தீபாவளி தித்திக்கும்,
உறவுகளுக்கு பகிர்ந்து தரும்
பலகாரம் இனிக்கும்,
குடும்பமாய் குதுகளிக்கும்
பொழுதுகள் சுவைக்கும்,
அப்பொழுது கரும்பை விட இனிக்கும்.
தங்கைக்கு அண்ணன் தரும்
சீர் வரிசையால்
பெண்ணுக்கு மகிழ்ச்சி பெருக்கும்,
மச்சானுக்கு மாமன் தரும்
புது துணியால் மகிழ்ச்சி துளிர்க்கும்.
தாத்தா, பாட்டி,
தாய் தந்தை ஆசி கிடைக்கும்,
அதனோடு செலவுக்கு
பைசாவும் கிடைக்கும்.
எங்கெங்கோ பிரிந்து கிடக்கும்
குடும்ப உறவுகளை இணைக்கும்,
வருடம் முழுதும் சேமித்த சேமிப்பின்
ஒரு பங்கை கரைக்கும்,
இதில் குட்டீஸ்கள் வெடிக்கும்
பட்டாசுகள் காதை பிளக்கும்,
சைவமோ, அசைவமோ
வீடுகளில் மணமாய் மணக்கும்,
எண்ணெய் சட்டியில்
எண்ணெய் கொதியாய் கொதிக்கும்,
பல் போன பெருசுகளுக்கு
வாயில் மெது வடை மிதக்கும்.
வண்ண வண்ண பட்டாசுகள்
கண்ணை பறிக்கும்,
பலர் விடும் ராக்கெட்டுகள்
விண்ணை கடக்கும்,
சாட்டை கையில் சுற்றும்
அப்போதே இன்பம் கிடைக்கும்,
இவற்றை பார்த்து செல்லும்
ஏழை குழந்தையின் ஏக்கம்,
நம் இதயத்தில் கணக்கும்,
பணம் புகையானதற்கு செலவிட்ட தொகையை
அக்குழந்தைக்கு செலவிட்டிருக்கலாமே!
என நினைக்கையில் தான்
மனம் வலிக்கும்.
என்ன செய்ய தீபாவளி
கடந்து விட்டதே,
அடுத்த தீபாவளிக்கு பார்த்துக்கலாம்.
அடுத்த தீபாவளி வந்தது,
அதுவும் கடக்கும் போது தான்
நினைவுக்கு வந்தது,
ஏழை குழந்தையின் ஏக்கப் பார்வை,
இதுதான் தொடரும்
அடுத்த தீபாவளிக்கும்,
நம் கொடை உள்ளம் அப்படி.
------------------------
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment