Thursday, 22 June 2017

சிறகு முளைக்காத ஆயுதம்

சிறகு முளைக்காத ஆயுதம்
--------------------------------------------
பிறந்து விட்டோம் இந்த உலகில்
இழந்து விட்டோம் மன நிம்மதியை
துயில் எழுந்தோம் தூக்கமே இல்லாமல்
என்ன நடக்குமோ நித்திரையில்

ஏதும் அறியாக் குழந்தையும் தப்பவில்லை
எல்லாம் அறிந்த மாதும் தப்ப முடியவில்லை
உலகம் நிலையால் செல்கிறதா
மனிதத்தை தொலைத்தே வளர்கிறதா
வளர்ந்தும் நிலவாய் ஒளிரலையே

ஓரினச் சேர்க்கை என்றான் ஒரு புறம்
குழந்தை பாலியல் என்றான் மறுபுறம்
மாதுக் கடத்தல் என்றான் தென்புறம்
விரும்பியே நடக்குது அது அந்தப் புறம்

சடுகுடு ஆட்டமெல்லாம் நடக்குது
கத்திச் சண்டையில் கொலையும் நடக்குது
கழுத்து முனையில் கொள்ளையும் நடக்குது
தீவிரவாதமோ தலை விரித்தாடுது

ஆயுதம் உயிர் தாங்கி வந்தால்
சிறகுகள் ஏந்தி பறந்து வந்தால்
மனிதம் தானாய் கிடைத்துவிடும்
மனிதநேயமோ உலகில் பரவி விடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

இரவின் மடியில்

இரவின் மடியில்
---------------------------
சிட்டுக்குருவிகள் அழிந்தே வருக
காக்க வேண்டும் அழிந்திடாமலே
அட கோடை காலம் நெருங்கி வருக
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியே
முற்றத்திலே வைத்திடுவோம்
பறவைகள் அருந்திடும் களைப்புத் தீர
சிறகுகளை நனைத்திடும்
கொஞ்சியே பேசிடும்
புத்துணர்வாய் எழும்பிடும்
தலைமுறையை வாழ்த்திடும்
நாம் ஒரு இனத்தை காத்ததாலே
------------------------------____
அன்புடன்
இல.வீரபாண்டியன்

பச்சோந்தி

பச்சோந்தி
- - - - - - - - - - - - - -
பாவப்பட்ட மனிதா
உனக்கு இந்தப் பிறவி தேவைதானா
ஒரு முறைதான் அவதாரம் எடுக்கிறாய் மனிதனாய்
அதற்கே ஏன் இந்த வேடமிடுகிறாய்
நடிப்பதே நமது வேலை
மிகையான நடிப்பு தேவைதானா
காரியம் ஆக காலைப் பிடிக்கிறாய்
ஆனப்பின்பே காலை வாருகிறாய்
தர்மத்தை மீறுகிறாய்
தீவினைகள் செய்கிறாய்
தட்டிக் கேட்கும் கடவுளோ சிலையில்
திருத்த நினைத்த
மாதாவோ முதியோர் இல்லத்தில்
பச்சோந்தி நிறம் மாறும்
உயிர் வாழ மட்டுமே
நீயோ நாடகமாடுகிறாய்
மற்றவரை அழிக்க
உன் நாக்கு பலதை பேச
ஒன்றும் நிலையில்லையே
கலவரமே அதன் மிச்சமாக
நிறம் மாறும் மனிதா
அதர்மம் செய்தே வாழ்ந்தது போதும்
இருக்கும் வரை நல்லதே செய்திடு
இறந்த பின்பே வரலாறு பேசிடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

எனக்குள் நீ

எனக்குள் நீ
- - - - - - - - - - - - - - -
எனக்குள் நீயென்றே உனக்குள் நானென்றே
நித்தம் நித்தம் நினைக்கின்றேன்
நினைக்காமல் செல்வது ஏனடி
உறங்காமல் தவிக்கின்றேன்
உறக்கத்தை கலைத்தது ஏனடி

தூங்கியவனை தட்டி எழுப்பினாய்
காதல் என்ற பெயராலே
சோம்பேறியாய் இருந்தேனே
எறும்பாக மாற்றினாயே
இரும்புப் போல நான் இருந்தேன்
உருக்கி என்னை கவிழ்த்தாயே

உருவம் அற்றும் இருந்தேனே
அருஉருவமாய் என்னுள் வந்தாய்
இதயத்திலே நங்கூரமிட்டாய்
ரத்தத்தை சூடேற்றுகிறாய்

தென்றல் வாங்க சென்றேன்
சுவாசமாய் என்னுள் சென்றாய்
தெம்மாங்கு பாடி வந்தேன்
எனக்குள் இருந்தே சுரமாய் வாசித்தாய்
வீணையெல்லாம் தேவை இல்லை
நீ மட்டும் இருந்தால் போதும்
கலைவாணி நாவில் குடியேறுவாள்

எனக்குள் நீ இருப்பதாலே
காதல் கிறுக்கன் நான் ஆனேன்
கவிதையாய் எழுதுகிறேன்
சிந்தையில்  இருந்தே தூண்டுகிறாய்
சிந்தாமல் பா வடித்தேன்
பாட்டாய் நான் பாடிவந்தேன்
-------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கிராமத்து உணவு

கிராமத்து உணவு
- - - - - - - - - - - - - - - - -
பூ போன்ற இட்லியும்
அம்மியில் அரைத்த சாந்தும்
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை
தேங்காய் பால் மணமும் வரவில்லை

அரிசிக்கொழுக்கட்டை
இலையில் வைத்தே வேகவிட்டு
உண்டு விட்டால்
தேவையான சத்துக்கள்
தானாய் கிடைத்திடும்

கம்பு, கேழ்வரகை
உரலில் குத்தியே
வேக விட்டு கூழெடுத்து
கூழிலே முருங்கைக்கீரை குழம்பு கலந்து
உண்ட ருசி எங்கும் கிடைக்காது

பசும்பால் சுட சுட கரந்து
பாலை சூடேற்றி
ஆத்தா கொடுத்திடுவாள்
இனிமையான ருசியது

மீன் குழம்பு மணம் வீசும்
மறுநாள் உண்டால் மணமாய் மணக்கும்
உப்புக் கருவாடு வருவல்
வாசமுடன் உள்ளேப் போகும்
பசுந்தயிரை அதனுடன் உண்டால்
செரிமான பிரச்சினையோ பறக்கும்

கிராமத்து உணவது
என்றும் நிலைத்திடும்
ஆரோக்கிய வாழ்வை தரும்
நகரத்து உணவெல்லாம்
உடலை வேக வைக்கும்
குடலை புண்ணாக்கும்
எந்த நாகரிகம் வளர்ந்தாலும் (வந்தாலும்)
கிராமத்து உணவுக்கு ஈடாகுமா!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

இமைத்தென்னை இதயத்தில் வைத்தாய்

இமைத்தென்னை இதயத்தில் வைத்தாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இமைத்தென்னை இதயத்தில் வைத்தாய்
இமைக்காமல் என்னை
கண்ணுக்குள் வைத்தாய்
இசைத்தென்னை
சுரத்தில் வைத்தாய்
இசைக்காமல்
என்னை வீணையில் வைத்தாய்
சுவாசித்து என்னை
நெஞ்சத்தில் வைத்தாய்
சுவாசிக்காமல் என்னை
மரணத்தில் தள்ளினாய்
எழுதியே என்னை
கவிஞன் ஆக்கினாய்
எழுதாமல் என்னை
பாடகனாக்கினாய்
மறந்த என்னை
மருத்துவம் பார்த்தாய்
மறக்காமல் என்னை
நினைக்க வைத்தாய்
நினைத்த என்னை
நினைவலையில் சிக்க வைத்தாய்
நினைக்காத என்னை
நினைத்தே நெருப்பாய் காய்கிறாய்
காதலித்த நீயோ
உன்னையே கொடுத்தாய்
காதலிக்காத என்னை
காதல் செய்ய வைத்தாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

விழிகள் மோதி

விழிகள் மோதி பேசும் மொழிகள்
---------------------------------------------------------
கண்ணும் கண்ணும் பேசியே
காதல் செய்தது
மனமும் மனமும் பேசியே
அன்பை பொழிந்தது

ஆன்மா இரண்டு இணைய
இரு உடல் ஓருடலாகி
பஞ்ச பூதங்களும் அடங்கிட
அன்பை சொரிந்து
காதலை வளர்த்து
விழிகள் மோதி மொழிகளை
மௌனமாய் பேசிடும் காதல்

தொட்டும் தொடாமலும்
உரசியும் உரசாமலும்
சிரித்தும் சிரிக்காமலும்
புன்னகை மட்டும் ததும்பியே
பூதங்களை அடக்கிடும் காதல்

உணர்ச்சிகள் பெருகிடும்
உணர்வுகளை அடக்கிடும்
அத்துமீறல்களை உடைத்திடும்
காமத்திற்கு வேலியாய்
அன்பிற்கு மட்டுமே அடைக்கலமாய்
வாழ்ந்திட வாழ்த்தும் காதல்

உண்மையாய் நினைத்து
உறுதியாய் நின்று
உள்ளத்தில் நிறுத்தி
எதிர்ப்பை மீறி
கரை சேர்ந்திடும்
இல்லையேல் உயிரை வாங்கியே
உயிர் வாழ்ந்திடும் உண்மை காதல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

காட்சி

காட்சிக் கவிச்சோலை -
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்பை பறித்தாய்
உள்ளத்தை களவாடினாய்
உயிராய் இருந்தாய்
பாசத்தை பொழிந்தாய்
உணர்வை மதித்தாய்
உள்ளங்கையில் தாங்கினாய்
மானே என்றாய்
தேனே எனக் கொஞ்சினாய்
மலரே என முகர்ந்தாய்
அமிர்தமே என பிதற்றினாய்
கனவிலும் உளறினாய்
நினைவிலும் தானாய் பேசினாய்
பூக்களை சூடினாய்
உச்சி முகர்ந்தாய்
காமத்தை கிளறினாய்
காதலின் உச்சத்தை அடைந்தாய்
மலரானவளை காலில் மிதித்தாய்
வாடிய மலரையும் நோகடித்தாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

ழகரம்

ழகரம்
- - - - - - - - - -
தமிழகத்திற்கு வேண்டும் தண்ணீர்
இந்தியாவுக்கு வேண்டும் குடிமகன்
தண்ணீர் இருந்தால் வாழ்வு கிடைக்கும்
குடிமகன் கிடைத்தால் வருமானம் கிடைக்கும்

தண்ணீர் நிரம்ப தாலி அறுந்தது
குடிமகன்கள் பெருக இன்னல்கள் வந்தது
வேலையின்மையால் உயிர்கள் பிரிந்தது
வெளிநாடு சென்றாலும்
தண்ணீரில் நனைந்தே
தமிழ் மானம் பறந்தது
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

வளரும் செடிகள்

வளரும் செடிகள்
வளமாகும் வாழ்வு
- - - - - - - - - - - - - - - - - - -

உயிர் வாழ காட்டை அழித்தோம்
உயிர் வாயு இன்றி திண்டாடுகிறோம்
கட்டிடங்கள்  கட்ட மரத்தை அழித்தோம்
நிழல்கள் இன்றி வாடுகிறோம்

தொழிற்ச்சாலைகள் கட்ட செடிகளைக் கூட
அழித்திட்டோம்
வேலையில்லாமல் திண்டாடுகின்றோம்
குளிர் சாதன வசதிகளை செய்தோம்
செயற்கை காற்றில் சுகமாய் இருந்தோம்

வனத்தை அழித்து இயற்கையை துறந்தோம்
விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தோம்
மரம், செடிகள் புதையுண்டே
பொக்கிஷமாய் மாறியதை கண்டோம்

பூமியை சுரங்கமாக்கி களவாடினோம்
பொங்கி வந்த நிலத்தடி நீர்
கானல் நீராய் ஆக்கிவிட்டோம்
மும்மாரி பொழிந்த மழையை
தடுத்து நிறுத்திட்டோம்

இயற்கை வாயு மறைந்து
செயற்கை வாயு ஓசோனில் தஞ்சமடைய
ஓசோன் ஓட்டை விரிவடைய
புற ஊதாக் கதிர்கள் நேராய்
பூமியை தாக்க
உலகில் வெப்பமயம் என்றோம்

தீங்குகளை தடுக்க
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றோம்
அதையும் கிடப்பில் போட்டோம்
வளரும் செடிகளால் தான்
நம் வாழ்வும் வளமாகும்
அழிந்த வனத்தை மீட்போம்
உலகில் நன்றாய் வாழ்ந்திடுவோம்
--------------------------.
அன்புடன்
இல.வீரபாண்டியன்

தவம் இன்றி கிடைத்த வரம்

தவம் இன்றி கிடைத்த வரம்
- - - - - - - - - - - - - - - - - - -

தவம் இன்றி கிடைத்த வரம்
நான் உனக்கு மகனாய் பிறந்த வரம்,
பூ போல போர்த்தியே,
சீராட்டி வளர்த்தத் தாயே!
உன்னாளே இந்த உலகம் என்னை
பார்த்தது, என் மாதாவே!

தாயும் ஆனதால் தந்தை அவர்
உதிரத்தின் மிச்சம் நான்,
பிரம்மாவின் மச்சம் அவர்,
உலகில் எனக்கு வழிகாட்டும் பிதா அவர்.

நல்லறிவை புகட்டி,
உலக நடப்பை புகுத்தி,
என்னை நல்வழிப்படுத்தி,
தரமான படைப்பாக படைத்திட்ட,
குருவும் வரம் இன்றி கிடைத்திட்ட வரம்,

மாதா பிதா குருவை அருளிய,
நல்ல மனைவியை தந்தருளிய,
எந்நாளும் குறை - நிறைகளை கலந்தருளிய
இன்பம் துன்பம் பகுத்தருளிய,
என் தெய்வம் தந்த வரமெல்லாம்,
எனக்கு தவம் இன்றி கிடைத்த வரம்,
                          அன்புடன் உன்னாலே
     விருத்தாசலம் இல.வீரபாண்டியன்





அமைதி போராட்டம்

அமைதி போராட்டம்
________________________
சாதிக்காக சண்டை போட்டோம்
மதத்திற்காக உயிரை எடுத்தோம்
மொழிக்காக உயிரை விட்டோம்
தண்ணீருக்கு அடித்துக் கொண்டோம்

எல்லையை காக்க போராடினோம்
அணுகுண்டு வீசியே மக்களை
அழித்தோம்
முடிவில் என்ன சாதித்தோம்
அமைதிக்காக போராடுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

மீண்டும் வருவோம்

மீண்டும் வருவோம்
__________________
மரத்தை அழித்த வீணர்களே
எங்கள் கதையை கேளுங்கள்
நீங்கள் போட்ட விதையல்ல நாங்கள்
இறைவன் படைத்த உயிர்கள் நாங்கள்
எங்களை அழித்திட நீங்கள் யாரு
விதைப் போட்டு வளர்க்க துப்பில்லை
வளர்ந்த எங்களை காக்க துணிவில்லை
தண்ணீர் ஊற்றக் கூட ஆளில்லை
எங்கள் உயிரை எடுக்க
உமக்கு உரிமையும் இல்லை
நீங்கள் வெட்டினால் நாங்கள் துளிர்ப்போம்
வேர் அறுத்தால் விதை ஆவோம்
எங்களை காக்க முடியவில்லை
நாங்கள் காக்கின்றோம் பல உயிர்களை
எங்களுக்கு இடம் ஒதுக்க மறுத்தீரே
எங்கள் மீது கட்டிய
பறவைகளின் கூடுகளை பாருங்கள்
எங்களை அழித்தீர்களே
பல இன்னல்களை சந்தித்தீரோ
நாங்கள் மீண்டு மீண்டும் வருவோம்
வேரை மட்டும் சிதைக்காதீர்
துன்பப்பட்டது போதும்
இனியும் நீங்கள் துன்பப்பட வேண்டுமா
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

தொல்லை யென்றால்

தொல்லையென்றால்
தொலைந்து விடுகின்றேன்
---------------------------------------------
உன் அழகை நான் நேசிக்கவில்லை
மனதை மட்டுமே நேசித்தேன்
உன் மீது அன்பை மட்டுமே பொழிந்தேன்
காமத்தை நான் எதிர்பார்க்கவில்லை

உன் உடலை நான் விரும்பவில்லை
இதயத்தில் குடியிருக்கவே விரும்பினேன்
உன் உயிரை எடுக்க நான் வரவில்லை
உன்னை இமையாய் காத்திடவே நான் வந்தேன்

தினம் தினம் உன்னை நினைக்கின்றேன்
கருவாய் உன்னை சுமக்கின்றேன்
உயிராய் நான் காக்கின்றேன்
அதிலே உறுதியாய் நிற்கின்றேன்

கண்டும் காணாமலும் செல்கிறாய்
கடுஞ்சொற்களால் இகழ்கின்றாய்
தொல்லையென்று நினைத்தாயோ
ஒரு துளி விஷம் கொடுத்துவிடு
உண்டு விட்டு தொலைந்து விடுகின்றேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

அழியும் பாரம்பரியம்

அழிந்து வரும் பாரம்பரியம்
-------------------------------------------
பழைய சோறும்
பச்சை மிளகாயும்
சாப்பிட ருசியெடுக்கும்
இன்று காணவில்லையே
சுடு சோறு கேட்டோம்
பழைய சோற்றை ஒதுக்கினோம்
நோய் வந்தே நோகினோம்
பழமையை போற்றுவோம்
பாரம்பரியத்தை காத்திடுவோம்
பழமைவாதியென்றே நினைக்காதீர்
பழமையை ஆராய்ந்திடுவீர்
----------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கல்லறை மீது சபதம்

கல்லறையின் மீது சபதம் - - - - - -
- - - - - சிறைக்குப் போகிறேன்
---------------------------------------------------
கல்லறையின் மீது சபதம்
உன் உயிரின் மீது சத்தியம்
உன் உடல் சிதைவதற்குள்
உன் ஆவி அடங்குவதற்குள்
எடுத்த சபதம் முடிப்பேன்
அதுவரை நான் உயிரோடிருப்பேன்

உள்ளத்தை நேசித்தோம்
உயிராய் இருந்தோம்
மலர்களை போல மலர்ந்திருந்தோம்
மலரே உன்னை வாடச் செய்தவன் யாரோ
நீ உறங்கச் சென்றதேனோ
என்னை விட்டு பிரிந்ததேனோ

ஜோடி உயிர்களாய் இருந்தோம்
ஒரு உயிரை பிரித்த இறைவா
மற்றொரு உயிர்
வாடுவதை அறியவில்லையா
உன் மனம் நோகவில்லையா

நெஞ்சத்தை உடைத்தவன் எவனோ
இதயத்தைக் கிழித்தவன் எவனோ
அவன் தந்தையே ஆகினும்
உன் உறவாகவே இருந்தாலும்
உயிரோடு இருக்கப் போவதும் இல்லை
அவன் உயிரை எடுப்பேன்
உன் ஆத்மா சாந்தியடையவே
நான் சிறைக்குப் போகிறேன்
-----------------.- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

மகிழ்வான தருணங்கள்

மகிழ்வான தருணங்கள்
-----------------------------------
தாய் அன்பாய் அரவணைக்கும்,
தந்தை உச்சி முகர்ந்திடும்,
தாத்தா பாட்டி மகிழ்வாய் கொஞ்சிடும்,
தாய்மாமன் மடியில் அமர்ந்திடும்
தருணங்கள் மீண்டும் கிடைக்காது
அது ஒரு மகிழ்வான தருணங்கள்

கவலை தெரியாத குழந்தைப் பருவம்
மண்ணில் விளையாடும் மாணவப் பருவம்
துள்ளிக் குதிக்கும் விடலைப் பருவம்
கனாக் காணும் கல்லூரிப் பருவம்
மீண்டும் திரும்பாத இனிய தருணங்கள்

தாய் சொல்லை தட்டுவதும்
தகப்பன் சொல்லை மிஞ்சுவதும்
மூத்தோர் அறிவுரையை
கேட்காமல் இருப்பதும்
மனதில் பட்டதை செய்ததையும்
பட்டப் பின்னே புத்தி வந்ததையும்
நினைத்திடும் அனுபவ தருணங்கள்

இன்று தகப்பனுக்கே ஆசானாய்
தாய் அவளுக்கு நல்ல மகனாய்
மனைவிக்கு நல்லதொரு கணவனாய்
சமுகத்திற்கு உற்ற சேவகனாய்
ஊதியமில்லா ஊழியனாய்
உணர்வுள்ள மனிதனாய்
மகிழ்வான தருணங்களில்
நெகிழ்வோடு வாழ்கின்றேன்
_ _ _ _-_ _ _ _ _ _ _ _ _ - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

அப்பா

அப்பா
- - - - - - - - -
1.அப்பாவின் மறு உருவம் நாம்

2 , தந்தையே அறிவுக்கு ஆதாரம்

3. அப்பாவின் பிள்ளை பொய் பேசாது

4, அப்பாவே முதல் ஆசான்

5. அப்பாவே நம்பிக்கையின் ஊற்று

6. அப்பா குடும்பத்தை சுமந்திடும் தெய்வம்

7. அப்பா அன்னைக்கும் தாய்

8. அப்பாவே நம் முதல் நண்பன்

9. அப்பா கண்டிப்பார் கைவிட மாட்டார்

10. அப்பா வீட்டில் வணங்கிடும் தெய்வம்

11. அப்பா இருக்க பயம் ஏன்

- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

மரகத மலரே

மரகத மலரே
ரோசா நிலவே
தேனே அமுதே
இரவே பகலே
பூவையானவளே
பூவிழி பாவையே
இனிமையிலே ஊறியவளே
தனிமையிலே உழலாதவளே
ஓருடலாகி உயிரானவளே
காகித ஓடமே
ஏனோ வேகமோ
மாதமே வருகுதே
மாசியோ போனதே
தேரதிலே ஆடியே
மணமாலை இடலாமே
இனிமையாகவே உலா வரலாமே
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கலங்கும் நெஞ்சம்

கலங்கும் நெஞ்சம்
- - - - - - - - - - - - - - - - - -
மனமே கலங்கிடாதே
மாலையிட வருவான் ஒருவன்
உனக்கென பிறந்தவன்
உயிராய் இருப்பான்
சோதனைகள் வாழ்வதற்கே
கடவுள் கைவிட மாட்டான்
சோகத்தை மறந்திட கற்றுக் கொள்
கலங்கிடாதே நெஞ்சமே
கவிப் பாடி வருவான்
உனை சிறையிலெடுப்பான்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

இரவின் மடியில்

இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - - - -
ஆடிக் காற்றில் அம்மியும் நகர
ஐப்பசி மழையும் விடாமல் தூற
கார்த்திகை தீபத்தில் மழையாய் கொட்டிட
மார்கழி பனியும் சாரலாய் பொழிய
இனிதே நனைந்திடுவோம்
குடையில்லாமல் ஆடிடுவோம்
சித்திரை கோடையில் வாடியதற்கு
மழையிலே வெம்மையை
தணித்துக் கொள்வோம்
தீமைகளை போக்கிக் கொள்வோம்
இனிமையாய் வாழ்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

அம்மா வைத்த குழம்பு

அம்மா வைத்த குழம்பு
- - - - - - - - - - - - - - - - - -
அம்மா வைத்த குழம்பு மணக்குமே
கையால் அரைத்த மணம் கமக்குமே
நாட்டுக் கோழி உலா வந்திடுமே
திடீர் என குழம்பில் வெந்திடுமே

வேகும் போதே நாக்கில் எச்சில் ஊறிடுமே
ஊரையே சுண்டி இழுத்திடுமே
இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம்
அம்மியில் அரைத்தே
குழம்பில் கலந்தாலே வாசம் வீசுமே
நன்றாய் உண்டிடலாமே

அம்மா வைத்த மீன் குழம்பு
வயிறு முட்ட உண்ணலாம்
வறுத்து வைத்த கருவாடு
பிடி பிடி என பிடிக்கலாம்
கவலை மறந்தே தூங்கலாம்
அம்மாவின் கை பக்குவம்
உணவு விடுதியிலும் கிடைக்காது
நட்சத்திர விடுதியிலே
தேடினாலும் சுவை தெரியாது

ஆத்தா வைத்த குழம்பு
அறுசுவையாய் இனித்திடும்
ஆயுளை கூட கூட்டிடும்
நோயெல்லாம் பறந்தோடும்
நாக்கில் மட்டும் ருசி கூடும்
மனைவி கையால் சாப்பிடும் போதே
அம்மா வைத்த குழம்பின் அருமை தெரியும்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

ஆசையோடு வருகிறாய்

ஆசையோடு வருகிறாய்
நேசமாக மலர்கிறேன்
--------------------------------------
ஆசையோடு வருகிறாய்
நேசமாக மலர்கிறேன்
இனிய தருணங்களில்
இன்ப மழை பொழிகிறேன்

மழையில் நனைகிறேன்
மயிலாட்டம் ஆடுகிறாய்
வெய்யலில் அலைகிறேன்
மான் போல ஓடுகிறாய்

துன்பத்தில் உழல்கின்றேன்
இன்பமாய் வருகிறாய்
வறுமையில் திண்டாடினேன்
பசுமையாய் அழைக்கின்றாய்

காதல் நோயால் நோகினேன்
மருந்தாய் நீ வருகின்றாய்
கீதம் நான் இசைக்கின்றேன்
இசையாய் நீ மீட்கின்றாய்

மனதில் வைத்து காக்கின்றேன்
தேவதையாய் வருகின்றாய்
மலராய் நீ வருகின்றாய்
உன் மன்னவனாய் நான் ஆகின்றேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


உன்னால் விழிகளில்

உன்னால் விழிகளில் வழிந்தோடும் - -
- - - - குடையில்லாது மனம் நனைகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உன்னால் விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரைத் துடைக்க ஆளில்லை
உயிராய் இருந்த எனக்கு
நீ கொடுத்தப் பரிசு கண்ணீர்
சிவந்த கண்கள் மட்டுமே இருக்க
வறண்ட மனம் அழுகிறது

நெஞ்சில் சுமந்தேன் உன்னை
எட்டி உதைத்தாய்
சுக்கு நூறாகிப் போனது இதயம்
மனதில் நினைத்த என்னை
மணி கணக்கில் காக்க வைத்தாய்
நெஞ்சம் பதறுகிறது

கண்ணால் கவர்ந்தேன் என்றாய்
கண்டும் காணாமலும் செல்கிறாய்
இதயத்தில் குடியிருந்தேன் என்றாய்
அம்புகளால் குத்திக் கிழித்திட்டாய்
மலரே எனக் கொஞ்சினாய்
மலரை காலில் மிதித்துச் செல்கிறாய்

என்ன நான் செய்தேன்
ஏன் இந்த தண்டனைகள்
மனதில் சுமந்தது குற்றமா
உன் நினைவாலே வாழ்ந்தது தவறா
விடை தெரியாமல் விழிக்கின்றேன்
குடையில்லாமல் மனம் அழுகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

கவிதை

கவிதை
- - - - - - - - - -
சிறகு எழுதிடும் கவிதை இது
பறந்து திரியும் பறவை - சாதிக்க
பிறந்ததாலே சிறகின்றி பறக்கிறது
பிறரை சிந்திக்க தூண்டுகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

காலமெனும் கவிதை

காலமெனும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - -
பிறந்தபோது சிரஞ்சீவி
பிறந்தப் பின்னே எல்லாம் வேலி
ஆணாய் பிறந்தால் ஆதிக்கம்
பெண்ணாய் பிறந்தால் அடிமை

ஆணுக்கு அமுது
பெண்ணுக்கு நஞ்சு
ஆடு பெண்குட்டி ஈன்றால் மகிழ்ந்தார்கள்
பெண் பிறந்தாலே
கள்ளிப்பால் ஊட்டினார்கள்
பெண்ணே பெண் குழந்தையை
கொன்ற கொடூரம்

தப்பிப் பிழைத்த பெண்கள்
சுகமாய் வாழ்ந்தார்களா,
அய்யகோ! கூண்டுக் கிளிகளாக அடைப் பட்டுக்கிடந்தனரே
அடுப்பூதியே காலத்தை கழித்தார்களே

வீதியில் விளையாட
சிரித்து மகிழ்ந்திட
ஆடவனுடன் பேச
எண்ணிலடங்காத் தடைகள்
கொடுமையென்றால் கொடுமை

கணவன் இறந்தால்
பெண்ணும் இறக்க வேண்டும்
எழுதப்படாத நியதி
தப்பிப் பிழைத்த பெண்கள்
மூதாட்டிகளாய் இன்றும் வாழ்கிறார்கள்
எழுதி வாசிக்கின்றார்கள்
மீண்டும் திரும்புகிறதோ
காலமெனும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

முதன் முதலாக அம்மாவுக்கு

முதன் முதலாக அம்மாவுக்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒரு துளி உதிரத்தை உள்வாங்கினாய்
உன் பிள்ளையாய் நான் பிறந்தேன்
நீ செய்த தவமோ
நான் பெற்ற வரமோ
உனக்கு பிள்ளையாய் பிறந்திட்டேன்
நீயும் உச்சி முகர்ந்திட்டாய்

நீ தந்த முதல் முத்தம்
தாலாட்டி சீராட்டி வளர்த்த அன்பு
நிலவைக் காட்டி
பாசமாய் ஊட்டிய சோறு
அன்பான கண்டிப்பு
கண்டித்ததும் உன் கண்ணில் கண்ணீர்
நான் மறப்பேனா

முதன் முதலாக அம்மா என்றழைத்தேன்
உன் முகத்தில் தாய்மையை கண்டேன்
நீயோ எனை தெய்வம் என்றாய்
நானோ உன்னை வணங்குகிறேன்
அன்னையே என் அறிவுக்கண்களை
திறந்திட்டாய்
அன்பின் ஊற்றை பெருக்கிட்டாய்

வளர்த்து விட்டாய்
படிக்க வைத்தாய்
நல்வாழ்க்கையை தந்து விட்டாய்
பாதை தவறாமல் நல்லவனாய் எனை
படைத்து விட்டாய்
நன்றி எப்படிச் சொல்வேன்
உறுதியாய் நம்புகிறேன்
நீ முதியோர் இல்லத்தை நாடாமல் காப்பேன்
-----------------------------.- - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

விடிவது எதற்காக

விடிவது எதற்காக
- - - - - - - - - - - - - - -
விடியல் நமக்காக ஏங்குகிறது - பல
சாதனைகளை நாம் படைக்க வேண்டுமென
நாமோ கண்டும் காணாமலும் செல்கிறோம்
விடியலோ நமக்காகவே தினம் தினம் விடிகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அழகான காடு தான்

இரவின் மடியில்
----... - - - - - - - - - - - -
அழகான காடுதான்
காட்டுக்குள்ளே நல்ல குளம்தான்
குளத்திற்கு அருகில் தனிவீடுதான்
காண காட்சியாய் தெரிகிறது
கானாப் பாட தோன்றுகிறது
கவியோ தானாய் பொழிகிறது
இசை மீட்டிட துணையில்லை
இசைக்காமல் பாடுகின்றேன்
இயற்கை அசைபோடுகிறது
தென்றலோ தழுவிச் செல்கிறது
துணையைத் தேடியே தூதுச் சென்றது
______ - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்