Sunday, 8 September 2019

முதல் நெய் என்ற ஊர் #முதனை ஆனது எப்படி












முதல் நெய் என்ற ஊர் #முதனை ஆனது எப்படி
------------------------------------------------------------------------
விருத்தாசலம் அருகே முதனை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முதுகுன்றீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், செம்புலிங்க அய்யனார் என்ற 2 கோவில்களும் பிரசித்திப்பெற்ற கோவில்களாகும். முந்தரி காடுகள் சூழ நடுவே அமைந்துள்ள இந்த கிராமம். ஈசன் தலம் இருப்பதாலோ என்னவோ எப்பொழுது பார்த்தாலும் இந்த கிராமத்தில் அமைதி நிலவும். மேலும் இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள குளக்கரையும், குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலர்களும் எழில் கொஞ்சும். குளக்கரையில் அப்பகுதி பெருசுகள் அமர்ந்து தங்கள் பழைய கதைகளையும் அசைப்போட்டு கொண்டிருப்பார்கள்.
#காந்திக்கு கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்:
அந்த அழகான குளக்கரையில்தான் அமைந்துள்ளது, காந்தி கோவில். ஆம் மகாத்மா காந்திக்கே கோவில் கட்டி வழிப்பட்ட முதல் கிராமம் முதனை கிராமம் தான். காந்தியடிகள் இறந்தவுடன், இந்த கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்க படையாட்சி என்பவர் காந்தியின் அஸ்தியை எடுத்து வந்து அதனை பாதுகாக்கும் வகையில் சிறிய கோவில் அமைத்து அந்த அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் காந்திக்கு உருவ சிலை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலிலும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தியடிகள் பிறந்த தினம், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய தினங்கள் அன்று இந்த கோவிலில் காந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுடன், கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள தேசிய கொடியும் வானுயர பறக்கும். தற்போது இந்த கோவிலை செம்புலிங்க படையாட்சியாரின் பேரன் பாரதிதாசன் என்பவர் பராமரித்து வருகிறார்.
மகாத்மாகவே இருந்தாலும் அவரையும் ஒரு கூட்டம் வசைபாடிகொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு கோவில் கட்டி வழிபடுவதுடன், சுதந்திரம் பெற்றுதந்த அவருக்கு உண்மையாக நன்றி செலுத்தி வருகின்றனர், முதனை கிராம வாசிகன்.
#முதல் நெய்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்ற போது தீபத்திற்கு முதன் முதலாக இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தான் தூய்மையான நெய் வழங்கியுள்ளனர். இதற்காக தீபத்திற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே இந்த கிராம மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று பல நாட்கள் வெய்யில், மழை என பாராமல் காத்திருந்து இறைவனுக்கு நெய் காணிக்கையாக அளித்தனர். அதனால் இந்த கிராமத்தை முதல் நெய் என அழைக்கப்பட்டு அது மருவி முதநெய் என அழைக்கப்பட்டு தற்போது முதனை ஆகிவிட்டது. தற்போதும் கூட முதனையில் இருந்து குடிபெயர்ந்து திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள்தான் ஒவ்வொரு தீபத்தின் போதும் முதல் நெய்யை வழங்கி வருகின்றனர்.
##முதுகுன்றீஸ்வரர் வரலாறு:
கி.பி.12ம் நூற்றாண்டின் இறுதியில் நடுநாட்டினை ஆட்சி புரிந்த காடவர் தலைவர்களான கச்சிராயர்களில் ஒருவர் முதனை கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அனுதினமும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்திற்கு நேரில் சென்று பழமலைநாதர் எனும் விருத்தகிரீஸ்வரரை வணங்கி வந்தார். எவ்வளவு துன்பங்கள் கஷ்டங்கள் வந்தாலும் பழமலைநாதரை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டதும், அவர் உணவருந்தாமல் இதர வேலைகளில் ஈடுபடாமல் சதா பழமலைநாதரையே நினைத்து தன்னை வருத்தி கொண்டு உள்ளம் உருகினார். இவரின் பக்தி மற்றும் அன்பிற்கு இணங்கி பழமலைநாதர் அருள்புரிய எண்ணினார். மேலும் தாமே முன்வந்து பெரியாநாயகியுடன் ரிஷப வாகனத்தில் நேரடியாக காட்சி அளித்து அருள்புரிந்தார்.
அந்த கச்சிராய மன்னர் இறைவனை நேரில் கண்டு தரிசித்து பின்னர் பிறந்த பயனை பெற்றோம் என மகிழ்ந்து பழமலைநாதருக்கும், பெரியாயகிக்கும் திருக்கோவில் அமைத்து வழிப்பட்டார். அவர் வழிபடும் காட்சி முதனை முதுகுன்றீஸ்வரர் கோவிலில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
#செம்புலிங்க அய்யனார் கோவில்:
முதனை கிராமத்தின் மற்றொரு அம்சம் செம்புலிங்க அய்யனார் கோவில். ஒவ்வொரு தைப்பூசத்தன்றும் முதுகுன்றீஸ்வரருக்கும், செம்புலிங்க அய்யனாருக்கும் விழா நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடைபெறும் விழாவில் செம்புலிங்க அய்யனார் கோவில் அருகே உள்ள சித்தர் ஏரியில் நடக்கும் வேல் மூழ்குதல் நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் திரண்டு வருவார்கள். அந்த அளவிற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்ளில் வசிக்கும் மக்களுக்கு குல தெய்வமாக இந்த செம்புலிங்க அய்யனார் அருள் பாளித்து வருகிறார்.
#மூலிகை காட்டின் சிறப்பு:
இந்த கோவிலை சுற்றிலும் காடு நிறைந்த பகுதியாகும். காட்டிற்கு நடுவே அமைதியான சூழலில் வெய்யிலின் தாக்கம் தெரியாத அளவிற்கு செடி கொடிகள் படர்ந்த நிலையில் கோவில் அமைந்துள்ளது. இந்த காட்டில் ஒரு முள் செடியை கூட காணமுடியாதாம். அதற்கு காரணம் முன்னொரு காலத்தில் ராணி ஒருவர் இந்த கோவிலை வலம் வந்த போது முள் செடி ஒன்று ராணியின் உடையில் பட்டு உடை கிழிந்தததால் தன்னுடைய அழகான உடை கிழிந்ததை கண்டு ஆத்திரமடைந்த ராணி இந்த காட்டில் முள்செடிகளே இல்லாமல் அழியட்டும் என சபித்துள்ளார். இதனால் இந்த காட்டில் ஒரு முள் செடி கூட முளைப்பதில்லை என கூறுகின்றனர். அதேபோல காடு முழுவதும் சுற்றி பார்த்தும் ஒரு முள் செடி கூட காண கிடைக்கவில்லை. காட்டின் எல்லை பகுதியை தாண்டிதான் முள் செடிகள் முளைத்துள்ளன.
இந்த காட்டில் வெண்ணாங்குகொடி, காய்ச்சல் மரம், பொருசு மரம், வம்பரம், துருஞ்சி, அழிஞ்சி, வெப்பாலை, தேத்தான் கொட்டை, சானாமரம், உதயம், காட்டு மா, பூலா, ஈருகுலி, புடங்குநாசி, ரெட்டிகொட்டை, வெள்ளை இண்டு, நர்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகை செடி, கொடிகள், மரங்கள் நிறைந்துள்ளன.
முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் சித்தர்கள் வாழ்ந்து வந்ததாகவும், சித்தர்கள் நீராடியதால் செம்புலிங்க அய்யனார் கோவிலுக்கு அருகில் உள்ள சித்தேரி என்ற குளம் சித்தர் ஏரி என அழைக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் திருவண்ணாமலை செல்லும் போது விருத்தாலசம் விருத்தகிரீஸ்வரர் கோவில், முதுகுன்றீஸ்வரர் கோவில்களை தரிசினம் செய்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் இப்பகுதி காடு பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்தில் முதனை கிராமம் அமைந்துள்ளது. விருத்தாசலம்&கடலூர் சாலையில் இருந்து அரசகுழியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். முந்தரி விவசாயமே இப்பகுதியில் பிரதான தொழிலாகும்.
இந்த கிராமம் பழங்காலத்தில் தோன்றிய கிராமம் என்பதற்கு சாட்சியாக இந்த கிராமப்பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வரலாற்று துறை அறிஞர்களும் இந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment