Saturday, 5 October 2019

மாடுவெட்டி மங்கலம் மங்கலம்பேட்டை ஆனது எப்படி





#மாடுவெட்டி--_மங்கலம்_மங்கலம்பேட்டை_ஆனது_எப்படி:
கடலூர் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பேரூர் மங்கலம்பேட்டை. நடுநாட்டில் பல்லவர் காலத்தில் தோன்றிய ஊராகும். முகாசபரூர் ஜமீன் குடும்பத்தாரின் குலதெய்வமான காளி மங்கலநாயகியாக எழுந்தருளி உள்ள இந்த ஊரானது அம்மன் பெயரால் மங்கலம்பேட்டை என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவின் போது 7 எருமை கிடா வெட்டுவது வழக்கம். அதனால் மாடுவெட்டி மங்கலம் என அழைக்கப்பட்ட இந்த ஊர் அதன் பின் மருவி மங்கலம்பேட்டை என வழங்கப்படலாயிற்று. விருத்தாசலம்&உளுந்தூர்பேட்டை சாலை இந்த ஊரின் நடுவே அமைந்திருப்பதால் சாலைக்கு மேற்கு பகுதியில் மங்கல நாயகி அம்மன் கோவில் இருப்பதால் மங்கலம் எனவும், சாலைக்கு கிழக்கு பகுதியை பேட்டை என அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் மங்கலமும், பேட்டையும் இணைந்து மங்கலம்பேட்டை என அழைக்கப்பட்டதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

#இஸ்லாமியர்கள்:
முகாச பரூர் ஜமீன் ஆட்சி காலத்தின் போது நவாப் படைபெயடுப்பு நடந்தது. அப்போது ஜமீன் மன்னர் நவாப் படையினருக்கு மங்கலம்பேட்டையில் இடம் கொடுத்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதனால் நவாப் மானியம் நடைமுறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய குடும்பங்கள் அதிகம் வசித்து வருகின்றனர். பேட்டை என முடியும் ஊர்களில் முஷ்லீம்கள் வசிப்பார்கள். உதாரணமாக லால்பேட்டை, பரங்கிப்பேட்டையை கூறலாம். அதனை போலவே மங்கலம்பேட்டையிலும் முஷ்லீம்கள் அதிகளவு வசிக்கின்றனர். மங்கலம்பேட்டையில் கீழவீதி மற்றும் மேலவீதி பள்ளிவாசல்கள் பிரமாண்டமாக அமைந்திருப்பதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

#விநாயகர்_சிலை
மங்கலம்பேட்டையில் வருடந்தோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது வெகு விமர்சையாக நடைபெறும். சுமார் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லும் காட்சி அழகாக இருக்கும்.

#மங்கலநாயகிஅம்மன்:
சக்தி சினம் கொண்டு மகிஷனை வதம் செய்து சினம் தணிந்து சாந்த நிலையில் எழுந்தருளியதால் இந்த அம்மனுக்கு மங்கலநாயகியம்மன் என பெயர் உண்டாயிற்று. இந்த கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் மேற்கு பார்த்த கோவிலாகும். பெரும்பாலும் கோவில்கள் கிழக்கு முகமாகவும், காளியாக இருந்தால் வடக்கு முகமாகவும் தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சாந்த சொரூபிணியாக அவதரித்ததால் மேற்கு முகமாக கோவில் அமைந்துள்ளது. இதனால் சூரியன் அஸ்தமன காலகட்டங்களில் புரட்டாசி 5, 6, 7, 8 ஆகிய தேதிகளிலும், பங்குணி 5,6,7,8 ஆகிய தேதிகளிலும் அம்மன் மீது நேரடியாக சில நொடிகள் சூரிய ஒளி படும். அப்போது சூரியன் அம்மனை வணங்கி அஸ்தமனமாவதாக கூறப்படுகிறது.

இந்த கோவிலை சார்ந்த அமைப்போடு பாலி அருகம்மன் கோவில், பில்லூர் மாடத்தாளம்மன் கோவில், கீரம்பூர் கீரியம்மன், உளுந்தாண்டவர் கோவில் துர்கையம்மன், கோட்டை மலையம்மன், பாண்டூர் துர்கையம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. பண்டைய காலத்தில் இந்த கோவில் இருந்த இடம் வனமாக இருந்ததால் வன துர்கை எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

#சித்தர்_வாழ்ந்த_தடம்:
மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வடக்கு பார்த்த நந்தி அமைந்துள்ளது. இந்த நந்தியின் முன்பு சித்தரின் காலடி தடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நந்தி அமைந்துள்ள இடம் ஏதோ ஒரு சித்தரின் ஜீவ சமாதியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல மங்கலநாயகியம்மன் திருவிழாவின் போது 6ம் திருவிழா அன்று கர்ணத்ததில் உள்ள தனது அண்ணன்களை வணங்கி வரும் ஐதிக திருவிழா நடைபெறுகிறது. அந்த திருவிழாவின் போது மங்கலநாயகியம்மன் கர்ணத்தம் கிராமத்தில் உள்ள இந்த கோவிலுக்கு வீதியுலாவாக சென்று வருகிறார். இதேபோல 5ம் திருவிழா நாளன்று அம்மன் கோ.பூவனூரில் உள்ள தன் தாய்வீட்டீற்கு சென்று வருவதகாகவும் ஐதீக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
#சாத்துக்கட்டுதல்:
இந்த கோவிலுக்கு திருவிழா காலத்தின் போது ஒருவர் சாத்து கட்டிகொண்டு கோவிலை பாதுகாக்க வேண்டும். அப்போது சாத்து கட்டுபவரின் மனைவி வீட்டில் அம்மனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். சாத்து கட்டியர் கையில் காப்பு கட்டி கொண்டு அரிவாலுடன், கோவில் எல்லைப்பகுதியான பள்ளிப்பட்டு, அகரம், குரும்பூர், பில்லூர், விசலூர்,கர்ணத்தம், கோவிலானூர் ஆகிய 7 ஊர்களின் எல்லைப்பகுதி வரை சென்று காவல் பணியில் ஈடுப்பட்டு மீண்டும் அவர் கோவிலை வந்தடைந்தால்தான் அம்மன் வீதியுலா நடைபெறுவது வழக்கம். சாத்து கட்டுவதற்கு முன்பு மனைவியின் பத்தினி தகுதியை சோதிப்பதற்காக கொதிக்கும் எண்ணெயில் சுடப்படும் வடையை வெறுங் கையால் கொதிக்கும் சட்டியில் கையை விட்டு வடையை எடுக்க வேண்டும் என்ற சடங்கு நடைமுறையில் இருந்தது. அவ்வாறு எடுக்கும் போது அந்த பெண்ணின் கையில் எதுவும் ஆகவில்லையென்றால் அந்த பெண் பத்தினி பெண் என அறியப்பட்டு அதன் பிறகே அந்த பெண்ணின் கணவருக்கு சாத்துக்கட்டப்படுமாம். இந்த வழக்கம் கடந்த வில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நடைமுறையில் இருந்ததாக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

 சில ஆண்டுகள் முன் வரை இப்பகுதி கிராம புறங்களில் திருமணம் செய்யும் பெண்களின் பத்தினி தகுதியை கூட இந்த சாத்து கட்டுதல் முறை மூலம் சோதித்தறிந்த பிறகே அந்த பெண்ணிற்கு திருமணம் நடந்ததாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.

#சுரங்கப்பாதை
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சேரன் செங்குட்டுவன் இமயமலையை வெற்றிகொண்டு அங்கிருந்து 2 கற்களை எடுத்து வந்துள்ளார். அப்போது தமக்கு மிகப்பெரிய அளவில் உதவிகள் செய்த பரூர் ஜமீனுக்கு மங்கலநாயகி அம்மன் சிலை செய்ய ஒரு புனித கல்லை கொடுத்துள்ளான்-. அந்த கல்லில்தான் மங்கலநாயகியம்மனை பரூர் ஜமீன் சிலையாக வடித்துள்ளார் எனவும், சேரன் செங்குட்டுவன் தான் கொண்டு வந்த மற்றொரு கல்லில் கண்ணகி சிலை வடித்ததாகவும் கூறப்படுகிறது-. பரூரில் அமைந்திருந்த ஜமின் அரண்மனைக்கும், மங்கலநாயகியம்மன் கோவிலுக்கும் சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜமீன் முகாசப் பரூரில் உள்ள அரண்மனை விநாயகர் கோவிலில் ஆரம்பிக்கும் இந்த சுரங்கப்பாதை வழியாக மங்கலநாயகியம்மன் பலி பீடத்தின் அருகே  முடியும் சுரங்கப் பாதை வழியாக வந்து அம்மனை வழிப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment