக்கு நீயே துணையானால்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
நிலவுக்கு நீயே துணையானால்
அந்த நிலவுக் கூட ஒளிர்ந்திடுமே,
வானில் மின்னிடும்
நட்சத்திரக் கூட்டம் பல உண்டு
ஒளி வீசி மின்னிடும் நிலவோ ஒன்று
பூமியில் பெண்கள் பலருண்டு
இருந்தும் நிலவுக்கு ஒப்பானவள் நீ தானே,
மேகக் கூட்டங்கள் மறைத்தப் போதும்,
கருமேகங்கள் சூழ்ந்த போதும்
உன் அழகு போல
நிலவொளி பிரகாசிக்கும் அழகில்
நிலவை ரசிக்கின்றாய் என்றே அறிந்தேன்
அந்த நிலவாய் மாறிப்போனேன்,
தேவலோக தேவி நீ
பூலோக ராணி நீ
உன் அழகில் மயங்கியே,
நிலவாய்  மாறினேன்,
நிலாப்போல காய்கிறேன்,
துணைக்குத் தான் ஆளில்லை,
தூரத்தில் இருந்தே ரசிக்கிறாய்,
திகட்டாமல் பார்க்கிறாய்
நீயில்லாததால் உலகே இருண்டிட
நீ துணையானால் என் காதல் ஒளிருமடி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

விழியே கதை எழுது

விழியே கதை எழுது
- - - - - - - - - - - - - - - - - - - - - -
கண்கள் இருந்தால் உலகை பார்க்கலாம்,
காதுகள் இருந்தால் மழலைச்சொல் கூட கேட்கலாம்,
விழிகள் தானே கதைகளை எழுதத் துண்டும்
ஐம்புலன்களையும் தட்டியெழுப்பும் விழியே!
அவளின் விழியினால் கவர்ந்தேன்,
கவிதைக்கூட எழுதினேன்'
செவ்விதழ் சிவக்கும் சிங்காரியே,
உன்நடை அழகு அளக்கும்,
என்விழியினில் கவிதாயி நீயே.
சேற்றில் பூத்த செந்தாமரை நீ
குப்பையில் தோன்றிய காளான் நான்
அவ்வளவே நம் சாதியுமே!
யார்விழி பட்டதோ
விதி கூட விளையாடி விட்டது.
பிறப்பும் இறப்பும் இயற்கை
உன் விழியும் என் விழியும் சந்தித்த வேளை
என்கைகள் விளையாடியது
உன்னை வர்ணிக்க - இது செயற்கை.
சாதியபிரிவுகள் நம்மை பிரிக்கலாம்
எதுகையும் மோனையும் போல!
விழிகள் எழுதிய கதையினால்,
மனம் இரண்டால் ஒன்றுபட்டோம்
சந்தியும் சாரியை போல
வாழ்ந்திடுவோம், வீறு கொண்டு
எழுந்திடுவோம்,
புதுவழியில் விழிகளாய்
இணைந்திடுவோம்.
            அன்புடன்
      இல.வீரபாண்டியன்

அம்மா

அம்மா
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அம்மா என்னைப் பெற்ற தெய்வம் /
அவள் இல்லாமல் எந்த உயிருமில்லை/
அன்னையின் பாசமே உலகின் நேசம்/
அறிவை ஊட்டி வளர்க்கும் தாய்மை/

அன்பின்  அ-எழுத்தின் அடையாளமவள்/
அடைக் காக்கும் கோழியாய் காப்பவள், /
அற்புதம் என்ற சொல்லுக்கு சொந்தமவள் /
அழுகும் குழந்தையின் அர்த்தம் புரிந்தவள் /
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கையால அரைச்ச மணம் போகலையே

கையால அரைச்ச மணம் போகலையே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கையால அரைச்ச மணம் போகலையே
என் ஆத்தா வச்ச மீன் குழம்பு
வாசம் வீட்ட விட்டு போகலையே
அம்மிக்கல்லு சத்தம்
இரண்டு தெருவ தாண்டிக் கேட்கும்,
மிளகு, சீரகம் வாசம்
நான்கு தெருவ தாண்டித் தூக்கும்,

பருவ சிட்டுக்களோ
எட்டி வந்து பார்க்கும்
எனக்கோ நாணமோ எட்டிப் பார்க்கும்
ஆத்தா அம்மிக் கல்லுல வச்சி அரைச்சா
போகாத சோறும் உள்ளே போகும்
நோகாத நோயும் வெளியே போகும்,
பசியெல்லாம் நல்லா எடுக்கும்.

அய்யோ அம்மிக்கல்ல காணலையே
அம்மி சத்தமும் கேட்கலையே
ட்ரு ட்ரு சத்தம்
திடீர் திடீர்னு கேட்கும்
என்னவென்று பார்த்தால்
வீட்டில் மின் சாதனம் சுத்தும்,

ஒரு ருசியும் இல்லையே
அட மணம் கூட வரவில்லையே
மீன் குழம்பு வச்சிப்புட்டா மனைவி
உப்பில்ல சப்பில்ல கிழவி
அம்மிக்கல்லு போல வருமா
அங்கே நீ கையால அரைச்ச
மணம் போல வருமா,
வயிறும் அப்போ நிறையுமா.
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கல்யாண கலாட்டா

கல்யாண கலாட்டா
- - - - - - - - - - - - - - - - - - - -
பொண்ணுப் பார்க்கப் போறோம்
நாங்க குடும்ப குத்து விளக்கப்
பார்க்க போறோம்
சாதகம் எல்லாம் பார்த்தாச்சு
பொருத்தம் எல்லாம் பொருந்திப்போச்சு,
கல்யாண தேதிய குறிச்சாச்சி
கல்யாண நாளும் வந்துடிச்சி

பொண்ணு வருது
பொண்ணு வருது
வழிய விடுங்கடா
எட்டு முழம் சிவப்பு கம்பளத்த
விருச்சிப் போடுங்கடா,
மாப்பிள்ளை இருக்கான்
மாப்பிள்ளை இருக்கான்
தூக்கி வாங்கடா,
பொண்ண அழைச்சி வந்தே
நெடுநேரமாச்சு
மாப்பிள்ளையை இங்கே தூக்கி வாங்கடா

பொண்ணு ஊர்வலம் விட்டாச்சு
மேள தாளங்கள் முழங்கியாச்சு
நாதஸ்வரம் காதை அடைக்க
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு,
நாய் கண்ணு நரிக் கண்ணு
எல்லாக் கண்ணும் போக
திஷ்டி சுத்தி போடுங்கடா,

ஊரு உறவெல்லாம் வந்தாச்சி,
அரிசியை வடிச்சிப் போடுங்கடா
கிடா ஒன்ன வெட்டி
விருந்து வைங்கடா,
மனம் நிறைவா சாப்பிட்டே
மனம் மகிழ்ந்தே வாழ்த்தனும்,
மணமக்கள் நீடோடி வாழனும்,
பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழனும்,

ஏ புள்ள கருப்பாயி
நம்ம ஓடிப் போயி கல்யாணம்
கட்டிக்கிட்டோம்,
கல்யாணத்த பார்த்தியா,
பொண்ணு வெட்கத்த பார்த்தியா,
மாப்பிள்ளைக்கு வேட்டிக் கட்ட தெரியல,
தாலிக் கட்டுவத பார்த்தியா,

அட கல்யாணம் முடிஞ்சுப் போச்சு,
சம்பந்தம் கலந்தாச்சு,
புது உறவுகள் பிறந்தாச்சு,
வெத்தலப்பாக்கு போட்டாச்சு,
இரவு இப்போ நெருங்கிடுச்சி,
சாந்தி முகுர்த்தம் வந்தாச்சு,
பொண்ணு முகத்துல வெட்கமடி
மாப்பிள்ளை மனசுல ஏக்கமடி,
ரெண்டும் உள்ளேப் போச்சுடி
அட எல்லாம் முடிந்துப் போச்சுதடி
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்