விடலைப் பருவம்
___________________
ஓங்கி உயர்ந்த ஆலமரம் ஒன்று,
அதில் விழுதுகள் பல உண்டு,
அதன் அருகே,
சலசல வென ஓடும் ஓடையும் ஒன்றுண்டு,
விடலைகள் நாங்கள் -
விழுதுகளைப் பிடித்தப்படி,
ஆடி ஓடையில் குதித்த அந்த
காலம் திரும்புமா?
பள்ளிச் செல்லும் பாதையில்
இலந்தை மரத்தின் மீதேறி
பழமும் பறித்து உண்டோமே!
பள்ளி விட்டு வந்ததுமே,
கொய்யாப் பழமும் உண்டோமே!
அய்யர் வீட்டு ஊறுகாயும்,
செட்டியார் வீட்டு சவ்வரிசியும்,
உலருமே திண்ணையிலே,
குரங்காய் நாங்கள் மாறியே
அனைத்தையும் அங்கு உண்டோமே!
அந்த விடலை பருவம் மீண்டும்,
ஓடி ஆட திரும்புமா?
பாடமும் நாங்கள் படித்திட்டோம்!
பால பாடத்தையும் கற்றுவிட்டோம்!
கூடி நாங்கள் விளையாடிய
காலம் அது திரும்புமா?
கடலில் மூழ்கி முத்தெடுத்தோம்,
ஏரியில் மூழ்கி மீன் பிடித்தோம்,
ஒடையில் நாங்கள் தூண்டில் போட்டோம்,
வயலில் நண்டுக் கூட பிடித்தோமே!
காட்டில் எலியும் பிடித்துமே,
சுட்டு உண்ட காலம் அது,
நாங்கள் போட்ட வலையினிலே,
கொக்கும் காடையும் சிக்கியதே,
வீட்டில் திருடிய சமையல் பொருட்களால்,
கூட்டாஞ்சோறு உண்டோமே,
அந்த காலம் மீண்டும் வேண்டுமே,
இனி மீண்டும் திரும்புமா?
அன்று குளத்தில் மூழ்கி எழுந்தோமே,
இன்று கணினியில் மூழ்கி கிடக்கின்றோம்,
அன்று ஓடி ஆடி பயின்ற நாம்,
இன்று இணையத்தில்
விடலையை தொலைக்கின்றோம்,
இந்த கால விடலைகளெல்லாம்.
தாத்தா பாட்டியை கண்டதில்லை,
கதையும், பாட்டும் கேட்டதில்லை,
அந்த கால விடலைகள் நாங்கள்,
தாத்தா பாட்டி வளர்ப்பினிலே,
அறிவையும் தானாய் வளர்த்தோமே!
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment