Tuesday, 25 October 2022
லஞ்சம்
Thursday, 30 June 2022
வருமுன் காப்போம் - கருப்பை வாய் (ம) கருப்பை உள் புற்றுநோய்
விருத்தாசலம், ஜூலை.1
பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை உள் புற்றுநோய் (என்டோ மெட்டீரியல் புற்றுநோய்) ஆகிய புற்று நோய்களிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விருத்தாசலம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் சபரி கூறியதாவது:-
*கருப்பை வாய் புற்றுநோய்*
பெண்களின் பிறப்பு உறுப்பும் - கருப்பையும் இணைக்கும் இடம் கருப்பை வாய். இந்த இடத்தில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இந்த புற்றுநோய் இளம் வயதில் திருமணம் செய்து நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடுகிறவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோய் உடல் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மரு உருவாக்கும் எச்பிவி என்னும் வைரஸ் கிருமியால் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் உடலுறவின்போதும், அதற்கு பின்னும் வலி ஏற்படுவது, உடலுறவு பின் உதிரப்போக்கு, மாதவிடாய் நாட்களுக்கு இடையிலும், மாதவிடாய் நின்ற பின்பும் உதிரப்போக்கு ஏற்படுவது, வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். கருப்பை வாயில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து புற்றுநோய் ஏற்படாமலும் மற்றும் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் கண்டறியவும் பல்வேறு பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்றா நோய்கள் பிரிவில் செய்யப்படுகின்றன. வயா, வில்லை, கால்போஸ்கோபி, பாப் பரிசோதனைகள் ஆகியவை செய்யப்படுகின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட உடலுறவில் ஈடுபடும் அனைத்து பெண்களும் கட்டாயமாக இந்த பரிசோதனைகளை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும். தொற்ற நோய்கள் கண்டறியும் சோதனைகள் முறையாக செய்யப்படுவதாலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும் இந்த புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவதாலும், பெண்களின் தற்போதைய திருமண வயது தள்ளிப் போவதாலும் கருப்பை வாய் புற்றுநோய் குறைந்து வருகிறது.
*கருப்பை உள் புற்றுநோய்*
அதற்கு பதிலாக வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றம், உடல் பருமன், போன்ற காரணங்களால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால், எண்டோ மெட்ரியல் கேன்சர் அதாவது கருப்பை உள்பகுதி கேன்சர் ஏற்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. மாதவிடாய் நாட்கள் சீராக இல்லாமல் அடிக்கடி வருவது, தொடர்ந்து உதிரப்போக்கு இருப்பது, பிறப்பு உறுப்பில் ரத்தம் வருவது, அடிவயிறு வலி ஆகியன இந்த கேன்சரின் அறிகுறிகள் ஆகும். இதற்கான பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் மருத்துவர்களிடம் முறையாக பெற்று இந்த புற்றுநோய் வருவதற்கு முன்பே தடுத்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய், குடல், இரப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் உள்ளவர்களின், ரத்தம் சம்பந்தமான நெருங்கிய உறவினர்களுக்கு இந்த எண்டோமெட்ரியல் கேன்சர் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே குடும்பத்தில் ஏதேனும் ஒரு புற்றுநோய் உள்ளவர்கள் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் கருப்பை உள் சோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்து கொண்டு, இந்த புற்றுநோயிலிருந்து காத்துக் கொண்டு நலமுடன் வாழலாம். இவ்வாறு விருத்தாசலம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் சபரி தெரிவித்தார்.