விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்
மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா?
விருத்தாசலம்,
விருத்தாசலம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை, கம்மாபுரம், சிறுபாக்கம், நல்லூர், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை கடலூர் மாவட்டத்தை 2 ஆக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். என்பதுதான். இந்த முழுக்கம் இன்றல்ல, நேற்றல்ல, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னார்காடு வள்ளலார் மாவட்டமாக இருந்த அந்த காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது.
மாவட்டத்திற்குரிய அனைத்து தகுதிகளும் விருத்தாசலம் தொகுதிக்கு உண்டு. அனால் விருத்தாசலத்திற்கு பிறகு உருவான நகரங்களான விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் நகரங்கள் தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டிருக்க, விருத்தாசலம் வளர்ச்சியின் பாதையில் செல்லாமல் அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதுதான் உண்மை. விருத்தாசலம் வளர்ச்சியடைய விருத்தாசலத்தை தலைநகராக கொண்டு தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் மத்தியில் ஆசை இருந்தும் நிராசையாகவே இருந்து வருகிறது.
கூலி தொழிலாளியில் இருந்து மிகப்பெரிய தொழிலதிபர்கள் வரை விருத்தாசலம் மாவட்டமாக உருவாக வேண்டும் என்ற கனவில்தான் உள்ளனர். ஆனால் இந்த கனவு மட்டும் நனவாக வில்லை. இவர்களின் முழக்கம் வெற்று முழக்கம் இல்லை. இதற்கு பல காரணங்களை கூறினாலும், இதுவரை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தேர்வாகததும், எதிர்கட்சி எம்.எல்.ஏ க்களின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்காததும் தான் ஒரே காரணம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த முழுக்கம் ஓங்கி ஒலித்து வருகிறது. தற்போது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பல இணைந்து விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் என்ற இயக்கத்தை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஒலி அரசு காதில்தான் ஏன் விழவில்லை, என தெரியவில்லை.
தி.மு.க எம்.எல்.ஏ வாக இருந்த குழந்தை தமிழரசன், பா.ம.க எம்.எல்.ஏ வாக இருந்த டாக்டர் கோவிந்தசாமி, தே.மு.தி.க எம்.எல்.ஏக்களாக இருந்த நடிகர் விஜயகாந்த், பி.வி.பி முத்துக்குமார், தற்போதைய எம்.எல்.ஏ கலைச்செல்வன் வரை விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத் தொடரிலும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குரல்தான் தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் காதில் விழ வில்லை போல தெரிகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட விருத்தாசலம் தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போம் என்ற வாக்குறுதியை முன்வைத்தே போட்டியிட்டனர். பொதுமக்களும் நமது விருத்தாசலம் மாவட்டமாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வி.டி.கலைச்செல்வனை எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். அ.தி.மு.க அரசுதான் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதனால் தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வந்துவிட்டார். விருத்தாசலம் மாவட்டமாக உதயமாகும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். ஆனால் விருத்தாசலம் நகராட்சியாக உருவெடுத்த காலத்தில் பேரூராட்சியாக இருந்த கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவித்த இந்த அரசு ஏனோ விருத்தாசலத்தை மட்டும் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அரசியல் கட்சிகள் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்போம் என்ற வாக்குறுதியை கொடுத்துதான் விருத்தாசலம் பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வெற்றி பெறுகின்றனர். ஆனால் வெற்றிபெற்றவுடன் அந்த கோரிக்கை கானல் நீர் போல மறைந்து விடுகிறது.
கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு ஏன் புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்?
கடலூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட தொகுதியாக விருத்தாசலம் விளங்கி வருகிறது. விருத்தாசலம் தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகள், மங்கலம்பேட்டை பேரூராட்சி, கம்மாபுரம் ஒன்றியத்தில் பாலக்கொல்லை, மணக்கொல்லை, நடியப்பட்டு, இருளக்குறிச்சி, முடப்புளி, இருப்பு, அம்மேரி, முதனை, பழையப்பட்டினம், கோட்டேரி, பெரியகாப்பான்குளம், கொல்லிருப்பு ஆகிய 12 ஊராட்சிகளும், நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட 29 ஊராட்சிகளும் உள்ளடக்கிய மிகப்பெரிய கிராமங்களைக் கொண்ட தொகுதியாக விருத்தாசலம் விளங்கி வருகிறது.
திட்டக்குடி தொகுதியில் உள்ள மங்களூர், சிறுபாக்கம், தொழுதூர், வேப்பூர், உள்ளிட்ட பகுதிகளும் கிராம பகுதிகளாக உள்ளதோடு மட்டுமல்லாமல் மிகவும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. இப்பகுதி மக்கள் தங்களுடைய அலுவலல் காரணமாக கடலூர் சென்று வரவேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் செலவாகிவிடும். அனைத்து அரசு அதிகாரிகளும் கடலூரில் இருந்து முகாம் பணிக்கு வந்தால் அவர்களுடைய நேரம் விருத்தாசலம் வருவதற்குள் நிறைவடைந்துவிடும். விருத்தாசலத்திற்கு அடுத்துள்ள நல்லூர், வேப்பூர், சிறுபாக்கம், திட்டக்குடி, தொழுதூர், பெண்ணாடம், ஆவினங்குடி உள்ளிட்ட வட்டாரங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. இதற்கு ஒரே காரணம் அதிக தூரம் என்பதுதான்.
கடலூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள சிறுபாக்கம், லட்சுமணாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளுக்கு அரசு அறிவிக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மிகவும் தாமதமாக சென்றடையும். ஒரு சில நேரங்களில் எந்த திட்டங்களும் சென்றடைவதே இல்லை என்பதே இப்பகுதி மக்களின் பெரும் புகாராக உள்ளது. மேலும் திட்டக்குடி, பெண்ணாடம் மங்கலம்பேட்டை பேரூராட்சிகள், மங்களூர், நல்லூர் ஒன்றியங்கள் கடலூரில் உள்ள உயர் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதனால் இத்துறைகளில் பணிபுரியும், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் தங்கள் இஷ்டம் போல பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்பட்டால் இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சியடையும். சுகாதாரம் பெருகும்.
கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ரெயில் நிலையமாக விருத்தாசலம் ஜங்ஷன் அமைந்துள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை வடமாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக இந்நகரத்தின் வழியாக ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. மேலும் மும்மை, டெல்வி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்லும் ரெயில்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. அந்த வகையில் விருத்தாசலம் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டால் ரெயில்களின் எண்ணிக்கை பெருகும். மிகப்பெரிய தொழில் நகரமாக விருத்தாசலம் உருவாகும்.
மிகவும் பழமையான பழமலைநாதர் என்று கூறக்கூடிய விருத்தகிரீஸ்ரர் ஆலயம், உலக பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில், வேடப்பர் கோவில், என்று கோவில்களில் கோட்டையாக விருத்தாசலம் நகரம் விளங்கி வருகிறது. விருத்தாசலத்தை மாவட்டமாக உயர்த்தினால் ஆன்மீக நகராக உருவெடுக்கவும், சுற்றுலாதளமாக மாறவும், வாய்ப்பு உள்ளது. விருத்தாசலத்தை சுற்றிலும் எங்கு பார்த்தாலும், நெல், கரும்பு, வாழை, முந்தரி, பலா என்று விவசாயம் செழித்து வளர்ந்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைபடுத்தவும், மேலும் விவசாயம் செழிக்கவும் விருத்தாசலம் மாவட்டமாக உருவெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சப்கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மகளிர் காவல்நிலையம், வட்டார காவல்நிலையம், போக்குவரத்து காவல்நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண்மை ஒழுங்குமுறைவிற்பனை விற்பனைக்கூடம், வேளாண்மை பெறியியல் துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மற்றும் தணிக்கை துறை அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகம், தீயணைப்புத்துறை அலுவலகம், காப்பு காடு அலுவலகம், வன காப்பகம், புள்ளியியல் அலுவலகம், சூரியகாந்தி மற்றும் மணிலா எண்ணெய் பிழியும் ஆலை, அரசு மருத்துவமனை, அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி, ரெயில்வே ஜங்ஷன், டவுன் ரெயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், புறவழிச்சாலைகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைகளில் ரெயில்வே தண்டவாளங்கள் குறுக்கிடும் இடங்களில் மேம்பாலங்கள், எந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அரசு சேமிப்பு கிடங்குகள், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், ஸ்டேட்பேங்க், ஆக்சிஸ், தமிழ்நாடு மெர்கண்டைல், யூகோ உள்ளிட்ட பல அரசு, தனியார் வங்கிகள், கடலூர் நகரில் கூட இல்லாத அளவிற்கு 25 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளன. கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துறை முகம் இந்த 2 அம்சங்கள் மட்டுமே விருத்தாசலத்தில் இல்லை. மற்ற அனைத்து வசதிகளும் நிரம்பி கிடக்கிறது. விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவித்து விட்டால் மேலும் பல அரசு அலுவலகங்கள் கட்ட இடங்களும் அதிகளவு உள்ளன.
என்ன வளம் இல்லை விருத்தாசலத்தில், ஏன் மாவட்டமாக தரம் உயர்த்த கூடாது? என பாமரர்களும் எண்ணிப்பார்க்க துவங்கி விட்டனர். வந்தாரை வாழவைக்கும் விருத்தாசலத்தில் இன்று ராஜஸ்தானியர்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், பல மதத்தவர்களை சேர்ந்தவர்களும், பல ஜாதி மக்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்க்கையில் உயர, நல்ல சுகாதாரம், கல்வி வசதிகள் கிடைத்திட விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக்க உருவாக்கிட வேண்டும் என்பதே அனைத்துத்தரப்பு மக்களின் ஆசையும் எதிர்பார்ப்பும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சென்னைக்கு பிறகு முதலில் விருத்தாசலத்தில் தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் வழியில் இன்று ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க ஆணையிடுவாரா? என இப்பகுதி மக்கள் தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாதர் சங்கம் கவிதா.
விருத்தாசலம் நகரை சுற்றிலும் வெறும் கிராமங்கள்தான் அமைந்துள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளை பெற்று தன்னிறைவு பெறுவதற்காகத்தான் நாங்கள் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசோ எங்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருகிறது. ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் அதிகளவு வசிக்கும் விருத்தாசலம் பகுதியில் விவசாயமே முழு நேர தொழிலாகும். விவசாயம் செறிந்த இந்த பகுதியை மாவட்டமாக உருவாக்கினால் விவசாயம் மென்மேலும் செழிப்பதுடன், பல்வேறு தொழில்வாய்ப்புகளும் உருவாகும். அரசின் தனி கவனம் கிடைக்கப்பெற்று பல்வேறு அரசு சலுகைகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரராஜன்:
நான் ஒன்றியகுழு தலைவராக இருந்த போது எங்கள் ஒன்றிய சபையிலும், பல்வேறு கிராமங்களிள் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளகுறிச்சி இன்று வரை பேருராட்சியாகத்தான் உள்ளது. ஆனால் விருத்தாசலம் நகராட்சியாக மாறி 30 ஆண்டுகளாகிவிட்டது. கள்ளக்குறிச்சி பகுதிக்கு விருத்தாசலம் நகரத்தில் உள்ள அஞ்சல்துறை அலுவலகம்தான் தலைமை அலுவலகமாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே அரசு பீங்கான் தொழிற்சாலை மற்றும் தொழிற்கல்லூரியும் விருத்தாசலத்தில்தான் அமைந்துள்ளது. தமிழ்நாடு முந்தரி ஆராய்ச்சி பண்ணை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் அமைந்துள்ளது. கோயமுத்தூர் வேளாண்மை பல்கலை கழகத்திற்கு அடுத்தப்படியாக இங்குதான் வேளாண்மை சம்பந்தமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை பண்ணை, மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், என்.எல்.சி சுரங்கம், சிமெண்ட் பேக்டரிகள், கரும்பு சர்க்கரை ஆலைகள் ஆகியவையும் விருத்தாசலம் பகுதியில்தான் அமைந்துள்ளன. காஷ்மீர்&கன்னியாகுமரியை இணைக்கும் ரெயில்வே ஜங்ஷன் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இத்தனை வசதிகளும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில்களும், தொழிற்சாலைகளும் நிறைந்துள்ள விருத்தாசலம் பகுதியை ஒருங்கிணைத்து மாவட்டமாக அறிவித்தால் இப்பகுதி மேலும் தன்னிறைவை பெறும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு வக்கீல் விஜயகுமார் கூறியதாவது&
விருத்தாசலம் மாவட்ட தலைநகராக மாறுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு தொழில்நகரமாகும். கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான தொழுதூர், சிறுப்பாக்கத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் அலுவல் காரணமாக கடலூர் சென்று வந்தால் ஒரு நாள் முழுவதும் செலவழிக்க நேரிடும். ஆனால் தொழுதூர், திட்டக்குடி, சிறுப்பாக்கம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டார பகுதிகளுக்கு விருத்தாசலம் நகரம்தான் மிக குறைந்த தொலைவாக அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் 8 நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. இதில் மாவட்ட நீதிமன்றம் மட்டுமே கடலூரில் உள்ளது. மாவட்டமாக தரம் உயர்ந்தால் மாவட்ட நீதிமன்றமாக மாறுவதற்கான அனைத்து வசதிகளும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் உள்ளது. இதேபோல விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டயலைசிஸ், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. மாவட்டமாக தரம் உயர்ந்தால் மாவட்ட மருத்துவமனையாக அரசால் தரம் உயர்த்தப்படும். அவ்வாறு வசதி வாய்ப்புகள் பெருகும் போது விருத்தாசலம் பகுதி வாழ் மக்கள் எளிதாகவும், உடனடியாகவும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைப்பெற்று விரைவில் குணமடைவார்கள். விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், வக்கீல்கள், தொழிலாளர்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள் என அனைத்து துறையினரும் விருத்தாசலம் மாவட்டமாக உயர்ந்தால் பயன்பெறுவார்கள். இதனால் விரைவில் விருத்தாசலத்தை மாவட்டமாக நம் தமிழக அரசு தரம் உயர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.













No comments:
Post a Comment