Wednesday, 22 November 2017

தனிமைச் சுடும் காதல்

தனிமைச் சுடும் காதல்
-----------------------------------
ஊர் ஊராய் போகும் குயிலே!
கதை ஒன்று சொல்கிறேன்,
கேட்டு விட்டு செல்வாயோ!
நீயும் கேட்டு கூவிடுவியோ!
அத்தை மகன் வந்திருந்தான்,
திண்ணையில் மல்லிப்பூ வைத்திருந்தான்,
ஓடி வந்த நானும் பூவை எடுத்து சூடையில்,
கண் சிமிட்டும் சத்தம் கேட்க,
நானும் அங்கே திரும்பிப் பார்க்க,
கண்ணும் கண்ணும் பேசையில்,
மனம் இரண்டும் ஒட்டிக்கொள்ள
காதல் தீயும் பற்றியதே!
உடல் சூடாய் வெந்ததும் அதுவே,
மாமன் வீடும், என் வீடும்,
உறவெல்லாம் ஒன்று கூடி
சம்பந்தம் போட்டு
வெற்றிலையை மாற்ற,
திருமணத்துக்கு ஆறு மாதம் இருக்கையில்,
என் மாமனை நானும் பார்க்காமல்,
அவனும் என்னைப் பார்க்காமல்,
அன்று  பட்ட நட்டங்கள் கூட அறியவில்லை,
அம்மி நான் மிதித்து,
அருந்ததி எல்லாம் பார்த்து
மாமன் சூடிய மாங்கல்யம்,
எங்கள் உயிரை இணைத்த
உயிரோவியம்,
விதியின் சதியா தெரியவில்லை,
தாம்பத்யம் எல்லாம் தெவிட்டவில்லை,
அதற்குள் அயல்நாட்டு பயணமாம்,
அடாத மழையிலும்
விடாத கண்ணீரும் இல்லை,
பிரியாத விடைக் கொடுத்தேன்,
என் மாமனே ,
வருடம் மூன்றை கடந்துச் செல்ல,
பாவை நானும் தவித்திருக்க,
என் உயிரும் அங்கே பிரிந்திருக்க,
ராமன் கூட வனவாசம் செல்ல,
சீதைக் கூட அவனுடன் செல்ல,
என்னவனே, நீயும் விட்டு சென்றாயே,
என்னை தனியாத தாகத்திலே!
தனிமைப்படுத்தும் பாடு அது,
தனிமைச் சுடும் காதல் அது,
தாகத்தைத் தீர்க்க வருவாயோ!
நானும் இங்கு இளைத்தேனே,
ஊரில் எல்லாம் வேறுப் பேச்சு,
பல வாய்கள் தூற்றிடவே!
நீயும் அங்கு சென்று விட்டாய்,
உடல் சூடும் தனியாமல்,
பச்சைத்தண்ணீர் குளியல் எனக்கு,
வீடு வந்து சேர்ந்திட்டால்
காணிக்கையும் தருவேன் நானும்!
குயிலே நீயும் சென்றிடுவாய்,
என் மாமனிடம் கூறிடுவாய்,
தூதாய் நீயும் வந்திடுவாய்!
- - - - - - - - - - - - - - - - - - - -
                                அன்புடன்
                     இல.வீரபாண்டியன்



No comments:

Post a Comment