Sunday, 8 September 2019

பழமலை என்ற ஊர் விருத்தாசலம் ஆனது எப்படி :






























விருத்தாசலம் சில குறிப்புகள்:

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிஸீஸ்வரர் கோவில் உள்ள விருத்தாச்சலத்தில்  பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த 5 ல் அவரிடத்தில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் முக்தி நிச்சயம். இவ்வாறு பல சிறப்புகளை உடைய விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருமுருதுகுன்றம், பழமலை என பல பெயர்களால் போற்றப்படும் விருத்தாச்சலத்தை பற்றி பார்ப்போம்.

பழமலை உருவான கதை:
ஆதியில் பிரம்மன் மண்ணுலகை படைக்க எண்ணி முதலில் நீரை படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது. வெட்டுண்ட உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் விழுந்து மிதந்தன. பிரம்மன் அதை கண்டார். நீரும் அந்த உடல்களும், இறுகி பூமி தோன்றுமாறு சிவபெருமானை வேண்டினார். சிவபெருமாள் ஒரு மலை வடிவாக தோன்றினார். ஆனால் அதனை அறியாமல் பிரம்மன் வேறு பல மலைகளை படைத்தார். ஆனால் பிரம்மன் படைத்த மலைகளுக்கு இடம் இல்லை. அப்போது பிரணவ கடவுள் தோன்றி குறிப்பால் உண்மையை உணர்த்தினார். இதனை அறிந்த பிரம்மன் மலை வடிவாய் இருந்த சிவனை வணங்கினார். சிவன் உடல்களையும், நீரையும் ஒன்றாக இருக்கி மண்ணுலகம் தோன்றுமாறு செய்ததுடன், பிரம்மன் படைத்த மலைகளுக்கும் இடம் தந்தார். அப்போது பிரம்மனிடம் சிவன் நான் வேறு, இந்த மலை வேறு இல்லை. நாமே இம்மலையாக நின்றோம். இந்த மலை தோன்றிய பின்னரே பிரம்மன் படைத்த மலைகள் தோன்றியதால் யாம்  படைத்த மலைக்கு பழமலை என பெயர் வழங்குவதாகவும், இந்த பழமலை மண்ணுலகில் அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிப்பட்டவர்களுக்கு நினைத்தது நடக்கும் என அருளினார்.

மணிமுக்தாறு உருவான வரலாறு:
 அதன்பின் திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர்ககள் பழமலைநாரை தரிசினம் செய்த பின்பே தங்கள் பதவிகளை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மலையில் தேவர்கள் வந்து கடுந்தவம் புரிந்த போது அந்த தவ தீயினால் ஏற்பட்ட வெப்பத்தால் பிரம்மானந்த வெள்ளம் பெருக்கெடுத்து வழிந்தது. அதனை பழமலைநாதர் தம் கைகளால் தடவி திரு மணிமுக்தாறாக ஓடச்செய்தார். இவ்வாறுதான் பழமலை என்ற விருத்தாச்சலமும், மணிமுக்தாறும் மண்ணுலகில் முதன் முதலாக தோன்றியுள்ளது.

எங்கே உள்ளது இந்த பழமலை:
தொண்டடை மண்டலத்திற்கும், சோழ மண்டலத்திற்கும் இடையில் உள்ள பகுதி நடுநாடு என்பர். நடுநாட்டில் மணிமுக்தாநதியின் இருகரைகளிலும் அமைந்துள்ள நகரம் விருத்தாசலம் ஆகும்.
கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் நகரத்தின் தென் மேற்கு பகுதியில் அழகாக அமைந்துள்ள ஒரு நகரம்தான் விருத்தாச்சலம். இந்த நகருக்கு அழகே மணிமுக்தாறுதான். ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியாகி விருத்தாசலம் என்ற பழமலையை தரிசினம் செய்து செல்லும் ஒரு புண்ணிய நதியாகும். நகரை இரண்டாக பிரித்து கொண்டு செல்லும் இந்த நதி நீரோட்டத்தின் போது அழகாக காட்சியளிக்கும். சென்னை&திருச்சி மற்றும் கடலூர்&சேலம் ரெயில்வே மார்க்கத்தின் நடுவே அமைந்துள்ள இந்நகரத்திற்கு ஆங்கிலேயேர் காலத்திலேயே ரெயில் நிலையம் வந்துவிட்டது. காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எங்குமே இல்லாத செராமிக் தொழில்நுட்ப கல்லூரியும், தொழிற்பேட்டையும் அமைந்துள்ள நகரமாகும்.
நான்கு எல்லையிலும் காக்கும் முருக கடவுள்:
நகரின் நடுவில் விருத்தகிரீஸ்வரரும், நகரின் எல்லைப்பகுதிகளில் காக்கும் தெய்வங்களாக தென்புறத்தில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக வேடப்பர் என்ற முருகன் கோவிலும், மேற்கில் தீராப்பிணியை போக்கும் கொளஞ்சியப்பர் என்ற உலக பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலும், வட பகுதியில் வெண்மலையப்பர் என்ற உழவர்களின் காக்கும் தெய்வமும், கிழக்கு பகுதியில் மக்கள் விரும்பிய பயனை தரும் கரும்பாயிரம் கொண்ட அப்பர் கோவிலும் அமைந்துள்ளன. உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக நகரின் 4 புறமும் காக்கும் தெய்வங்களால் சூழப்பட்ட சிறப்பு மிக்க நகர் விருத்தாசலமாகும். திருச்சி, சேலம், சென்னை, கடலூர் ஆகிய 4 மார்க்கமாக வரக்கூடிய வாகன ஓட்டுநர்கள், பயணிகள் இந்த 4 கோவில்களையும் வணங்கி விட்டு சென்றால் விபத்து உள்ளிட்ட வேறு எந்த சிக்கலும் இல்லாமல் பயணம் இனிதே அமையும் என்கின்றனர் பக்தர்கள்.


விருத்தாச்சலம் பெயர் காரணம்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் விருத்தாசலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் விருத்தாசலம் என்ற வடமொழிச்சொல்லால் அழைக்கப்பட்டது. விருத்தம் என்றால் பழமை என்றும் அசலம் என்றால் மலை என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது விருத்தாசலத்தில் மலை இல்லை என்று கூறலாம். ஆனால் சன்னதிவீதியில் இருந்து 27 அடி உயரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள கருவரையில் விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார், பழமலையானது பூமியில் புதையுண்டுள்ளது, என்பது எவருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

விபசித்து முனிவர் மணிமுக்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அவருக்கு  திருப்பணி செய்யும் அருள் கிடைத்தது. இத்திருக்கோவிலில் தல மரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணிகளின் போது விபசித்து முனிவர் தொழிலாளர்களுக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இந்த வன்னி மரம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அஸ்தி கல்லாக மாறும் அதிசயம்:
விருத்தாச்சலம் நகருக்கு விருத்தகாசி என்ற பெயரும் உண்டு. காசியை போன்று இத்தள தீர்த்தமான மணிமுக்தாநதியும் புண்ணிய நதியாகும். மணிமுக்தாநதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாரை வழிபட்ட பலன் கிடைக்கும், அதனால் விருத்தகாசி என்ற பெயர் உண்டாயிற்று என்று வரலாறு தெரிவிக்கின்றன. மேலும் மணிமுக்தாநதியில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அது கல்லாக மாறிவிடும் என்பது ஐதீகம்.இந்த தளத்திற்கு வந்து இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் கிடத்தி தன் புடவையால் விசிறி விடும் போது அந்த உயிர்களின் பாவங்கள் நீங்கிவிடுகிறது. சிவபெருமான் அருகில் விருத்தாம்பிகை அமர்ந்துக்கொண்டு உயிர்கள் மோட்சம் அடைவதற்காக நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலப்புராணம் கூறுகிறது. அதனால்தான் என்னவோ இந்த ரகரியத்தை தெரிந்துகொண்ட பல அடையாளம் தெரியாத வயதான முதியவர்கள்  தங்களுக்கு பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருத்தாச்சலம் நகரில் வந்து இறந்துவிடுகின்றனர்.

ஞானிகளுக்கு ஆசி கொடுத்த பழமலை:
ஒரு முறை திருவண்ணாமலைக்கு செல்ல வந்த குருநமச்சிவாயர் என்ற சித்தர் இந்ததளத்தில் தங்கிய போது கடும் பசி ஏற்பட்டது. பசியை போக்க பெரியநாயகியிடம் சோறு வேண்டி கிழத்தி என்று தொடங்கும் ஒரு பாடலை பாடினார். இதனை கேட்ட பெரிய நாயகி கிழத்தி வேடத்தில் வந்து கிழவி சோறு எப்படி கொண்டு வர முடியும் என கேட்டுவிட்டு மறைந்துவிட்டார். பின் குருநமச்சிவாயர் அம்மனை புகழ்ந்து பாடியதும், அந்த பாடலில் மயங்கிய பெரியநாயகி இளம் பெண் வேடத்தில் வந்து காட்சி கொடுத்ததுடன் அவர் உண்பதற்கு உணவு கொடுத்தார். அன்று முதல் பெரிய நாயகி பாலாம்பிகை என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

இத்தலத்து ஈசனான முதுகுன்ற பெருமானை பாட மறுத்துச்சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாடவைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்தார். அதனை சுந்தரரால் எடுத்துச்செல்லும் போது களவு போய்விடும் என்பதால் மணிமுக்தாநதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள் என்று ஈசன் அருள் கொடுத்ததாக தல வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மன்னன் ஒருவர் இந்த கோவிலுக்கு வந்த போது பசியால் வாடியதாகவும், அப்போது விருத்தாம்பிகை இளமை வடிவம் எடுத்து பாலூட்டி குமார தேவர் என பெயர் சூட்டினாள் என்பது வரலாறு. குமாரதேவருக்கு விருத்தாசலத்தில் தனிமடம் உள்ளது.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவை 288 லிங்கங்களாக இத்தளத்தில் முருகபெருமானே பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன.

விநாயகரின் 2ம் படை வீடு:
முருகபெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போன்று விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இதில் இரண்டாம் படை வீடாக இத்தளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆழத்து விநாயகர் அமைந்துள்ளார். ராஜகோபுரத்தை அடுத்து இடதுபக்கமாக ஆழத்து விநாயகர் கோவில் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. காளகஸ்தியில் உள்ளது போல 18 படி இறங்கி சென்று தரிசினம் செய்வது போல பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஒரு முறை உலகம் அழிந்த போது இந்த தளம் மட்டும் அழியாமல் இருந்தது, என்ற புராண சிறப்பையும் இக்கோவில் பெற்றுள்ளது. சிவ தளங்களில் 1008 தளங்கள் சிறப்பானதாக கூறப்படுகிறது. இதில் நான்கு தளங்கள் முக்கியமானது. அதில் விருத்தாசலமும் ஒன்றாகும். சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத் திருத்தளமாகும்.

5 தொழிலின் ரகசியங்கள்:
இந்த கோவிலில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், அம்பாள் விசேஷம், வசந்த உற்சவம், ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசினம், கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி, அமாவசை, பிரதோஷ தினங்களில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று சாமி தரிசினம் செய்வார்கள். இந்த கோவிலில் நடைபெறும் மாசிமாதத் திருவிழா என்பது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இத்தளத்து சிவனின் 5 தொழில்களையும் குறிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றத்தை படைத்தல் தொழிலையும், 2ம் நாளில் இருந்து 8ம் நாள் வரை நடைபெறும் விழா காத்தல் தொழிலை குறிக்கும். 9ம் நாள் தேர்திருவிழா சூரசம்ஹார தொழிலையும், 10ம் நாள் தீர்த்தவாரி திருவிழா அருளல் தொழிலையும், அன்று இரவே கொடி இறக்கும் விழாவை மறைத்தல் தொழிலையும் குறிக்கிறது என்பது ஐதீகம்.

மாசி மகத்தன்று சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் இறந்துவிட்டால் விதவையான உடன், தங்களது தாலியை கழட்டி மணிமுக்தா நதியில் விடுவதை ஐதீகமாக கொண்டுள்ளனர். மேலும் தங்கள் மூதாதையர்களுக்கு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் திதி கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாகவும், உடனடி ஆசி கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

 பெரியநாயகி அன்னை பதிகம், சேக்ஷாத்திர கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, கருதரிசின பதிகம், பிள்ளை தமிழ் ஆகிய நூல்கள் இத்தளத்தை பற்றி பாடப்பட்டுள்ள நூல்களாகும்.

இத்தளத்து பெருமானை வழிபட்டால் இம்மை மருமை பயன்கள் கிடைக்கும் என்று சம்பந்தர் பாடியுள்ளார். மணிமுக்தாநதியில் நீராடினால் சித்தி பெருவதுடன் முக்தி கிடைக்கும் என புராண நூல்கள் குறிப்பிடுகின்றன.

5ன் சிறப்புகள்:
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு எல்லாமே ஐந்து ஐந்தாக உள்ளது.
5 மூர்த்தங்கள்; விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்
5 இறைவனின் திருநாமங்கள்; விருத்தகிறீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.
5 விநாயகர்; ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜகணபதி, வல்லப கணபதி
இறைவனை தரிசினம் கண்ட 5 பேர்; உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமாரதேவர், நாதஸ்சர்மா, அனவர்த்தினி
5 கோபுரங்கள்; கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.
5 பிரகாரங்கள்; தோரோடும் திருச்சுற்று, கைலாயதிருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்தி மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.
5 நந்திகள்; இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடை நந்தி, தர்மநந்தி

இதேபோல 5 கொடி மரங்கள், உள் மண்டபம், 5 வெளிமண்டபம், 5 வழிபாடுகள், 5 தேர், இந்த தளத்திற்கு 5 பெயர்கள் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ன. இது எந்த ஊரிலும், எந்த கோவிலிலும் காணகிடைக்காத பாக்கியமாகும்.

வானொளித்திடல்:
சுதந்திர போராட்ட காலத்தின் போது விருத்தாசலத்தில் அமைந்துள்ள வானொலி திடலில் பல முக்கிய தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். இந்த திடலில் உரையாற்றாத தலைவர்களே இல்லை என கூறலாம். விருத்தாசலம் ஜங்ஷனில் ரயிலில் நின்றபடி காந்தியடிகள் மக்களிடையே சுதந்திர போராட்ட உரையாற்றியுள்ளார் என்பது வரலாறு. இதேபோல சத்ரபதி சிவாஜி என்ற பேரரசர் செஞ்சி கோட்டைக்கு தனது படையுடன் சென்ற போது விருத்தாசலம் வந்து தங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல வானொளி திடல் அருகில் தீர்த்த மண்டப தெருவிற்கு செல்லும் முகப்பு பகுதியில் ஒரு நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லில் டெல்லி மகுடாபிஷேகம், மாட்சிமை தாங்கிய ராணி மேரி 1911 ம் ஆண்டில் கார்த்திகை மாதத்தில் வந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதேபோல ஆங்கிலேயர் காலத்தில் வந்த ஆங்கியே முக்கிய தலைவர்கள் சம்பந்தமாக வைக்கப்பட்ட நினைவு கல்வெட்டுகள் காலப்போக்கில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவில் கோட்டையானது:
விருத்தகிரீஸ்வரர் கோவில் முகலாய ஆட்சி காலத்தில் கோட்டையாக மாற்றப்பட்டதற்கு சான்று விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோடும் வீதிகளின் பெயர்கள் தென்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி என கோட்டையின் பெயர்களிள் அழைக்கப்படுகிறது. அதன் பின்பு பிரெஞ்சு, மற்றும் ஆங்கியேர் ஆட்சி காலத்தின் தான் கோட்டை கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல நாச்சியார்பேட்டையில் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் இருந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சுரங்க பாதை ஒன்று உள்ளதாக இன்றளவும் தெரிவிக்கின்றனர்.

3.5 கோடி ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புகல்:
விருத்தாசலத்தில் 7.2.1900 ம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அரசு கெசட்டில் கூறப்பட்டுள்ளது.  மணிமுக்தாற்றின் கிழக்கு பகுதியில் உள்ள ஆயியார் மட பாதையில் காணப்படும் இரிடேசியஸ் என்கின்ற சுண்ணாம்பு கல் பாறைகள்                                                                                        சுமார் 3.5 கோடி ஆண்டுகள் பழைமையான பாறையாகும் என புவியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர், அதனால் விருத்தாசலம் எப்போது தோன்றியது, கோவில் எப்போது தோன்றியது என வறையறுத்து கூற முடியாத அளவிற்கு பழமையான ஊராகும். விருத்தகிரீஸ்வரர் மிகவும் பழமையான கோவில் என்பதாலும், மொத்தம் 74 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் பராந்தக சோழனில் இருந்து கண்டராதித்த சோழன், வீர விஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி உள்ளிட்ட பல்வேறு அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்., சுந்தரர், குமாரதேவர், சிதம்பர சுவாமிகள், குருநமச்சிவாயர், இலிங்க ரெட்டியார், சொக்கலிங்க சிவபிரகாச சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் விருத்தாசலம் வந்து விருத்தகிரீஸ்வரரை தரிசினம் செய்து சென்றுள்ளார்கள் என்பதற்கு சான்றாக அவர்கள் பாடிய பாடல்களே உதாரணமாக உள்ளது. தேவாரம் முதல் பிரம்ம கைவர்த்தப் புராணம் வரை 20க்கும் மேற்பட்ட செய்யுள்களில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்புகளை உடைய விருத்தாச்சலம் இன்று வரலாற்று ஆய்வாளர்களின் சொர்க்கபுரியாக விளங்கி வருகிறது. பல்வேறு வரலாற்று பேராசிரியர்களும், வரலாறு படிக்கும் மாணவர்களும் விருத்தாசலம் வந்து விருத்தகிரீஸ்வரர் கோவில், மணிமுக்தாறு மற்றும் சுண்ணாம்பு கல், கல்வெட்டுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளிள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கி முதன் முறையாக விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு தனது கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு சென்று பின்னர் எதிர் கட்சி தலைவரானார் என்பதும் சிறப்பானதாகும். மேலும் விருத்தகிரி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு சினிமா, குறும்படங்களும் விருத்தகிரீஸ்வர் கோவில், மணிமுக்தாறு மற்றும் முந்தரிகாடுகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment