1.அம்மாவுக்கு பத்து
- - - - - - - - - - - - - - - - - - - -
மூன்றெழுத்து மந்திரம்
உயிர் கொடுத்த தந்திரம்
விதையினால் செடியாகி
மரமாகி, பூவாகி
கல்லடிகள் பல பட்டாய்
மனம் புண்ணாகி வெந்தாய்
பெண்ணாய் பிறந்ததாலே
உதிரத்தின் உதவியாலே
என்னை உதிர வைத்தாய்
எமன் வீட்டு கதவை தட்டியே
மீண்டும் பிறந்தாய் நீயே
என் தாயே!
அம்மா என்ற என் ஆன்மாவே
நீ இருக்கும் இடம் நோக்குகிறேன்
மனதால் வணங்குகிறேன்
----------------------------------
2.
மூன்றின் அம்சம் நீ
அன்பின் அடையாளம் நீ
பாசத்தின் ஊற்றாய் நீ
தாலாட்டும் போது கலைவாணியாய்
சீராட்டும் போது தேவியாய்
கண்டிக்கும் போது பராசக்தியாய்
மும்மூர்த்திகளின் வரமாய் நீ
எழுந்தருளினாய் அன்னையாய்
எனக்கு தாயாய் ஆனாய்
உயிர் கொடுத்தாய் எனக்கு
வணங்குகிறேன் அன்னையே!
தாய் என்ற பதவியளித்தேன் உனக்கு
எனக்காக மெழுகாய் உருகி
வாழ்வு முழுவதும் ஒளி வீசுகிறாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
3.
இரவு பிறந்தது
பெற்ற மகனை காணலையே
முச்சந்தி வரை அரவம் இல்லை
பதை பதைத்தது மனம்
துடிதுடித்தது நெஞ்சம்
சூடானது ரத்தம்
நித்தம் இதே கதையாக
ரத்த கொதிப்பின் வரவை
தடுக்க மகன் தான் வருவானோ!
உளறல் சத்தம் கேட்க
ஆபாச வார்த்தைகள் காதை பிளக்க
மது அரக்கனின் பிடியில் கண்டாள் மகனை
அவள் கண்ணில் அங்கே ரத்த நீர்
மனம் ஊனமாகி
உடல் முடமாகி
கேட்கத்தான் நாதியன்று
கிடந்திட்டால் தரையில் கிழத்தியாய்
பார்க்காமல் சென்றிட்டான் மகன்
கண்ணே சாப்பிடடா,
குடல் ஓட்டிடுமடா /
கவலையான குரலில்
காதுகள் அடைக்க
வாய் குழற
ஏதும் உண்ணா வெற்றுடலாய்
மகனிடம் கூறுகிறாள்,
தாய் பாசத்தின் உச்சக்கட்டம் இது தானோ,
_____________________
4.
பெற்ற தகப்பன் ஏழை
அவனுக்கு பிறந்ததோ பெண்
முன்னவளும் பெண்,
பின்னவளும் பெண்ணாக
கள்ளிப்பால் எட்டிப் பார்த்தும்
அவள் தாயின் கண்ணீரால் காக்கப்பட்டாள்,
வளர்க்கப்பட்டாள்,
கட்டிளங்குமரியானாள்,
அத்தை மகனை மணம் செய்தாள்,
தலையில் எழுதிய எழுத்தோ என்னவோ
அங்கும் அவளை ஏழ்மை குடிகொண்டது
மணி முக்தாற்றங்கரையிலே
வண்டல் மண்ணில் உழுதாள்,
உழன்றாள்,
களை வெட்டி, நீர் பாய்த்து,
நடவு நட்டு ஏழ்மையை துரத்த
பாடுபடவே பிறந்த ஜென்மமாய்
என்னையும் பெற்றெடுத்தாள்
ஏழ்மைக்கு தத்துக் கொடுத்தாள்,
நான் செல்ல முடியா தேசம் சென்றாள்,
கலிகாலத்தில்
தன்னந்தனியாய் விட்டுச் சென்றாள்,
மழையைக் காணா பயிராக
தாயை காணாமல் தவிக்கிறேன்
அன்புக்கு நான் ஏங்கி நின்றேன்,
தாயை விலை கொடுத்து வாங்க
ஆசை கொண்டேன்,
தாயார்கள் பலர் இருக்க
அவள் அன்பிற்கு நான் அடிமையாக
அந்த தாய்பந்தம் கிடைக்குமோ என்று
ஏக்கத்தில் தவிக்கிறேன்,
உயிரை துறந்து
மறு ஜென்மம் நானெடுத்து
தாய் பாசத்தை அனுபவிக்க போகின்றேன்,
நான் செல்லும் பாதை சரிதானே
- - - - - - - - - - - - - - - - - - - - - -
5.
மேகம் இன்றி வானம் கருக்காது
மழையின்றி பயிர் வாழாது
ஒளியின்றி பனித்துளி உருகாது
வானம் இன்றி சூரியன் இருக்காது
நிலவு இன்றி இரவுகள் போகாது
கரையைத் தாண்டி அலைகள் கடக்காது,
தென்றல் இன்றி கவிதைகள் பிறக்காது
மொழியின்றி மவுனங்கள் கலையாது
சுடர் இன்றி இருளும் அகலாது
சுவர் இன்றி சித்திரம் இராது
சோலையின்றி கரும்பும் வளராது
குருத்தொடிந்து மரமும் வாழாது
பெண்ணின்றி ஆண் வர்க்கம் தழைக்காது
ஆடவர் இன்றி பெண்ணால் ஆள முடியாது,
ஆணும் பெண்னும் சமமாக
பெற்றெடுத்தவள் வளர்க்க வேண்டும்
வேறுபாடுகள் களைய வேண்டும்
அம்மா அதிகாரம்
பேதமைகளை களைய வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
6.
அன்பை ஊட்டினாய்
ஆணவத்தோடு வளர்த்தெடுத்தாய்
இன்முகம் கொண்டவளாய்
ஈகை குணம் கொண்டு
உதவிகள் செய்திட்டாய்
ஊருக்கெல்லாம் முன்மாதிரியாய்
எரும்புக்கும் உணவளித்தாய்
ஏறுவைப் போல் காத்திட்டாய்
ஐந்தினை நிலங்களிலும்
ஒற்றுமையை வளர்த்திட்டாய்
ஓங்கிய புகழின் உச்சத்தில்
ஒளவையை போல் விளங்கிட்டாய்
அஃதுவே அன்னையின் குண நலன்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
7.
அன்பை ஊட்டிய தாயே
அறிவையும் வளர்த்தாய் நீயே
பொறாமைகளை வெறுத்தாய்
புறம் கூற்றுக்களை நிராகரித்தாய்
உதவிகள் செய்திட கற்று தந்தாய்
இனிமையாய் பேச பழக்கிட்டாய்
உறவுகள் தேவையென்றாய்
உற்றார்களுக்கு உதவிட செய்தாய்
மூத்தோரை வணங்க செய்தாய்
இறைவனை தொழுதிடு என்றாய்
உபசரிக்க உத்தரவிட்டாய்
உழைக்கவும் கற்றுத் தந்தாய்
தானங்கள் செய்திடு என்றாய்
தர்மம் தலையை காக்க வைத்தாய்
தவறுகளை திருத்திடு என்றாய்
மீறும்போது கண்டித்தாய்
தண்டிக்க நான் இல்லை
கண்டிப்பதே தாய் வேலை என
உணர வைத்தாய்
அன்னை என்ற பதவியினால்
அதிகாரம் காட்டாமலே
அரவணைப்பால் உயர்த்திட்டாய்
உயர்ந்ததும் உமை காணாமல்
நான் உயர்ந்தும் என்னப் பயன்
- - - - - - - - - - - - - - - - - - - - -
8.
அன்னையை போற்றுவோம்
அம்மா என அன்பாய் அழைப்போம்
தாயே என தினந்தோறும் வணங்குவோம்
தயங்காமல் தவறாமல் உணவளிப்போம்
அன்னையின்றி பிள்ளைகள் இல்லை
பின்னே ஏன் அவளுக்கு முதியோர் இல்லம்
பாழாய் போகும் உறவுகள் வேண்டாம்
என்றும் நேசிக்கும் தாய் தான் வேண்டும்
மனைவி சுகம் தான் கொடுப்பாள்
தாய் தான் சுகமளிப்பாள்
தவறாமல் நேசிப்போம்
நித்தமும் பூஜிப்போம்
பூஜை அறைக்கு அனுப்பிடாதீர்
ஜென்மங்கள் பல பிறப்பெடுத்தாலும்
தாய் கிடைப்பது அரிது என்பார்
அம்மாவை காத்திடுவோம்
-------------------------------
9.
மானிட பிறப்போ
மிருக பிறப்போ
எப்பிறப்பு நீயெடுப்பினும்
தாயின்றி பிறப்பெடுக்க முடியாது
நாய்க்கும் உண்டு
நரிக்கும் உண்டு
காக்கைக்கும் உண்டு
குருவிக்கும் உண்டு
தாய் பாசம் மானிடனுக்கு ஏன் இல்லை
பறவைகள் தேடிச் சென்று
தன் குஞ்சுக்கு இரை ஊட்டிடும்
தன் குஞ்சை பொன் குஞ்சாய் போற்றிடும்
தாயும் தன் மகனை போற்றித்தான்
வளர்க்கிறாள்,
ஏனோ இறுதி காலம் வெறுமையாக
மகனின்றி வாடித் தான் போகின்றாள்
------------------
10.
நாயை வளர்த்தால்
தாய்க்கு வழிகாட்டும்
மகனை வளர்த்தால்
கண்ணீரை மட்டுமே வரவைக்கும்
பொல்லாத உலகில்
பொங்கி எழுந்து வளர்த்தாள் தாய்,
கலிகால காவலுலகில்
முதியோர் இல்லத்தில் வளர்க்கிறான்
தன் தாயை மகன் காத்திடுவதாய் நினைத்து
பாவ உலகில்
உன்னை பெற்றதால்
அன்னை புண்ணியம் அடைந்தாள்,
நீ பிறந்ததால்
பாவத்தை (உன்னை)அவள் சுமக்கின்றாள்
No comments:
Post a Comment