Friday, 15 January 2021

மும்பை தாதா

 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார்.மும்பை தாராவி அருகே வசித்து வந்த இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தொடர்ந்து 6 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைத்து கவரிங் நகைகள் மற்றும் பொருட்கள் விற்றுவந்தார், நாளடைவில் அதே தொழிலைச் சொந்தமாகச் செய்யத் தொடங்கினர்.அந்த நேரத்தில் அப்பகுதியில் ரௌடிகள் பலர் மாமூல் கேட்டு அங்குள்ள கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதேபோன்று இவர் சம்பாதிக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கும் செயலில் அந்த ரௌடிகள் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பணம் கேட்டு மிரட்டும் ரௌடிகளை தாக்கியுள்ளார். அதிலிருந்து இந்த ரௌடிகளால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்கிறது.

இதனால் பொது மக்கள், வியாபாரிகளுக்காக ரௌடிகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்ய தொடங்குகிறார். நாளடைவில் இவரது நட்பு வட்டாரம் பெரிதாகவே, அப்பகுதியில் வசிக்கும் வியாபாரிகள் மற்றும் மக்களின் நலனுக்காக அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து அதையே வேலையாக செய்ய ஆரம்பித்தார்.இதனால் அப்பகுதியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டு வந்த இவர் மீது, மும்பை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வந்தன.நாளடைவில் ஒரு கொலை வழக்கில் கைதானார். 1988ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் இவருக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியதால், மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் பிறகு நாசிக் மத்திய சிறை, கோல்ஹாபூர் மத்திய சிறை, ரத்னகிரி சிறப்பு சிறை, புணே மத்திய சிறை என மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் கண்ணதாசன் அடைக்கப்பட்டிருந்தார்."குறிப்பாக, சிறையில் நான் அடங்காத காரணத்தினால் என்னை மகாராஷ்டிரா மாநிலத்தில், அடங்காத கைதிகளைக் கட்டுப்படுத்தும் சிறைச்சாலையாக இருந்த ரத்னகிரி சிறப்பு சிறைச்சாலைக்கு மாற்றினர்.நான் சரியாக ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தினால், அப்போது என்னைப் போன்றவர்களைக் கட்டுப்படுத்த சிறையில் கடுமையாக தாக்குவார்கள்.

அந்த காலகட்டத்தில், டெல்லி திஹார் சிறைச்சாலையின் சிறைத்துறை தலைமை இயக்குநராக கிரண்பேடி இருந்தார். அப்போது அவர் திஹார் சிறைவாசிகளுக்கு யோகா, தியானம் போன்றவற்றைக் கைதிகளின் நலன் கருதி பயிற்சி கொடுக்கும் முயற்சியைச் செய்யத் தொடங்கினார்.அந்த செய்தி நாடு முழுவதும் உள்ள செய்தி நாளேடுகள் மூலம் வெளியே தெரியவந்தது. அதன் பிறகு வந்த நாட்களில், நான் இருந்த ரத்னகிரி சிறப்புச் சிறையிலும் கைதிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.அதையடுத்து என் நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கொஞ்சம் மனம் திருந்திய காரணத்தினால், ரத்னகிரி சிறையிலிருந்து புனே மத்திய சிறைக்கு மாற்றினர். இப்படியே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளைக் கடந்து விட்டேன்.இதனிடையே, இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேறு மாநிலத்தைச் சேர்த்த சிறைவாசிகள், தாய் சிறை என்று சொல்லப்படும் சொந்த மாநில சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி, 10 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்த என்னை, தமிழகத்தில் உள்ள கடலூர் மத்திய சிறைக்கு மாற்றினர்," என்கிறார் கண்ணதாசன்.இதையடுத்து கண்ணதாசன் கடலூர் சிறையில் கற்றுத் தரும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். இதனால் சிறைத்துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்ற இவர், புதிய கைதிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்பெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். பிறகு அவருக்கு கடலூர் சிறையில் குற்றக் காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.

"இப்படியே கடலூர் சிறையில் 11 ஆண்டுகள் சென்ற பிறகு, தன்னை விடுதலைக்குப் பரிந்துரைக்க அப்போதைய மாவட்ட ஆட்சியர், சிறைத்துறைத் தலைவர், சிறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாளன்று எனக்கு விடுதலையென்று அறிவிப்பு வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உட்பட 21 ஆண்டுகள் வெளி உலகம் பார்க்காமல் தொடர்ந்து சிறையிலேயே இருந்தேன். இதையடுத்து எனது விடுதலைக்குக் குறித்து கேள்விப்படும் போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் மும்பை சிறையில் அடைக்கப்பட்ட போது, நான் உயிருடன் இல்லை என்று நினைத்து கவலையிலேயே எனது பெற்றோர் உயிரிழந்து விட்டனர். நான் உட்பட என்னுடன் பிறந்த 13 சகோதர, சகோதரிகள் என்னைக் கண்டு கொள்ளவும் இல்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி வெளியே சென்று வாழ்வது என்று தடுமாற்றமானேன்," என்று வேதனையுடன் கண்ணதாசன் தெரிவித்தார்.

"பின்னர் கடலூர் சிறையிலிருந்து விடுதலையானதும் எனது உடன் பிறந்தவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று எண்ணி தனியாக வாழத் தொடங்கினேன். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்யத் தொடங்கியதும், செருப்பு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.பிறகு கம்பளி ஆடைகள் விற்கத் தொடங்கினேன். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையில் செய்யும் வியாபாரங்கள் கை கொடுக்கவில்லை. நானும் மனம் தளராமல் தொடர்ந்து பல வேலைகளை நேர்மையாகச் செய்து வந்தேன். அதன் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளர் வேலை கிடைத்தது.இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கையில், குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. அந்த நேரத்தில் நான் திருமணத்திற்குப் பெண் தேடியபொழுது, கொலை குற்றம் செய்து 21 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை பெற்ற எனக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பயந்து யாரும் முன்வரவில்லை.அதன் பிறகு சமயபுரத்தில் திருமணமாகி கணவரை இழந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணை அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இன்று வரை இருவரும் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறோம்," என்கிறார் கண்ணதாசன்.

திருமணத்திற்குப் பிறகு கண்ணதாசன் அவரது முன்னோர்கள் செய்து வந்த மூலிகை டீ தொழிலைக் கையில் எடுத்தார். டீ, சுக்கு காப்பி, மிளகு பால், பாதம் பால், தூதுவளை, ஆவாரம்பூ, முடக்கத்தான் மூலிகை சூப்பு மற்றும் டீ வகைகளைத் தயாரிக்கும் அனுபவம் கண்ணதாசனுக்கு இருந்ததால், அதைத் தனது மனைவி சங்கீதாவிற்குக் கற்றுக்கொடுத்தார்.

தற்போது இவரது மனைவி தயார் செய்து கொடுக்கும் இந்த மூலிகை டீ அனைத்தையும், விருத்தாசலம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள், ஆட்டோ, கார், பேருந்து நிலையங்கள் எனத் தினமும் காலை மற்றும் பிற்பகல் இரு வேளைகளில் விற்பனை செய்து வருகிறார்.எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் எந்த கஷ்டங்களும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கண்ணதாசனின் மனைவி சங்கீதா கண்ணதாசன் கூறுகிறார்."எனது கணவர் வியாபாரம் மூலம் தினம் சம்பாதிக்கும் பணத்தில், ரூபாய் 200க்கு வாழைப்பழங்கள் வாங்கி சென்று அருகே இருக்கும் குரங்குகளுக்குக் கொடுப்பார். இதுபோன்று வெளியிலும், வீட்டிலும் இருக்கும் பிராணிகளுக்கு உணவளித்துப் பராமரிப்பது எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்ற மனக் குறை நீங்குகிறது," என்கிறார் சங்கீதா கண்ணதாசன்.எனது சிறை வாழ்க்கை மிக கடுமையாக இருந்தது, அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன். தற்போது இப்படி ஒரு நல்ல நிலையில் நான் இருப்பது எனக்குக் கிடைத்த மறுபிறவியாகக் கருதுகிறேன் என்கிறார் கண்ணதாசன்."எனினும் இன்று வரை எனது மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது. நான் செய்த குற்றச் சம்பவங்களை நினைக்கும்போது, அது ஒரு ஆராத வடுவாக எனக்குள் இருக்கிறது. நான் என்ன தான் மனம் திருந்தி நல்லது செய்தாலும் என்னைப் பார்ப்பவர்கள் என்னைத் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். நிறைய பாவங்கள் செய்து, இப்படி வாழ்ந்தால் எல்லாம் சரியாகி விடுமா என்று பலர் என்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கின்றனர். அந்த நேரங்களில் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும்," என கவலையுடன் கூறுகிறார் அவர்.

"எனது வாழ்க்கை இப்போது இருக்கக்கூடிய அனைத்து இளைய சமூகத்திற்கும் பாடமாக இருக்க வேண்டும். குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர் பலரும் பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றனர்.இந்த நேரத்தில் என்னைப் போன்று குற்றம் செய்துவிட்டால், அவர்களுடைய நிலை என்ன ஆகும் என்று கண்ணெதிரே பார்த்திருக்கிறேன். சிறு வயதில் எதையும் யோசித்துப் பார்க்காமல் தவறு செய்து விடுவோம். ஆனால் சிறைக்குச் சென்ற பிறகு அந்த நான்கு சுவரிற்குள் என்ன நடந்தாலும் வெளி உலகிற்குத் தெரியாது.ஆகவே அனைத்து இளைஞர்களும் குடும்ப சூழ்நிலையறிந்து எந்த தவறான செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர் சொற்படி நடக்கவேண்டும் என இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள், செய்யும் வேலையைப் பெருமையாகப் பாருங்கள்," என்று கூறுகிறார் மூலிகை டீ வியாபாரி கண்ணதாசன்.

Wednesday, 6 January 2021

நிவாரணம் கிடைக்குமா?

நிவாரணம் கிடைக்குமா?

தூக்கத்தை துளைத்து
துன்பத்தை துறந்து
தூவானத்தை நம்பி
துதித்து பயிரிட்டு என்ன பயன்!

பத்து ரூபா செலவு செஞ்சி
எட்டு ரூபா கிடைச்சாக் கூட
கணக்கு பார்க்காம உழைச்சி
கிடைச்ச பயன் 
அரை வயிறாவது நிரம்பும்.

புரவி கிரவின்னு வந்து
சூறாவளி முகாந்திரம் போட்டாலும்
நிரம்பிய அரை வயிறும் காணாம போகும்,

தோல் சுருங்கிய நெஞ்சங்கள்
பயிரை கையில் ஏந்தி
விவசாய களத்தில் நின்றனர்.
காப்பீடு செய்தும் புண்ணியமில்லை,
நிவாரணமாவது கொடுங்களேன்!
வாடிய பயிர்களுடன்
போராட்ட களத்தையும் காண்கின்றனர்.

சாலை விழிப்புணர்வு

சாலை பயணத்தில்
நம் சகலமும் பயணிக்கிறது,
நொடியில் இடி விழுந்தால்
பயணம் பங்கமாகும்!

வாகனத்தில் புறப்படும் போது
இல்லத்தரசியின் நெஞ்சம் படபடக்கும்,
வீடு வந்து சேரும் வரை
பிபி எகிறி, ஹார்ட் அட்டாக் வரை
வந்து போகும்.

ஹெல்மெட் அணியா மண்டையை
எமனின் பாசக் கயிறு எளிதில் ஈர்க்கும்,
சீட் பெல்ட் போடாத உடலை
சித்ரகுப்தனின் டைரி கூறு  போட்டு விற்கும்.

சூதும் வாதும் வாழ்க்கைக்கு உதவும்
செல்போன் பேசி வாகனம் ஓட்டினால்
பிரச்சினைகள் உன்னை கவ்வும்.

நீ சிக்னல் கொடுத்தால் காதலி
கவனிக்கும் போது இனிக்கும்.
சிக்னலே உனக்கு சிக்னல் கொடுத்தால்,
சிக்கலில் வாழ்க்கை கசக்கும்.

காப்பீடு உன்னை காக்கும்,
உன் குடும்பத்தையும் காக்கும்,
உன் வாகனத்தை காக்கும்,
எதிரியையும் காக்கும்.

மோட்டாரில் பயணம்,
எப்பொழுதும் எதுவும் நடக்கும்,
கவனம் சிதறினால் மரணமும் நடக்கும்,
அப்பாவியின் குடும்பமும் சிதையும்.

விபத்து என்பது ஒரு சாபமல்ல,
உனக்கு நீயே தரும் பாவம்,
உமது கவன சிதறலால் நடக்கும் கொடுமை,
உன் மடமைக்கு கிடைத்த பரிசு.

ஒரு கையில் ஸ்டியரிங்கு,
மற்றொரு கையில் செல்போனு,
உனக்கு இருக்கிறது விரைவில் ஆப்பு,
எதிரே நிற்கிறது எமனின் ஜீப்பு.

வீதியில் கவனத்துடன் போனால் உல்லாசம்,
போதையில் போனால் கைலாசம்,
கூலா போனால் குடும்பம் உன் வசம்,
டென்ஷனில் போனால் எல்லாம் நாசம்.

சாலை விதிகள் உன்னை வாழ வைக்கும்,
நீ மீறி விட்டால் சவக் குழிக்குள் தள்ளும்.
சட்டமும் திட்டமும் உன்னை காக்கும்,
மீறும் போது உன்னை வீழ்த்தும்.

குடி உனக்கு மகிழ்ச்சியை  கொடுக்கலாம்,
போதையில் வாகனம் ஓட்டினால்,
உன் சமுகத்தையே குடிக்கலாம்,

விபத்தில் உயிர் போனால்
குடும்பம் நிர்கதியாகும்.
உயிர் தப்பினால்
குடும்பம் பின்னோக்கி சுழலும்.

நன்றாக இருந்தால்
நாலு காசும் வேண்டாம்,
பத்தில் ஒன்றாக வாழலாம்.
விபத்தில் சிக்கினால்
நாலு காசும் நாசமாகும்,
நலமும் விரையமாகும்.







இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டே வா!
2020 இறக்கும் போது
என் தீவினைகள் அழிகின்றன!
2021 பிறக்கும் போது என் நல்விணைகள்
பிறக்கின்றதாகவே நம்புகின்றேன்!

எனது ராசியோ என்னவோ
ஒவ்வொரு வருடமும் புதிய நட்புகள்
பிறக்கின்றன,
சில வருடங்களில் நட்பில் பிளவுகள் நடக்கின்றன,

அதனால் வெறுப்புகளை
உமிழ்ந்ததில்லை நான்,
அப்படி உமிழ்ந்தால் நாம் அன்னாந்து படுத்துக் கொண்டு
உமிழ்ந்தால் நம்மீதே எச்சில் படுமல்லவா,
அதனால் கட்டுப்படுத்தி கொள்கிறேன்,

ஆனால் என் மீது உண்மையான நட்பு பாசம்
கொண்டவர்களை
என் புரிதல் இன்மையால்
இழந்திருக்கிறேன்,
என்னை நேசித்தவர்கள்
என்னை மன்னிக்கவும்.

சில உறவுகள் நம்மை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்,
காரியம் ஆக
காலை பிடிக்கவும் அவர்கள்
மறுத்ததில்லை,
காரியம் ஆனதும் கழட்டி விடவும்
அவர்கள் தயங்கியதில்லை,
(புரிந்தவர்களுக்கு புரியும்)

தயவு செய்து உறவை கூறி, சமுகத்தை
கூறி ஆதாயம் தேட முயற்ச்சிக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் நடந்தால் தான்
மற்றவர்களாலும் நடக்க முடியும்.

ஒரு சிலருக்கு நான் ஆதரவாக
 நடப்பதாக (நான் தந்தை ஸ்தானத்தில் நினைக்கும்) சில விஷமிகள் பிரச்சாரம் செய்யலாம்.
எனக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியே நான் செயல்படுகிறேன்.
2021 லும் அப்படியேத் தான் நடப்பேன்.
அதில் விதிகள் மாறினால்
நானும் மாறித்தானே ஆக வேண்டும்.

அன்பிற்கும், பாசத்திற்கும், உறவுக்கும்
பாலமாக இருக்க நினைத்ததன் பலன்
இன்று நான்
சிலரின் சூழ்ச்சி, தந்திரத்தால்
பலருக்கு வேண்டாதவனாகியிருக்கலாம்.
என்னை புறம் பேசி மகிழ்ந்திருக்கலாம், .
அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை,
நான் என்றும் பொதுவானவனே!

செய்தியாளரான பின்பு
பல நல்ல உள்ளங்களை சந்தித்துள்ளேன்.
சில பல நட்புகளை சம்பாதித்தேன்,

சில சிக்கல்கள், பல புகழ்ச்சிகள்,
பல இகழ்ச்சிகள்,
சில பல மாறுதல்கள்,
சிலரை சமாளிக்க வேண்டி
என் இயல்பு தன்மையை இழந்தும்
பலனில்லை,

சிலர் சமுக உணர்வுடன் செயல்படு என்றனர்,
நான் செயல்பட்டும் பலனில்லை,
ஆனால் அவ்வாறு கூறியவர்கள்
மாறி விடுகின்றனர்.

சிலர் நண்பர்களை கைவிடாதே என்றனர்,
அவர்களை தலையில் தூக்கி வைத்த பலன்,
அந்த நண்பர்களே இன்னும் சமுகத்தை
காட்டி நட்பை இகழ்வடைய செய்கின்றனர்!

ஒரு சிலரை உயிராக நினைத்து 
பழகியும் பலனில்லை,
காலாவதியாகிவிடுகின்றனர்.
அதனால் யாரிடமும் 
நெருங்கி பழக ஒரு பயம்!

கடந்த 2019 ம்ஆண்டு கவிஞராய்
உதயமானேன்,
2020 ம் ஆண்டில்
எழுத்தாளராய் ஆக ஆசை,
ஏனோ நிறைவேறவில்லை.

ஒரு சிலரை பிடித்து போய்
சேவை புரிந்தும் பயனில்லை,
ஒரு நபர், நான் தான் உன்னை வளர்த்து விடுகின்றேன் என்கின்றார்.
( #யூரியா, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, மர்லி மாவு போட்டு வளர்த்தவர் #அவர்தான்)
இன்று அவர் வளர்ந்த உயரம்
மங்கி வருகிறது, 
தலைக்கணம் தலையை காணாமல் செய்யும்
பதவி வந்தால் பணிவும் உடன் வர வேண்டும்.
இல்லையேல் காணாமல் போக வேண்டும்.

ஒரு சிலரை நான் உயர்த்த வேண்டும்
என நினைத்தால்,
அவர்கள் மற்றொரு நபரை
வளர்க்க முற்படுகின்றனர்.


விவரம் தெரிந்த 30 வருடங்களில்
அனுபவங்கள் சில பல,
ஆனால் என்னுடன் பழுகும் நட்புகளை
மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை,,

ஒவ்வொரு நட்பும் ஒரு விதம்,
ஒரு நட்பு எனக்கு பிடித்தவருடன் மட்டுமே
பேச வேண்டும் என்கிறது,
மற்றொரு நட்பு எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசினால்
எனக்கு எதிராய் சதி செய்கிறது.

எனக்கு எதிராய்,
என்னை காலி செய்யும் நோக்குடன்
அவதூறு கடிதம் எழுதியவர்களோ,
இன்று நெருங்கி தான் பழகுகின்றனர்.
என்ன செய்ய,
நட்பை மதிக்க வேண்டி 
நடந்ததை மறந்து பழக வேண்டிய நிலை.

அனைவருக்கும் நல்லவனாக இருக்க விரும்பினேன்,
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாகவே
நடிப்பது!
இந்த வருடம் முதல்
எண் இயல்பு என்னவோ அதன்படி
நடிக்க போகிறேன்!

#வாழ்க்கையே_ஒரு_நாடக -மேடை_அதில்_நான்_ஒரு_கலைஞன்.

யாரோ கூறியது!

(பின் குறிப்பு : இது கவிதை இல்லீங்கோ, எனது மனக் குமுறல், உடனே வரிந்து கட்டிக்கிட்டு இது உரைநடையாக உள்ளது என மட்டும் பதிவை போட்ராதீங்க, ஏன்னா ஒரு பிரபல எழுத்தாளர் என்னையே பாலோ பன்றார்.)








விவசாயம் விளையாட்டல்ல

விவசாயம்
விளையாட்டு
அல்ல,
வினையாகும்,
விலையாகும்,
வில்லாகும்,
விபரமாகும்,
விகாரமாக்கும்,
விதியாக மட்டும்
விளையாடாதே!
விண்ணிற்கு
விலையாகிடுவாய்

பட்டியார்

#பட்டியார் (பட்டி.சு.செங்குட்டுவன்) நினைவாஞ்சலி நிகழ்ச்சி

கிருக்கல்களை கவிதை என்றார்,
இலக்கிய உலகிற்கு வரவேற்றார்,
தாய் பாலூட்டி வளர்த்தாள்,
பட்டியார் இலக்கியத்தை ஊட்டி வளர்த்தார்,

கவியுலகிற்கு
அறிமுகப்படுத்திய தாய் அவர்,
இதெல்லாம் கவிதையா? என்றே
எழுத்தாளர்கள்
முடக்கி வைத்தனர்,
இதுதான்யா கவிதை என
முளை விட வைத்தார்,
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் படைப்பாய்,
எழுதி கொண்டே இரு,
என ஆருடம் கூறினார்,

புலிகளின் காலம் படைத்தார்,
காட்டுப் பூனைகளிடம் சிறைப்பட்டார்,
திராவிடம் பேசினார்,
கருத்துக்கள் பதிவதில்,
தீயாய் வெகுண்டெழுந்தார்,
மனதில் பட்டதை சரவெடியாய் வெடித்தார்,
எழுத்துலகில் பசுமரத்தாணியாய் பதிந்தார்,

தமிழ் இலக்கிய உலகில்
உம்மை ஒதுக்கிடவும் முடியாது,
முக்கிய எழுத்தாளர்கள் சிகரத்தை அடைந்தாலும்
முக்காத எழுத்தாளராய் உம்மை நெஞ்சில்
சுமக்கின்றனர் பலர்,

வர வேண்டும், வர வேண்டும்,
இளைஞர்கள் முன் வரவேண்டும்,
விவசாயத்தை காக்க வேண்டும்,
இலக்கியம் படைக்க வேண்டும்,
கவி எழுதி குவிக்க வேண்டும்
இது தானய்யா உமது எண்ணம்,

நீவிர் போட்ட விதையாய் நாங்கள்,
உமது எண்ணத்தை நிறைவேற்றவே நாங்கள்,
உமக்கு எங்களின் அஞ்சலிகள்,
நீவிர் மறையவில்லை,
மணிமுக்தாறு இலக்கிய வட்டமாய்
நாங்கள் முளைத்துவிட்டோம்,

தழைத்தெழுந்து
கவிஞர்களை ஊக்கப்படுத்துவோம்,
வளர்த்தெடுப்போம், 
எங்களது உறுதியை, உமக்கு அஞ்சலியாய் மலர் தூவி காணிக்கையாக்குகிறோம்.
#இல #வீரபாண்டியன்

*கவிஞர் பட்டி சு.செங்குட்டுவனார் முதலாமாண்டு  நினைவேந்தல் கூட்டம்*

கவிஞர்  பட்டி சு.செங்குட்டுவன் அவர்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி கூட்டம்  (11-12-2020) விருத்தாசலம் பெரியார் நகர் சிவலட்சுமி அரங்கில் நடைபெற்றது. 

மணிமுத்தாறு இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பில்,  கவிஞர் இரத்தின.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் ஆ.மலர்தாசன், கவிஞர் சி.சுந்தரபாண்டியன், ஏ.கே.அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் சு.அகிலன் முன்னிலை வகித்தார். கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். 

எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தமிழக உழவர் முன்னணி நிர்வாகி க.முருகன், செநதமிழ் மரபுவழி வேளாண் நடுவம் கண்ணதாசன், 
பத்திரிகையாளர் ஆழி வீரமணி, கவிஞர் சிலம்புசெல்வி, கவிஞர்  பூவனூர் கோ.அரங்கநாதன், கவிஞர் இல.வீரபாண்டியன், ஆசியர் முருகன்குடி பழனிவேல், தமிழிளைஞர் கூட்டமைப்பு லலித்குமார், செய்தியாளர் பொன்.செல்வசுப்ரமணியன்  ஆகியோர் பட்டியாரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் நடத்துவது எனவும்,
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 
பட்டி சு.செங்குட்டுவனார்  பெயரில் நினைவு விருது வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 கவிஞர் இராம.சீனிவாசன் நன்றி கூறினார்.

Monday, 4 January 2021

பரிவு

உணவு வேண்டாம்
என்ற உடன்
முகம் மாறுகிறது அன்புக்கு!

என்ன சாப்பிட்டானோ,
என்னத்த சாப்பிட்டானோ என்ற
பரிவு அவளுக்கு!

Saturday, 2 January 2021

தீபாவளி அது ஒரு வலி

தீபாவளி அது ஒரு வலி
எப்பொழுது பட்டாசு கிடைக்கும் என
முதல் நாள் இரவு வரை காத்திருந்த வலி,
மற்றவர் புத்தாடையைக் கண்டு எங்கி,
தீபாவளி அன்று காலை எழுந்து பார்த்ததும்
பறந்திடும் வலி, 
பட்டாசை கண்டதும் மலர்ந்திடும் தீப ஒளி!
பல வருடங்கள் அனுபவ அலையில்,
இன்று தீபாவளி வந்தால்,
வந்தது தெரியாமல் பட்டாசு ஒளிகள் மறைந்தே போகிறது.

ஆட்டை அறுத்து கூறு போட்டு,
விற்கும் தாத்தாவிற்கு உதவியாக
கணக்கர் வேலை பார்க்க வேண்டும்,
இடையில் ஆயாவுக்கு கொத்தமல்லி, கருவேப்பிலை வாங்கி வந்து தர வேண்டும்.
ஆட்டுக்கறியை வாங்கி செல்லும்
சித்தப்பு, பெரிப்பா, மாமா, தாத்தா, அண்ணன் மார்களின் பின்னே சென்று பணத்தை வசுலிக்கும் வசூல் மேலாளர் வேலை பார்க்க வேண்டும்.

இடையில் மற்றவர் வெடிக்கும் வெடியை வெறிக்க பார்க்க வேண்டும்,
ஆயா தலைக்கு வைத்த எண்ணெய்யைய்
ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஆசையாய் புது சட்டையும், கைலியும் கட்டி கொண்டு, நமுந்து போகாமல்
அடுப்பனலில் வைத்த வெடியை எடுத்து
வெடிக்கும் போது,
ஏதோ அந்த நாள் இனிதே தொடங்கும்.

முதல் நாள் இரவில் தொடங்கி,
மறுநாள் இரவு முடிய,
எங்கே தீர்ந்துவிடுமே என்று,
மற்றவர் வெடிப்பதை வெறிக்க பார்க்க முடியாமல்,
சரவெடியை பிரித்து ஒன்றன் பின் ஒன்றாக வெடித்த காலங்களின் தழும்புகள் மட்டும் மறைய மறுக்கிறது.
டபுள் ஷாட், டிரிபிள் ஷாட், சவன் ஷாட்டை
கண்டறிந்ததே நாங்கள் தானே.
பின் எப்படி நினைவுகள் மறையும்.

வெடித்த வெடியின் தீப்பொறிகள்
புது சட்டையில் பட்டு ஓட்டை விழுந்து,
தீபாவளி ட்ரெஸ்சுக்கான அடையாளம் விழும்.
இடையில் கறி விற்ற காசில்
புத்துணர்வு பானம் அருந்திய
தாத்தாவும், ஆயாவும் போடும் சண்டையில
தீப்பொறிகளும், வார்த்தை பொறிகளும்
பட்டாசு ஒலியை தோற்கடிக்கும்.

 தீபாவளி வருடந்தோறும் வருகிறது.
அனுபவங்கள் மாறியது.
முற்காலம் தாத்தா, ஆயா, மாமாவுடன்,
சில காலம் தங்கச்சியுடன்,
தற்காலம் மனைவியுடன்,
வலிகள் மரித்துவிட்டது.
ஏனோ தழும்புகள் மறைய மறுக்கிறது.





வருக வருக வருகவே

வருக வருக வருகவே
என் தாய், தந்தையர் வருகவே
என்னை ஆசிர்வதிக்க வருகவே
என்னை வாழ்த்திடவே வருகவே

வருக வருக வருகவே
என் குருமார்கள் வருகவே,
என் ஆசான்களே வருகவே
வந்தனம் தந்தனம் தந்திடவே
வருக வருக வருகவே

வருக வருக வருகவே
நான் வணங்கும் தெய்வம் வருகவே,
நல் அருள் புரிய வருகவே,
சங்கடங்கள் தீர்க்க வருகவே,

வருக வருக வருகவே
என் உறவுகளும் வருகவே
என் நண்பர்களே வருகவே
நல்வாழ்த்து வழங்க வருகவே

வருக வருக வருகவே
என்னை ஆதரிக்கும்
என் குடும்ப உறவுகள் வருகவே,
உள்ளத்தை குளிர வைக்க வருகவே!

தோழர்களே தோழிகளே,
அண்ணன்களே தம்பிகளே,
உறவுக்கார உள்ளங்களே
வருக வருக வருகவே.

எங்கள் வீட்டு விழாவை
சிறப்பிக்க வருகவே,
நல் வாழ்த்து மழையை பொழிந்திட
வருக வருக வருகவே,
எங்கள் மனம் குளிர வாழ்த்திட
வருக வருக வருகவே!



இல்லறத்தின் அருமை

பல வருடங்கள் பட்டினி
கிடந்தவன் நான்,
சில வருடங்கள் மணவாழ்க்கையில்
விருமாண்டி ஆனேன்,
ஏனோ ஒரு சில நாட்களின்
தனிமை தான் படுத்துகிறது.
இல்லறத்தின் அருமை புரிகிறது,
அதனாலே வெறுமாண்டி ஆனேன்.

மனக் குமுறல்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டே வா!
2020 இறக்கும் போது
என் தீவினைகள் அழிகின்றன!
2021 பிறக்கும் போது என் நல்விணைகள்
பிறக்கின்றதாகவே நம்புகின்றேன்!

எனது ராசியோ என்னவோ
ஒவ்வொரு வருடமும் புதிய நட்புகள்
பிறக்கின்றன,
சில வருடங்களில் நட்பில் பிளவுகள் நடக்கின்றன,

அதனால் வெறுப்புகளை
உமிழ்ந்ததில்லை நான்,
அப்படி உமிழ்ந்தால் நாம் அன்னாந்து படுத்துக் கொண்டு
உமிழ்ந்தால் நம்மீதே எச்சில் படுமல்லவா,
அதனால் கட்டுப்படுத்தி கொள்கிறேன்,

ஆனால் என் மீது உண்மையான நட்பு பாசம்
கொண்டவர்களை
என் புரிதல் இன்மையால்
இழந்திருக்கிறேன்,
என்னை நேசித்தவர்கள்
என்னை மன்னிக்கவும்.

சில உறவுகள் நம்மை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்,
காரியம் ஆக
காலை பிடிக்கவும் அவர்கள்
மறுத்ததில்லை,
காரியம் ஆனதும் கழட்டி விடவும்
அவர்கள் தயங்கியதில்லை,
(புரிந்தவர்களுக்கு புரியும்)

தயவு செய்து உறவை கூறி, சமுகத்தை
கூறி ஆதாயம் தேட முயற்ச்சிக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் நடந்தால் தான்
மற்றவர்களாலும் நடக்க முடியும்.

ஒரு சிலருக்கு நான் ஆதரவாக
 நடப்பதாக (நான் தந்தை ஸ்தானத்தில் நினைக்கும்) சில விஷமிகள் பிரச்சாரம் செய்யலாம்.
எனக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியே நான் செயல்படுகிறேன்.
2021 லும் அப்படியேத் தான் நடப்பேன்.
அதில் விதிகள் மாறினால்
நானும் மாறித்தானே ஆக வேண்டும்.

அன்பிற்கும், பாசத்திற்கும், உறவுக்கும்
பாலமாக இருக்க நினைத்ததன் பலன்
இன்று நான்
சிலரின் சூழ்ச்சி, தந்திரத்தால்
பலருக்கு வேண்டாதவனாகியிருக்கலாம்.
என்னை புறம் பேசி மகிழ்ந்திருக்கலாம், .
அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை,
நான் என்றும் பொதுவானவனே!

செய்தியாளரான பின்பு
பல நல்ல உள்ளங்களை சந்தித்துள்ளேன்.
சில பல நட்புகளை சம்பாதித்தேன்,

சில சிக்கல்கள், பல புகழ்ச்சிகள்,
பல இகழ்ச்சிகள்,
சில பல மாறுதல்கள்,
சிலரை சமாளிக்க வேண்டி
என் இயல்பு தன்மையை இழந்தும்
பலனில்லை,

சிலர் சமுக உணர்வுடன் செயல்படு என்றனர்,
நான் செயல்பட்டும் பலனில்லை,
ஆனால் அவ்வாறு கூறியவர்கள்
மாறி விடுகின்றனர்.

சிலர் நண்பர்களை கைவிடாதே என்றனர்,
அவர்களை தலையில் தூக்கி வைத்த பலன்,
அந்த நண்பர்களே இன்னும் சமுகத்தை
காட்டி நட்பை இகழ்வடைய செய்கின்றனர்!

ஒரு சிலரை உயிராக நினைத்து 
பழகியும் பலனில்லை,
காலாவதியாகிவிடுகின்றனர்.
அதனால் யாரிடமும் 
நெருங்கி பழக ஒரு பயம்!

கடந்த 2019 ம்ஆண்டு கவிஞராய்
உதயமானேன்,
2020 ம் ஆண்டில்
எழுத்தாளராய் ஆக ஆசை,
ஏனோ நிறைவேறவில்லை.

ஒரு சிலரை பிடித்து போய்
சேவை புரிந்தும் பயனில்லை,
ஒரு நபர், நான் தான் உன்னை வளர்த்து விடுகின்றேன் என்கின்றார்.
( #யூரியா, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, மர்லி மாவு போட்டு வளர்த்தவர் #அவர்தான்)
இன்று அவர் வளர்ந்த உயரம்
மங்கி வருகிறது, 
தலைக்கணம் தலையை காணாமல் செய்யும்
பதவி வந்தால் பணிவும் உடன் வர வேண்டும்.
இல்லையேல் காணாமல் போக வேண்டும்.

ஒரு சிலரை நான் உயர்த்த வேண்டும்
என நினைத்தால்,
அவர்கள் மற்றொரு நபரை
வளர்க்க முற்படுகின்றனர்.


விவரம் தெரிந்த 30 வருடங்களில்
அனுபவங்கள் சில பல,
ஆனால் என்னுடன் பழுகும் நட்புகளை
மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை,,

ஒவ்வொரு நட்பும் ஒரு விதம்,
ஒரு நட்பு எனக்கு பிடித்தவருடன் மட்டுமே
பேச வேண்டும் என்கிறது,
மற்றொரு நட்பு எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசினால்
எனக்கு எதிராய் சதி செய்கிறது.

எனக்கு எதிராய்,
என்னை காலி செய்யும் நோக்குடன்
அவதூறு கடிதம் எழுதியவர்களோ,
இன்று நெருங்கி தான் பழகுகின்றனர்.
என்ன செய்ய,
நட்பை மதிக்க வேண்டி 
நடந்ததை மறந்து பழக வேண்டிய நிலை.

அனைவருக்கும் நல்லவனாக இருக்க விரும்பினேன்,
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாகவே
நடிப்பது!
இந்த வருடம் முதல்
எண் இயல்பு என்னவோ அதன்படி
நடிக்க போகிறேன்!

#வாழ்க்கையே_ஒரு_நாடக -மேடை_அதில்_நான்_ஒரு_கலைஞன்.

யாரோ கூறியது!

(பின் குறிப்பு : இது கவிதை இல்லீங்கோ, எனது மனக் குமுறல், உடனே வரிந்து கட்டிக்கிட்டு இது உரைநடையாக உள்ளது என மட்டும் பதிவை போட்ராதீங்க, ஏன்னா ஒரு பிரபல எழுத்தாளர் என்னையே பாலோ பன்றார்.)








2021 ன்றே வா

இனிய 2021 ன்றே வா, வா
உன்னை வரவேற்க நான் இருக்கின்றேன்,
என்னை வரவேற்க என்
இல்லதாங்காள் எங்கே, எங்கே

என் இல்லத்தில் என்னை
வரவேற்பாள் என காத்திருக்கின்றேன்,
நீயும் ஒன்று ஒன்றாக கூடி
என் வயதை கூட்டுகின்றாய்,

ஆனால் என் இல்லத்தில்
விளக்கேற்ற அவளை ஒவ்வொரு முறை கூப்பிட்டும், அவள் வராமல்
முதிர்கன்னியாகிவிடுவேனோ,

இரண்டாயிரத்தி பதின்மங்கள்
 (2011 - 2019) என்னை
ஏமாற்றியிருக்கலாம்,
2021 றே, நீ என்னை ஏமாற்ற வேண்டாம்.

உன்னை நான் எப்படி வரவேற்றேனோ,
அப்படியே நீ மறைவதற்குள்
என்னை வரவேற்க என் கவிக்கு
அருள் புரிய வேண்டும்.

நீ 366 நாட்களில் மறையலாம்,
மீண்டும் புதிதாக பிறக்கலாம்,
வாழலாம், சாதனைகள் புரியலாம்,
வரலாறு படைக்கலாம்,

ஆனால் எனக்காக பிறந்தவள் அவள்
நீ பிறந்த இந்த வருடத்தில்
நான் சேரனும் அவளுடன்,
என் வாழ்வில் நானும் வரலாறு படைக்கனும்,

எங்களை சேர வைக்காமல் 
நீ வாழவும் வேண்டாம்,
மீண்டும் பிறக்கவும் வேண்டாம்
என என்னை சபிக்க வைத்து விடாதே!

உன் அக்காளுக்கு (2020) விடை கொடுத்தேன்,
உன்னை (2021) வரவேற்கின்றேன்,
அருள் புரிவாய் என நம்புகின்றேன்!

காட்டுப் பரூர் ஆதிகேசவ பெருமாள் வரலாறு

இன்றைய கதை


காட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள்


அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும்.


பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. ‘என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன்’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி.


‘கடவுளே... இனி நீ விட்ட வழி’ என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. ‘கடவுளே... கடவுளே’ என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார்.


கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், ‘‘இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும்’’ என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை; அதிகரித்தது.


 எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ‘‘ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள்’’ என்று மனம் குமைந்து சொன்னார்.


பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது.


இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300

ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு  சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க  நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம்.


இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது,  மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும்

 கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம்.


அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். 


இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ‘ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு

கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம்.


கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள்.


இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம்.


அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை.  தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம்.


அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன.


இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம்.


பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம்.


அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.


 உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம்.