Monday, 23 September 2024

இப்படியும் மகிழலாமே!

இப்படியும் மகிழலாமே!

எதிர்மறையாக பேசி எதிரில் இருப்பவரை நோகடிக்க வேண்டாம்... நேர்மறையாக பேசி ஊக்கம் கொடுக்க மறக்க வேண்டாம்.... துவண்டிடும் போது உங்கள் தோள்கள் தேவையில்லை, ஆறுதலாக சில சொற்களையும், பார்த்துக்களாம் என்ற உரத்தையும், லேசான புண்ணகையை வீசி பாருங்கள்..... நட்பும் மலரும்,,,,அவர்களின் சந்தோஷமே உங்களை மகிழ்ச்சியடைய செய்யும்!

Sunday, 14 May 2023

பணவீக்கம் உங்களை பாதிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

 வாசகர்களுக்கு வணக்கம்!
பணவீக்க விகிதம் (Inflation) என்கிற விலைவாசி உயர்வை நம் முதலீட்டை விழுங்கும் பூதம் எனலாம். இது பணத்தின் மதிப்பை மிகவும் குறைத்து விடுகிறது. 25 ஆண்டுகளுக்குமுன் நீங்கள் ₹1 கோடி வைத்திருந்தால், அதை வைத்து சென்னை புறநகரில் கிட்டத்தட்ட 50 சென்ட் வீட்டு மனைக்கான இடம் வாங்கியிருக்க முடியும். இன்றைக்கு 2023–ம் ஆண்டில் ₹1 கோடியை கொண்டு 5 - 8 சென்ட் இடம்கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு நிலத்தின் விலை உயர்ந்திருக்கிறது. நிலம் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
அதே நேரத்தில், அவர் அந்த ₹1 கோடியை ஆண்டுக்கு 10% வருமானம் தரும் நிதித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அது இப்போது ₹10.83 கோடியாக அதிகரித்திருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு இன்று அவரால் தாராளமாக 50 சென்ட் இடம் வாங்க முடியும். இதிலிருந்து நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பணவீக்க விகித பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது மட்டும்தான் ஒரே வழி. இதுகுறித்து இந்த வார The Salary Account எடிஷனில் விரிவாக வழிகாட்டுகிறார் Click4mf தளத்தின் இயக்குநர் என். விஜயகுமார்.
"ஆண்டுக்கு சராசரி பணவீக்க விகிதம் 5% என்கிற நிலையில், இன்றைய 30,000 ரூபாயின் உண்மையான மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து சுமார் 11,000 ரூபாயாகத்தான் இருக்கும். அதே நேரத்தில், இன்றைக்கு ₹30,000-க்கு வாங்கும் பொருள்களை 20 ஆண்டுகள் கழித்து வாங்க கிட்டத்தட்ட ₹80,000 தேவைப்படும். (பார்க்க அட்டவணை)
இன்றைக்கு ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ₹50,000 என வைத்துக்கொள்வோம். இதில் வீட்டு வாடகை, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் அடங்கும். ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 5% என்கிற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து, மாதம் ₹1,03,950 இருந்தால்தான் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியும். இது ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 7% எனில், ₹1,37,950 இருந்தால்தான் செலவுகளை சமாளிக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும். கூடவே, முதலீட்டின் மூலமான வருமானமும் அதிகமாக இருக்க வேண்டும். இல்லை எனில், கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டும்.
பணவீக்க விகித பாதிப்பிலிருந்து விடுபட, பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் எந்த மாதிரியான நிதி விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
1. பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில், பொருள்களின் விலையும் அதிகமாக இருக்கும். எனவே, பட்ஜெட் போட்டு அவசியமான தேவைக்கு மட்டுமே செலவு செய்வது மிகவும் அத்தியாவசியம் ஆகும். குடும்ப பட்ஜெட் மட்டுமே குடும்பத்தின் வருமானம் சரியாக எங்கே செல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இதன் மூலம் தேவையில்லாத செலவுகள் எவ்வளவு செய்யப்படுகின்றன எனப் பளிச் என்று தெரியும். அது போன்ற வீண் செலவுகளைத் தவிர்ப்பது மூலம் சேமிப்பை நிச்சயம் அதிகரிக்க முடியும்; நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்ற முடியும்.
2. கடன்களைக் கட்டாயம் தவிர்க்கவும்
அதிக பணவீக்கம் நிலவும் காலத்தில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்ததால், அதைக் கட்டுக்குள் கொண்டு வர ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்தது. இதனால், சுமார் 7 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி, கிட்டத்தட்ட 9.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே போல, கார் கடன், தனிநபர் கடனுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது. அதனால், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில், தேவை இல்லாத கடனை வாங்குவதை குறிப்பாக, கிரெடிட் கார்டு கடன் (ஆண்டு வட்டி 35% - 45%), தனிநபர் கடன் (ஆண்டு வட்டி 16% - 22%) வாங்குவதைத் தவிர்க்கவும்.
ஏற்கெனவே மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்து இப்போது அதிகமாக இருந்தால், வாய்ப்பு வசதி இருக்கும்பட்சத்தில் மாதத் தவணை தவிர, கூடுதல் தொகையைக் கட்டி கடன் சுமையைக் குறைப்பது நல்லது. அதுவும் அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு, தனிநபர் கடன்களை விரைந்து அடைப்பது வட்டிச் செலவைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், புதிய கடன் வாங்குவதை முடிந்த வரை தவிர்ப்பது அவசியம்.
3. பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீடுகள்
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். பணவீக்க விகிதத்தால் அதாவது, விலைவாசி உயர்வால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. பணவீக்க விகிதம் 7% எனில், ஒரு பொருளின் விலை இந்த ஆண்டு ₹100 என்றால், அடுத்து ஆண்டு அது ₹107-க்கு விற்கப்படும். இந்த நிலையில், முதலீட்டின் மூலமான வருமானம், வருமான வரிக்குப்பின் பணவீக்க விகித்தைவிட 3% - 4% அதிகமாக இருப்பது லாபகரமாக இருக்கும். அந்த வகையில், ரிஸ்க் பரவலாக்கப் பட்ட பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடாகச் செய்து வர வேண்டும்.
4. நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்
உங்கள் வாழ்க்கையின் குறுகிய கால, நடுத்தரக் கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது உங்கள் வசம் இருக்கும் பணம் எல்லாம் முதலீட்டுக்குச் சென்றுவிடும். இப்படி செய்வதன் மூலம் விலைவாசி அதிகம் இருக்கும் காலத்தில் வீண்செலவுகள் கணிசமாகத் தவிர்க்கப்படும். குறுகிய கால இலக்குகளில் அதிக வட்டியிலான கடன்களை முதலில் அடைக்கத் திட்டம் தீட்டுங்கள்.
5. வருமானத்தை அதிகரிக்க முயலுங்கள்
செலவுகளை ஓரளவுக்குதான் கட்டுப்படுத்த முடியும். விலைவாசி மிகவும் அதிகரித்திருக்கிறது என்பதற்காக மிக அத்தியாவசிய செலவுகளான சாப்பாடு, மருந்து மாத்திரை செலவுகளைக் குறைக்க முடியாது. எனவே, வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியை எடுக்கலாம். தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் மூலமே கூடுதல் வருமானத்துக்கு வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். மேலும், சில சிறப்புத் தகுதிகளை அதிகரிப்பதன் மூலம் தற்போது பார்க்கும் நிறுவனத்திலேயே சம்பளத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
வருமானத்தை ஈட்டுவது எப்படி என்று கொஞ்சம் யோசித்தால், உங்களுக்கே பல நூறு வழிகள் புலப்படும்.
6. முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும்
பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், முதலீடு செய்யும் தொகையை அதிகரித்தால்தான் நிதி நிலையை சரியாக சமாளிக்க முடியும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். வேலை பார்க்கும் 30 வயதான கணவன் - மனைவிக்கு இன்றைக்கு வீட்டு வாடகையும் சேர்த்து மாதச் செலவு ₹50,000-ஆக உள்ளது. 60 வயதில் பணி ஓய்வு. தம்பதியர் 80 வயது வரை வாழ்வார்கள் என எடுத்துக்கொள்வோம். பணவீக்க விகிதம் ஆண்டுக்குச் சராசரியாக 5% எனில், இன்றைய மாதக் குடும்பச் செலவு ₹50,000 என்பது இன்னும் 30 ஆண்டுகள் கழித்து ₹2.16 லட்சமாக அதிகரித்திருக்கும். பணிபுரியும் காலத்தில் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாகவும், பணி ஓய்வுக் காலத்தில் தொகுப்பு நிதிக்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைப்பதாகவும் வைத்துக்கொண்டால், அவர்களுக்கு ₹3.9 கோடி தொகுப்பு நிதி இருந்தால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும். இந்தத் தொகையை சேர்க்க மாதம் ₹11,100 வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும். ஒரு முறை முதலீடு செய்வதாக இருந்தால் ₹13 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
இதுவே பணவீக்க விகிதம் 7 சதவிகிதமாக இருந்தால், 60 வயதில் மாதச் செலவு ₹3.8 லட்சமாக அதிகரிக்கும். இந்தத் தொகையைப் பெற ₹6.89 கோடி தொகுப்பு நிதி தேவை. இந்தத் தொகையைப் பெற மாதம் ₹19,510 முதலீடு செய்து வர வேண்டும். ஒருமுறை முதலீடு செய்வதாக இருந்தால், ₹23 லட்சம் தேவை. எனவே, பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்ற அதற்கேற்ப அதிகமாக முதலீடு செய்து வருவது அவசியமாகும்.
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் சரியாக பட்ஜெட் போடுவது, கடனைத் தவிர்ப்பது, அவசரக் கால நிதியை உருவாக்குவது, நிதி இலக்குகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட உத்திகளைப் பின்பற்றுவது லாபகரமாக இருக்கும்.
நன்றி விகடன்

Saturday, 4 March 2023

பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம்

மொட்டை மாடிகளில்
நீரும், உணவும் வைப்போம் 

பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்

 வெயிலின் தாக்கம் மிகுதியாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?
உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம்.

கத்தரி வெயில் இப்போதே வந்துவிட்டது போல, வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான ஏற்பாடுகளை மனிதர்கள் செய்து கொள்கிறார்கள். ஆனால் பறவைகள் என்ன செய்ய முடியும்? வெயில் காலத்தில் பெரிய பெரிய பறவையினங்கள் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுகின்றன. ஆனால் சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி போன்ற சிறிய பறவையினங்கள் வெயிலால் உயிரிழந்து போகும் அபாயமும் இருக்கின்றன. எனவே வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை இன்று முதலே நாம் மேற்கொள்வது நல்லது. அதனால் பறவைகளின் தாகமும் தீரும். அதன் வாழ்வும் காக்கப்படும். எனவே இந்த முயற்சிகளில் பொதுமக்கள் அனைவருமே ஈடுபட வேண்டும்.

Tuesday, 25 October 2022

லஞ்சம்

"வாழ்க்கையில், பணமும்,பதவியும்"
திரும்பி பார்த்தால்,

"அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். 
ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன். 
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 
7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்..."உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன். 
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.
'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்...உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.

என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.
இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

💢அரசன் அன்று கொல்வான்.
💢தெய்வம் நின்று கொல்லும்.
💢மக்களுக்கு செய்யும் சேவையே.
💢மகேசனுக்கு செய்யும் சேவை.

@ ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. 

True story of a Government staff.

லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!!

இந்த பதிவு சற்று எல்லோருக்கும் சென்றடைய செய்யவும். அப்படியே EB , RTO, Corporation, Taluka, Registration Office-யில்  பணி புரிபவர்களை இந்த பதிவை படிக்க வைத்தால் நல்லது.

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

@ படித்த பதிவு.

Thursday, 30 June 2022

வருமுன் காப்போம் - கருப்பை வாய் (ம) கருப்பை உள் புற்றுநோய்

விருத்தாசலம், ஜூலை.1
பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை உள் புற்றுநோய் (என்டோ மெட்டீரியல் புற்றுநோய்) ஆகிய புற்று நோய்களிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விருத்தாசலம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் சபரி கூறியதாவது:-
*கருப்பை வாய் புற்றுநோய்*
பெண்களின் பிறப்பு உறுப்பும் - கருப்பையும் இணைக்கும் இடம் கருப்பை வாய். இந்த இடத்தில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இந்த புற்றுநோய் இளம் வயதில் திருமணம் செய்து நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடுகிறவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோய் உடல் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மரு உருவாக்கும் எச்பிவி என்னும் வைரஸ் கிருமியால் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் உடலுறவின்போதும், அதற்கு பின்னும் வலி ஏற்படுவது, உடலுறவு பின் உதிரப்போக்கு, மாதவிடாய் நாட்களுக்கு இடையிலும், மாதவிடாய் நின்ற பின்பும் உதிரப்போக்கு ஏற்படுவது,  வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். கருப்பை வாயில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து புற்றுநோய் ஏற்படாமலும் மற்றும் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் கண்டறியவும் பல்வேறு பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்றா நோய்கள் பிரிவில் செய்யப்படுகின்றன. வயா, வில்லை, கால்போஸ்கோபி, பாப் பரிசோதனைகள் ஆகியவை செய்யப்படுகின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட உடலுறவில் ஈடுபடும் அனைத்து பெண்களும் கட்டாயமாக இந்த பரிசோதனைகளை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும். தொற்ற நோய்கள் கண்டறியும் சோதனைகள் முறையாக செய்யப்படுவதாலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும் இந்த புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவதாலும், பெண்களின் தற்போதைய திருமண வயது தள்ளிப் போவதாலும் கருப்பை வாய் புற்றுநோய் குறைந்து வருகிறது.
*கருப்பை உள் புற்றுநோய்*
அதற்கு பதிலாக வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றம், உடல் பருமன், போன்ற காரணங்களால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால், எண்டோ மெட்ரியல் கேன்சர் அதாவது கருப்பை உள்பகுதி கேன்சர் ஏற்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. மாதவிடாய் நாட்கள் சீராக இல்லாமல் அடிக்கடி வருவது, தொடர்ந்து உதிரப்போக்கு இருப்பது, பிறப்பு உறுப்பில் ரத்தம் வருவது, அடிவயிறு வலி  ஆகியன இந்த கேன்சரின் அறிகுறிகள் ஆகும். இதற்கான பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் மருத்துவர்களிடம் முறையாக பெற்று இந்த புற்றுநோய் வருவதற்கு முன்பே தடுத்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய், குடல், இரப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் உள்ளவர்களின், ரத்தம் சம்பந்தமான நெருங்கிய உறவினர்களுக்கு இந்த எண்டோமெட்ரியல் கேன்சர் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே குடும்பத்தில் ஏதேனும் ஒரு புற்றுநோய் உள்ளவர்கள் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் கருப்பை உள்  சோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்து கொண்டு, இந்த புற்றுநோயிலிருந்து காத்துக் கொண்டு நலமுடன் வாழலாம். இவ்வாறு விருத்தாசலம் மகப்பேறு மற்றும்  மகளிர் நல மருத்துவர் டாக்டர் சபரி தெரிவித்தார்.

Saturday, 11 September 2021

மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய இதயத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பாலைவனமாய் 
இருந்த எனது வாழ்க்கை 
சோலை வனமாய் 
மாற காரணமானவள்!

தாய்க்கு பின் தாரம் என்பார்கள்
எனக்கு தாய்க்கும் மேலானவள்,
ஒவ்வொரு படிக்கட்டாய் 
கவனமாய் தாங்கி 
ஏற்றி விடும் வெற்றி தேவதைக்கு இன்று பிறந்த நாள்!

கடல் போல வந்து கவலைகளை மூழ்கடித்தவள்,
வானமாய் விரிந்து 
அன்பை பொழிவதில்
அவளுக்கு நிகர் அவளே!

பொறுமையில் 
பூமாதேவியும் 
என் தேவியை பார்த்து பூரிப்படைவாள்,
எனக்குள் சங்கீதமாய் ஒலித்திடும் சங்கீதத்திற்கு இனிய பிறந்த நாள்!

நான் தவறுகள் செய்திடும் போது நெருப்பாய் கொதிப்பவள்!
சிறகொடிந்த எனக்கு
சிறகாய் அமைந்தவளுக்கு இன்று உதயமான நாள்!

ஐம்பூதங்களாய் என்னை காக்கும்
என் இளம் வயது ஏக்கங்களை ஏந்தி 
எல்லாம் வல்ல இறைவன் அருளால் கிடைத்த சக்தி அவளுக்கான நாள்!

என்னுள் இதயமாய் குடிகொண்டு,
என்னை அவளின் இதயம் எனும்
கருவறையில் சுமக்கும் பேராற்றல்
இவ்வுலகில் உதித்த நாள்!

தனது ஆசை, எண்ணம் 
அனைத்தையும் துறந்து
எனது ஆசை எண்ணங்களை ஏற்று
என்னை ஆளும் என் மணவாட்டிக்கு
இன்று மகிழ்ச்சி திருநாள்!

ஒரு ஆண் பால் 
வாழ்வதும் வீழ்வதும்
பெண் பாலை சாரும்,
என்னை வீழ்த்தாமல்,
மற்றவர் வாழ்த்த 
தன்னையே வருத்திக் கொள்ளும் 
என் தங்கம் 
இந்த உலகத்தில் தோன்றிய 
பொன் நாள்!

நான் பிரகாசிக்க
என்னுள் கல்லாய் பதிந்து,
ஜொலிக்க வைக்கும் 
என் வைரத்தை 
நான் வாழ்த்தும் நாள்!

என்னில் சரிபாதியான 
என் அன்புக்கு, காதலுக்கு, அறிவுக்கு, புகழுக்கு
உகந்த நாள்! 
இன்று போல என்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!
- - - - - - -
வீரா

Wednesday, 8 September 2021

த்ருஷா

ரோசாப் பூ பூத்தால் தான் அழகு,
திருஷா சிரிச்சாலே பேரழகு!

ஒவ்வொரு காட்சியிலும்
திருவிழா காட்சியாய்
கொள்ளை கொள்ளும்
இயற்கை அழகு அவள்!

சீன் போடும் தத்ரூபம்
அவளை விஞ்சிட
சினிமா உலகில்
நாயகிகள் யார் இருக்கா!

உலக அழகியை தேடி 
போட்டி வைக்கிறார்களாம்,
திருஷாவை காணா
நயவஞ்சகர்கள்!

மேக்கப் போட்டு அழகை கூட்டும் கன்னிமார்களே,
மேக்கப் இல்லா அழகியை,
காண கண் கோடி வேண்டும்!

திருஷாவை கண்டு
கண்வைக்காமல்
அவள் போடும் சீனை கண்டு
ரசித்து செல்லுங்கள்!

அவள் சிரித்தாள்
குத்தாளத்து அருவி ஆர்பரிக்கும்!

பேசினால் ஆலங்கட்டி மழை கொட்டும்!

நடந்தால் வாத்துகள்
தெரித்து ஓடும்!

வெட்கப்பட்டால் மொட்டுகள் கூட  சிவந்து மலரும்!

அவள் பேரழகை காண
ஒரு பூ கொடுத்தால் போதும்,
மயக்கிவிடலாம்,

மழை வரும் போது மட்டும்
தோகையை விரிக்கும் மயில் போல
பூ கொடுக்கும் போது மட்டுமே மயங்கும் பூங்குயில் அவள்!
😁😁😁😁💐💐💐