Thursday, 26 September 2019

சப்தகூடல் சாத்துக்கூடல் ஆனது எப்படி

சப்தகூடல் சாத்துக்கூடல் ஆனது எப்படி:

விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கு திசையில் அமைந்துள்ள அழகான கிராமம் சாத்துக்கூடல். கிராமத்தை சுற்றி








லும் விவசாய பச்சை பசேல் விளைநிலங்கள். ஊருக்கு நடுவே கைலாசநாதர் என்ற சிவதலமும், இந்த தலத்திற்கு அருகில் அமைந்துள்ள அப்பர் மடமும் இந்த கிராமத்தின் பழமையை பறைசாற்றுகிறது. இங்கு அமைந்துள்ள அப்பர் மடத்தில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர் தங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள சிவதலங்களுக்கு சென்று ஆன்மீக பணிகளை மேற்கொண்டனர் என வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பண்டைய காலத்தில் இந்த கிராமத்தில் உப்பு வியாபாரம் கொடிகட்டி பறந்துள்ளது. சாத்து என்றால் உப்பு என்ற பொருளும் உண்டு. உப்பு வியாபாரிகள் ஒன்று கூடும் இடம் என்பதால் சாத்துக்கூடல் என்ற பெயர் இந்த கிராமத்திற்கு உருவானதாக கூறப்படுகிறது. மேலும் சப்த கன்னிகளான 7 கன்னிமார்களும், தேவலோகத்தில் இருந்து மண்ணுலகிற்கு சாத்துக்கூடல் கிராமத்திற்கு வந்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களால் தேவலோகம் செல்ல முடியாததால் பூமியிலேயே தங்கி விட்டனர். 7 கன்னிமார்களும் கூடி விளையாடியதால் சப்த கூடல் என இந்த கிராமம் அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் சப்தகூடல் சாத்துக்கூடல் என மருவிவிட்டதாக கூறுப்படுகிறது. இந்த சப்த கன்னிகளுக்கு சாத்துக்கூடலில் இருந்து ரெயிலடி சாலை செல்லும் வழியில் கோவில் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களால் வழிப்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சாத்துக்கூடல் கிராமத்தில் சாதுக்கள் கூடி சங்கமித்திருந்ததால் சாதுக்கள் கூடல் என்று இந்த கிராமம் அழைக்கப்பட்டு நாளடைவில் சாத்துக்கூடலாக மருவியதாகவும் கூறப்படுகிறது. வள்ளலாரை போல வாழ்ந்த மனித உருவிலான சசச்சிதானந்தசுவாமிகளை பூஜிக்கும் விதமாக இந்த கிராமத்தில் மோகனூர் சாதுக்கள் ஒருவரால் சச்சிதானந்தசபை நிறுவப்பட்டுள்ளது. இந்த சபை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இந்த சபையில் சச்சிதானந்தசுவாமிகளுக்கு சித்திரை மாதத்தில் 3 வது வாரத்தில் இருந்து 10 தினங்கள் வரை ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம், அறிவே சற்குரு, சற்குருவே கடவுள் என்ற கொள்கையினை சாதுக்களும், பக்தர்களும், பாடி பூஜித்து வருகிறார்கள்.

இங்கே அனைத்து பிரிவினரும் வசிக்கிறார்கள். இதுவரை பிரிவினை வாதம் என பெரிதாக பிரளயம் பிரச்சினைகள் ஏற்படாதது, மக்களிடையேயான ஒற்றுமையை காட்டுவது தனிச்சிறப்பாக பார்'கப்படுகிறது. இப்பகுதியில்  விவசாயமே பிரதானமாக உள்ளது. முன்னொரு காலத்தில் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை என விளைந்த புண்செய் நிலங்களாக இருந்தன. ஆனால் இன்று நெல், கரும்பு விளையும் நன்செய் நிலமாக உள்ளது.

இந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாகும். இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியில் இருந்து கடந்த ஆண்டுதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சரித்திர நாவல்கள் எழுதி புகழ்பெற்ற நாவலாசிரியர் கவுதம நீலம்பரன் என்பவர் வளர்ந்த ஊராகவும், கடல்கடந்து தம் சொல் வலிமையால் புகழடைந்த அமுதமொழி சுவாமிநாதன் பிள்ளை என்பவர் பிறந்த ஊராகவும், தமிழறிஞர் மா.நன்னன் என்பவர் வளர்ந்த ஊராகவும் இந்த ஊர் போற்றப்படுகிறது.

மேலும் இந்த கிராமத்தின் எல்லையில் அமைதியான இடத்தில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் ஊரையே அழிக்கும் அளவுக்கு இந்த கிராமத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஊரை காக்கும் எல்லைதெய்வமான அய்யனாரை மனதார உருகி வேண்டியுள்ளனர். கிழக்கு முகதாக நின்றிருந்த அய்யனார் மேற்கில் இருந்து கரைபுரண்டு கிராமத்திற்குள் ஓடி வந்த வெள்ளத்தை திரும்பி வெகுண்டெழுந்து பார்க்க வெள்ளம் அடங்கி, இயல்பு நிலை திரும்பியது. அன்றிலிருந்து இந்த அய்யனார் மேற்கு பக்கம் பார்த்து வீரவாளோடு நிற்கிறார். அதனால் இந்த அய்யனாரை வெள்ளம் காத்த அய்யனார் என்று இந்த கிராம மக்களால் அழைத்து வழிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த அய்யனாரை தமிழகம் முழுவதும் பலர் குலதெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.
மேலும் கிராமத்தில் ஆங்காங்கே அரிய வகை நடுகற்கள் அமைந்துள்ளது. அந்த கற்களில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும், உருவங்களும், மிகவும் தொன்மையான கிராமம் என்பதை பறைசாற்றுகிறது. பண்டைய காலத்தில் நடந்த போரின் போது தனது மக்களுக்காகவும், மன்னனுக்காகவும் தன் இன்னுயிர் நீத்த போர் வீரன், படைத்தலைவனுக்கான நினைவு சின்னமாக நடுகல் என்ற வீரக்கல்லினை வடித்து அந்த வீரனை நினைத்து வழிபடுவதை பண்டைய தமிழர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இங்கு அமைந்துள்ள நடுகல் என்ற வீரக்கல்லானது ஆயிரம் ஆண்டுகள் பழமையாக கல் என தெரிய வந்துள்ளது. சோழர் கால கலைப்பாணியில் இருப்பதால் இந்த கிராமத்தில் அவ்வபோது வரலாற்றாய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment