Wednesday, 22 November 2017

தூக்கிலிட்ட நாக்கு

தூக்கிலிட்ட நாக்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நாக்குக்கு நரம்பில்லை
எந்தப்பக்கமும் சுழலும் நாக்கு,
எதையும் பேசிடும் நாக்கு,
ஊர் வம்பை வாங்கிடும் நாக்கு

மதியால் கெட்டவர் சிலர்
நாக்கால் கெட்டவரோ பலர்.
மற்றவரின் நாக்கினால்
அரசனும் நீதி தவறினான் அன்று.

விதியை வென்றிடலாம் மதியாலே,
நாக்கை வென்றிட முடியுமோ!
காரியம் சாதிக்கும் நாக்குகளால்
தீங்குகள் வந்து சேருமே.

நல்லவர்கள் கெட்டனர் நாக்கினால்
பாண்டவர்கள் வீழ்ந்தனர் நாக்கினால்,
விதியே விளையாண்டாலும்,
மதியே மயங்கினாலும்
நாக்கு அடங்க மறுத்திடுமே!

பொன்னைக் கொட்டினால் அள்ளிடலாம்.
சொற்களைக் கொட்டினால்
அள்ளுவது கடினமே!
அடித்ததை உடன் மறந்திடலாம்,
நாக்கால் பேசியது மறக்குமா.

நாவடக்கம் காக்க வேண்டும்,
நல்லதையே பேச வேண்டும்,
செய்வதை மட்டும் கூற வேண்டும்
செய்ய முடியாததை கூறிட வேண்டாம்.
தூக்கிலிட்ட நாக்காய்
விழிக்க வேண்டாம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment