Monday, 19 August 2019

பழங்கால நாணயங்கள்



பழங்கால நாணயங்கள் அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்திய சுதந்திரம்,
முக்கிய தலைவர்கள், விலங்குகள், நாட்டின் முக்கிய நிகழ்வுகளை
நினைவுகூறும் விதமாகவும், அவற்றை பெருமைப்படுத்தும் விதமாகவும், இந்தியன்
ரிசர்வ் வங்கி மூலம் நாணயங்கள் அச்சிட்டு, புழக்கத்தில் விடப்படுகின்றன.
அதன்படி, இந்திய நினைவு நாணயங்கள் என்பவை, 1964ல், முதன் முதலாக,
ஜவஹர்லால் நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றம் ஐம்பது காசு வடிவில்
வெளியிடப்பட்டன. அதுபோல், 5 பைசா, 10, 25, 50 மற்றும் 1 ரூபாய், 2, 5,
10, 50, 100 எனவும், சமீபத்தில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின்
ஆயிரமாவது ஆண்டை நினைவு கூறும் விதமாக 1,000 ரூபாய் நாணயமும்
வெளியிடப்பட்டன.
இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, இந்திரா காந்தி உள்ளிட்ட
தலைவர்களும்; தமிழக அளவில் அண்ணாதுரை, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களும்,
அனைவருக்கும் உணவு, சுதந்திர தின வெள்ளி விழா, திட்டமிட்ட குடும்பம்,
வருமான வரித்துறை 150வது ஆண்டு, குழந்தைகள், தேசிய ஒருமைப்பாடு
போன்றவற்றை குறிக்கும் விதமாகவும் நாணயங்கள் அச்சிடப்பட்டன.
இவற்றில் தலைவர்களின் படம், ஆண்டும், ரூபாயின் மதிப்பு ஆகியவை
அச்சிடப்பட்டுள்ளன. இந்தியாவில், தமிழகம் தொடர்புடைய நான்கு நாணயங்களில்,
1995ல் திருவள்ளுவர் படம், முன்னாள் முதல்வர்கள் காமராஜர் (2004),
அண்ணாதுரை (2009), தஞ்சை பிரகதீசுவரர் கோயில் (2010) ஆகியன ஆகும்.
இவ்வகை நாணயங்கள் மட்டுமல்லாது உலக அளவில் புகழ்பெற்ற, பழமையான நாணயங்கள்
மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும், உன்னத பணியில் ஒரு சிலரே
ஈடுபட்டுள்ளனர். இவற்றை, தென்னிந்திய நாணயவியல் கழகம் ஊக்குவிக்கிறது.
அதன் மூலம் நாணய கண்காட்சிகள் நடத்தப்பட்டு, சேகரிக்கும் நபர்கள்
ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர் என்றால், மிகையாகாது.
இப்பணியில், கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன
டிரைவர் மனோகரனின் குடும்பமும் ஈடுபட்டுள்ளது. விருத்தாசலம், கடலுார்
மெயின்ரோட்டை சேர்ந்த மனோகரன் தனியார் நிறுவனத்தில் டிரைவராக
பணிபுரிகிறார். இவரது மனைவி மாரியம்மாள், 52, பழங்கால நாணயங்கள்
சேகரிப்பில் அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு வெங்கடாஜலபதி
என்ற மகனும், பத்மினி என்ற மகளும் உள்ளனர்.
‘பெல் ஸ்டார்’ என்ற தனியார் நிறுவனத்தில், மகளிர் குழுக்களுக்கு
சூப்பர்வைசராக பணிபுரியும் மாரியம்மாள், நாணயங்களை சேகரிக்கும் பணியில்
மும்முரமாக செயல்படுகிறார். இவரது தந்தை கோவிந்தராஜ், 60 ஆண்டுகளுக்கு
முன் பர்மா, அந்தமான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்றபோது, அங்குள்ள
அரிய வகை நாணயங்களை சேரிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால்,
அவரது பிள்ளைகளான கந்தசாமி, கிருஷ்ணன் மற்றும் மாரியம்மாள் மூவரும்
நாணயங்களை சேகரித்து வருகின்றனர்.
தற்போது, மாரியம்மாளிடம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா,
சீனா, இலங்கை உட்பட பிற வெளிநாடுகளும், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த
பழங்கால நாணயங்கள் என 20 நாடுகளில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் கைவசம்
உள்ளன. இதில், 1717ம் ஆண்டுகளில், ராமர் பட்டாபிேஷகம் செய்த நாணயம்,
1835ம் ஆண்டில் இந்தியாவில் அச்சிடப்பட்ட 14 நாணயங்களில் ஒன்றும் உள்ளது,
குறிப்பிடத்தக்கது. (இது தற்போது, 20 லட்சம் ரூபாய் மதிப்புடையது என
கூறுகிறார்)
இது குறித்து மாரியம்மாள் கூறுகையில், ‘பழங்கால நாணயங்களை சேகரிப்பதில்
தந்தை கோவிந்தராஜ் தீவிரமாக ஈடுபட்டார். அவரது வழியில் நானும், எனது
அண்ணன்களும் (சென்னை, வியாசர்பாடி) கந்தசாமி, கிருஷ்ணன் சேகரித்து
வருகிறோம். எங்களை பார்த்து, எங்கள் பிள்ளைகளும் நாணய சேகரிப்பில்
ஈடுபட்டு வருகின்றனர்.
என்னிடம், பழங்கால செப்பு, ஓட்டை நாணயங்கள், 1970களில் வெளியான நாணயங்கள்
மற்றும் 1981ம் ஆண்டின் இரண்டாம் எலிசபெத், 82 எலிசபெத், 1984 இலங்கை,
1973 சிங்கப்பூர், சீனா, ஜார்ஜியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின்
நாணயங்களும் உள்ளன.
அதில் 1717ல், ராமர் பட்டாபிேஷம் செய்தது போன்ற சிறப்பு வாய்ந்த நாணயம்,
1835ம் ஆண்டில், இந்தியாவில் அச்சிடப்பட்ட 14 நாணயங்களில் ஒன்றும்
குறிப்பிடத்தக்கன. இவை, சமீபத்தில் சென்னையில் நடந்த நாணய கண்காட்சியில்,
20 லட்சம் ரூபாய் வரை ஏலத்திற்கு போனதாக, ஆன்லைனில் தெரிந்து
கொண்டோம்.
மேலும், 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோர் மிருகத்தின்
வகைகளை விளக்கி, 1988ல் வெளியிட்ட நாணயமும் உள்ளது. அரசிடம் தெரிவித்து,
நாணயங்களை அரசு அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்க
திட்டமிட்டுள்ளோம். அல்லது எங்கள் சொந்த முயற்சியில் கண்காட்சி ஏற்பாடு
செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது’ என்றார். மாரியம்மாள் 

No comments:

Post a Comment