கிராமத்தில் மழை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கிராமத்தில் மழை
பெய்தாலே போதும்
சின்னஞ் சிறு குழந்தைகளும்
நனைந்திடும், ஆட்டம் போடும்
குடையெல்லாம் ஏது
சாக்கு மடிப்பே குடையாய் மாறும்
உடுத்தும் உடையும் தலையில்
முக்காடாய் விழும்
சுடச் சுட பணியாரங்கள் வேகும்
கதைகள் பேசியே நேரமோ ஓடும்
புளியங்கொட்டை வறுவல்
பல்லிலே கடிபடும்
பொறித்த அரிசியும்
சர்க்கரையும் வாயிலே
சண்டை போடும்
வேலையில்லாமல் பொழுதும் போகாது
பல்லாங்குழி ஆடிடாமல்
மழைக்காலம் ஓடாது
குளிரிலே உடலும் நடுங்கும்
கூரையிலே மழையும் ஒழுகும்
பாத்திரங்கள் தண்ணீரை ஏந்தும்
மரவட்டை தானாய் விழும்
மண்புழுக்கள் நெளிந்து செல்லும்
அட்டைப்பூச்சிகள் மிதந்தே வரும்
இளஞ்சிட்டுக்கள் விடும்
காகித கப்பல்கள்
மழை நீரோடு மிதந்து போகும்
ஏரிக்குளங்கள் நிரம்பும்
நிலமெல்லாம் பசுமை பூக்கும்
இலை உதிர்த்த தாவரங்கள்
உயிராய் பெருகும்
நகரத்தில் மழை பெய்தாலே
சாக்கடலில் கலக்கும்
கிராமத்தில் மழை பெய்தாலே
நன்னீராய் பெருகும்
விவசாயம் செழிக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - - - =
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment