Sunday, 8 September 2019

ஆசிரியர் தமிழ்ச்செல்வி, சமுகத்தில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே எங்கள் லட்சியம் மாணவர்களால் அம்மா என்றழைக்கப்படும் தலைமை ஆசிரியரின் ஆசை



































சமுகத்தில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே எங்கள் லட்சியம்
மாணவர்களால் அம்மா என்றழைக்கப்படும் தலைமை ஆசிரியரின் ஆசை

 மிகவும் பின்தங்கிய கிராமம். அங்கே வண்ணமயமான பள்ளிக்கூடம். தனியார் பள்ளிக்கூடத்திற்கு நிகராக தன் பள்ளியை மாற்றி காட்டியுள்ளார் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர். விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்விதான் அவர். பெயருக்கு ஏற்றார்போல தமிழ்வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள மிகப்பெரிய எழுத்தாளர். அதனால்தான் என்னவோ  தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கான விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் விருது, கலைஞர் பொற்கிழி விருது, முப்பையில் உள்ள ஸ்பேரோ நிறுவனத்தின் விருது, புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திர விருது, விகடனின் அவள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். தனியார் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்கள் கூட தற்போது கோ.ஆதனூர் பள்ளியில்தான் படிப்பேன் என்று அடம் பிடித்து இந்த பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் பலர். தன் பணியை ராஜினமா செய்த பிறகும் மாணவர்கள், பெற்றோர்களின் நெகிழ்ச்சிப் போராட்டத்தால் தன் பணியை மீண்டும் தொடர்கிறார் அவர்.

இவரது படைப்புகளை ஆய்வு எடுத்துக்கொண்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பில்.பி.எச்.டி படிப்புகளை படித்து வருகின்றனர். திருவள்ளுவர், பாரதியார் உள்ளிட்ட கல்கலைகழகங்களின் கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக உள்ளன. ஆசிரியராக 24 வருடங்கள் பணியாற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற அவர் கடலூர் மாவட்டம் வீரட்டிக்குப்பம் அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக தன்சொந்த செலவில் முன்மாதிரி பள்ளியாக மாற்றிக்காட்டினார்.


அவரை நேரில் சந்திப்பதற்காக அவர் பணிபுரியும் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்திற்கு சென்ற போது பள்ளி நுழைவு வாயிலை அடைந்த உடன் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வியை மாணவர்கள் ஓடி வந்து அம்மா என்று அழைத்து வரவேற்பு கொடுப்பதும், அவர் மாணவர்களிடம் காட்டிய பரிவும் பிரமிக்க வைத்தது. மிகவும் தாழ்வாக இருந்த பள்ளிக்கூட வளாகத்தை தன்னுடைய சொந்த செலவிலும், ஊர் முக்கிய பிரமுகர்களின் உதவியாலும் மண்கொண்டு நிரப்பி, மரங்கள் பல நட்டு பராமரித்து வருகிறார் அந்த ஆசிரியர். பள்ளிக்கூடங்களில் தரை தளம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததை சீரமைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கற்பகநாதர் குளத்தில் ஹோமியோபதி டாக்டர் சுப்ரமணியன்&முத்துலட்சுமி என்ற தம்பதிக்கு 4.5.1971 அன்று பிறந்தேன் என்று ஆரம்பித்த அவர் தன் வாழ்க்கை குறித்தும், பணி குறித்தும் நம்மிடையே பேசினார். பள்ளிக்கல்வியை  அரசுப்பள்ளியில் படித்து திருத்துறைபூண்டியில் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்தேன். பிறகு 16 ம் வயதில் 1986 ம் ஆண்டு நான் படித்த இளங்கோ உதவி பெறும் பள்ளியிலேயே ஆசிரியர் பணி செய்தேன். அப்போது எனக்கு கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. அப்போது என்னுடைய கணவர் ஆசிரியர் கரிகாலன் புகைப்பட மனிதர்கள் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டார். ரவிச்சந்திரன் என்ற தம்பியின் மூலம் அவரது கவிதை தொகுப்பிற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விமர்சனத்தை கடிதத்தில் எழுதி அனுப்பினேன். அதில் இருந்து எங்களுக்குள் இருந்த கடித தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது.

எங்கள் குடும்பம் கட்டுகோப்பான குடும்பம் என்பதால் 2 வருடம் வரை நேரில் சந்திக்க முடியவில்லை.  தொடர்ந்து இருவீட்டார் சம்மததுத்துடன் பழனிபாரதி, அறிவுமதி, பிரபஞ்சன், இந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஒரு இலக்கிய நிகழ்வை போல எங்கள் திருமணம் 9.5.1993 அன்று நடந்தேறியது. எங்கள் காதலின் பரிசாக சிந்து(24), சுடர்(23), கார்க்கி(20) ஆகிய 3 குழந்தைகள் பிறந்தனர். சிந்துவும், சுடரும் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு டாக்டர்களாகி விட்டனர். மகன் கார்க்கி பி.ஏ,  எல்.எல்.பி. ஹானர்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். 3 குழந்தைகளும் பிறந்த பிறகுதான் நான் எழுத்தாளராக மாறினேன். என்னுடைய கணவர் கரிகாலன் எழுத்தாளர், ஆசிரியர். அவருடைய களம் புதிது என்ற இலக்கிய கூட்டம் நடத்தி வந்தார். அப்போது மிக முக்கியமான எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதுதான் நான் சிறுகதை எழுத முயற்சி செய்தேன். ஒரு கதைக்கு முடிவு தெரியாமல் நீண்டுசென்றது. முடிவு வந்தவுடன் அதுவே மாணிக்கம் என்ற நான் எழுதிய முதல் நாவலானது. மாணிக்கம் நாவலுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி, பொன்னாச்சரம், தொப்புள்கொடி ஆகிய நாவல்களை எழுதியுள்ளேன். பள்ளிப்பொழுதுகள் என்ற நாவலை எழுதிகொண்டிருக்கிறேன். சாமுண்டி, தமிழ்ச்செல்வி சிறுகதைகள் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.

கடந்த 2015ம் ஆண்டுதான் கம்மாபுரம் ஒன்றியம் கோ.ஆதனூர் பள்ளிக்கூடத்திற்கு பணி மாறுதல் பெற்று தலைமை ஆசிரியராக பணியேற்றி வருகிறேன். அந்த பள்ளிக்கூடத்திற்கு நான் வந்த போது ஒரு பள்ளிக்கூடம் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ? அதனை போன்று இருந்தது. மழைபெய்தால் ஒரு குட்டையின் நடுவில் உள்ள ஒரு பள்ளிக்யை போன்று பள்ளிக்கூடத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கும். மழைநின்றாலும் பள்ளியை திறப்பதற்கு 3, 4 நாட்கள் ஆகும். என் சொந்த செலவிலும், நண்பர்களின் உதவியுடனும், ஊர் முக்கிய பிரமுகர்களின் அன்பளிப்பாலும் தாழ்வான பகுதிகளை மேடாக்கினேன். பள்ளிக்கூடத்திற்கு வரும் சாலை சேரும், சகதியுமாக இருக்கும். அந்த சாலையை மேம்படுத்த பல போராட்டங்களை சந்திக்க வேண்டியதாகியிருந்தது. இன்று வகுப்பறை சுவர்கள் வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது. பீரோ, கணினி, அச்சுஇயந்திரங்கள், மேஜை, நாற்காலிகள் அனைத்து வசதிகள் என தனியார் பள்ளிக்கூடத்திற்கு இணையான வசதிகளை செய்துள்ளோம்.

மாணவர்கள் அம்மா என்று அழைப்பதற்கான காரணம் குறித்து கேட்ட போது& மாணவர்கள் என்னை அம்மா என்று அழைக்கும் போது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அந்த அளவிற்கு மாணவர்களை நான் நேசிக்கின்றேன். மாணவர்கள் என்னை நேசிக்கின்றனர். மாணவர்களை வழக்கமான செயல்பாடுகளில் இருந்து மாற்றி புதிய அனுகுமுறையில் அனுகும்போது மாணவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள். நான் மனதளவில் ஒரு பிரச்சினை குறித்து பாதிக்கப்பட்ட போது விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் என் ராஜினமா கடிதத்தை கொடுத்தேன். நான் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என தெரிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் என்னை மீண்டும் பணியில் சேரசொல்லி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நான் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். அப்போது மாணவர்களை நான் சந்தித்தப்போது என்னை அம்மா என்று ஓடி வந்து கட்டி அழுதனர். அந்த தருணத்தில் உணர்ச்சிகளை மீறி நானும் குழந்தைகளுடன் அழுதுவிட்டேன். அவர்களுக்காகவே மீண்டும் பணியில் சேர்ந்தேன்.
பள்ளியில் படிப்புக்கு முக்கியத்துவம் தருவதை போல கற்றல்&கற்பித்தல் செயல்பாடுகளுடன் முக்கிய செய்திகள், நாட்டுநடப்பு, அரசியல் நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு அறியப்படுத்துகிறோம். அதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் இன்று ஒரு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையான திறமையுடன் உள்ளனர். 12ம் வகுப்பு தாவரவியல் பாடத்தில் உள்ள செம்பருத்தியின் பாகங்களை எங்கள் பள்ளி மாணவர்கள் அருமையாக பிரித்து அதன் பாகங்களை தெளிவாக கூறி, படமும் வரைவார்கள். மேலும் தினந்தோறும் நடைபெறும் வழிப்பாட்டு கூடங்களில் தமிழர் தொன்மம், வீரம், மன்னர்களின் வரலாறு ஆகிய கதைகளை சொல்லும் போது மாணவர்களை எளிதில் கவரமுடியும். தற்போதைய மாணவர்களுக்கு அறச்சிந்தனை குறைந்து வருகிறது. நாங்கள் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறச்சிந்தனையை வளர்த்து வருகிறோம்.

புத்தகங்களை அட்டையுடன் பராமரிப்பது யார், வகுப்பில் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் மாணவர்கள் யார்? ஒரு வாரத்திற்கு இனிய சொற்களை மட்டும் பேசும் மாணவர்கள் யார், பெரியவர்களை மதிக்கும் மாணவர்கள் யார்? என்பன உள்ளிட்ட மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அதில் 3 பேரை தேர்வு செய்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை சக ஆசிரியர்கள் உதவியுடன், தங்கள் சொந்த செலவில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்குகிறோம். கல்விக்கு இணை செயல்பாடுகள் உள்ளன. இருந்தும் ஒரு மாணவனை நல்ல மனிதராக மாற்ற தேவையான அனைத்து திறன்களையும் பெறுவதற்கு உண்டான கல்வியை வழங்குகிறோம்.
பாட்டு எழுதுதல், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட திறமைகள் எந்த மாணவரிடம் உள்ளதோ? அந்த மாணவரை கண்டறிந்து அவர்களின் திறமையை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி வருகிறோம். எழுத்து, படிப்பு என்றில்லாமல் மற்ற செயல்பாடுகளை செய்ய மாணவர்களை ஊக்குவிக்கும் போது மாணவர்களின் திறமை வளரும். எங்கள் பள்ளி மாணவர்களுடன் தரமான தனியார் பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாது. ஒரு தனியார் பள்ளியில் இருந்து வந்து எங்கள் பள்ளியில் சேரும் மாணவரை விட எங்கள் மாணவர்கள் கற்றலிலும், மற்ற செயல்பாடுகளிலும் நன்றாகவே செயல்படுகின்றனர். அந்த அளவிற்கு எங்கள் மாணவர்களை நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். மாற்றுத்திறன் உடைய 4 மாணவர்கள் எங்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். அந்த மாணவர்களின் தாழ்வு மனப்பான்மை இன்றி மற்ற மாணவர்களுடன்  சகஜமாக பழகி வருகின்றனர். நன்றாக கல்வி பயிலவும் செய்கின்றனர்.

ஒரு மாணவருக்கு பிறந்தநாள் என்றால் எங்கள் பள்ளியில் வரைந்துள்ள பர்த்டே கேக் படத்தில் அந்த மாணவரின் பெயரையும், பெற்றொர் பெயரையும் எழுதி அந்த மாணவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் வாழ்த்துக்கள் கூறுவார்கள். இவையெல்லாம் மாணவர்களுக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் எங்கள் பள்ளியில் கிடைக்கும். அதனால் மாணவர்கள் விடுமுறை எடுக்காமலும், இடைநிற்றல் இல்லாமலும் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு வருகின்றனர்.

ஆசிரியர்கள் இன்று அர்ப்பணிப்போடு உள்ளனர். அதனால் அரசு பள்ளியை மாணவர்கள் தேடி வருவதற்கான வசதிகளை அரசே செய்து தரவேண்டும். மேலும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். பள்ளி மைதானத்தை மேம்படுத்த வேண்டும், வகுப்புக்கு ஒரு டி.வி.,  டி.வி.டி. கணினி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், ஆகியவற்றை செய்து தர வேண்டும்.  தோற்றம் நன்றாக இருந்தால் அரசு பள்ளிக்கூடத்தை மாணவர்கள் நாடி வருவார்கள். இதனால் ஒரு பள்ளிக்கூடத்திற்கு பள்ளியை மேம்படுத்த ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கினால் மேற்கண்ட வசதிகளை செய்து மாணவர்களின் கற்றல் ஆற்றலை தூண்ட முடியும். நல்ல சமுகத்தை ஆசிரியர்கள் உருவாக்குவார்கள். அதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தித்தர வேண்டும். தனியார் பள்ளிக்கூடத்திற்கு இணையாக மேம்பட்ட தரத்திற்கு அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்.

அரசுப்பள்ளியில் படிக்கின்றோம், அரசு பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிக்கிறது என்ற எண்ணங்கள் மாணவர்களுளிடமும், அவர்களுடைய பெற்றோர்களிடமும் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் ஷூ அணிந்து நல்ல சீருடையில் வேனில் ஏறிச்சென்று வருவதை காணும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளும் அவ்வாறு செல்ல வேண்டும் என்று ஏக்கத்தில் உள்ளனர். அந்த ஏக்கத்தை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளில் இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்தால் அரசுப்பள்ளிகளின் தரம் உயரும். இதனை பார்த்தால் பெற்றோர்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை அகலும். தங்கள் குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். இந்த சமுக பொறுப்பு அனைவருக்கும் வரவேண்டும். இந்த வருடம் மட்டும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை பார்த்து 12 தனியார் பள்ளி மாணவர்கள்  எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். கடந்த 2016ம் ஆண்டு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்நிகழ்வில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி பங்கேற்றார். இதேபோல 2017ம் ஆண்டு கல்வியாளர் இனியன் அவர்கள் மூலம் நிகழ்ச்சி நடத்தி அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தியுள்ளேன். ஆண்டு தோறும் வீடு, வீடாக சக ஆசிரியர்களுடன் சென்று பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வலியுறுத்தியுதுடன், வீடுகளிலேயே சேர்க்கை நடத்தி வருகிறோம். வாரந்தோறும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆலோசித்து அதற்கேற்ப கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை செய்து வருகிறோம்.

நாங்கள் பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச்சென்றோம். ஒரு இடத்திற்கு சிறுவர் பூங்காவிற்கு அழைத்துச்சென்ற போது அதில் உள்ள விளையாட்டுக்களை பார்த்ததும் எங்கள் மாணவர்களால் அந்த இடத்தை விட்டு பிரிந்து வர முடியவில்லை. அந்த அனுபவம் கிராமப்புற மாணவர்களுக்கு இல்லை என்பதை நான் அன்று உணர்ந்தேன். அதனை பார்த்த போது நான் மிகவும் வேதனையடைந்தேன். அந்த வசதியை  எங்கள் பள்ளிக்கூடத்திற்கு செய்து தர வேண்டும். என்பதே தற்போதைய ஆசையாக உள்ளது. தன் பிள்ளைக்கு என்ன வேண்டுமோ அதனை செய்து தர ஒரு தாய் ஆசைப்படுவாள். அதை போல இந்த ஆசிரியரும் ஒரு தாயை போல தனது குழந்தைகளுக்காக விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஒரு சிறுவர் பூங்கா ஏற்படுத்தி கொடுக்க ஆசைப்படுவதும், பள்ளியில் உள்ள பிற குறைகளை நிவர்த்தி செய்ய ஆசைப்படுவதும் நியாயமான ஆசைதான். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தாய்தான். ஆனால் ஒரு நல்ல மாணவன் உருவாவது இது போன்ற ஆசிரியர்களால்தான் என்பது நிருபனமாகிறது.

No comments:

Post a Comment