பழந்தின்னி' வவ்வால் இனங்களை காப்பாற்ற பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமம்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்'. இப்பகுதியில் மக்களோடு மக்களாக 'பழந்தின்னி' வவ்வால்கள் கூட்டமாக வாழ்கின்றன. இவற்றை காப்பாற்ற, கிராம மக்கள், பட்டாசுகளை வெடிக்காமல், தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
பாலுாட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில், 1 லட்சம் வகை பாலுாட்டிகள் இருந்தன. தற்போது, 4,000 வகை மட்டுமே உள்ளதாக, ஆய்வுகள் கூறுகின்றன.
பறக்கக்கூடிய தன்மையை பெற்ற, ஒரே பாலுாட்டி இனம் வவ்வால். இரவில் விழித்து, பகலில் பதுங்கி வாழும் வவ்வால் இனம், கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவருவதாக, பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகில், 1,200 வகை வவ்வால்கள் உள்ளன. இவற்றில் பழந்தின்னி, பூச்சித்தின்னி என, இருவகைகள் உள்ளன. இவற்றை எளிதில் வித்தியாசம் காண முடியும். பழந்தின்னி: பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு, சிறு காது இருக்கும்.
பறக்கும் நரிபோல் தோற்றமளிக்கும் வவ்வால்கள், இந்தியாவில் மட்டுமே உள்ளன. இவை, 2 கிலோ எடை வரை இருக்கும். தேன், பூ இதழ்கள், மகரந்த துாள், அழுகிய பழங்களை சாப்பிடும். பூச்சித்தின்னி: மிளகு போன்ற சிறு கண், தட்டை மூக்குடன் காணப்படும்.
மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வண்டு, பூரான், தேள், பல்லி, எலி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். வவ்வால்கள், பழங்களை உண்பதால், அயல் மகரந்த சேர்க்கை நடைபெறவும் பெரிதும் துணை செய்கின்றன. இன்றைய சூழலில், காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும், பாறைகள் வெட்டப்பட்டு, குவாரிகளாக மாறி வருவதாலும், பருவநிலை மாற்றத்தால், காட்டுத்தீ ஏற்படுவதாலும், மிக வேகமாக வவ்வால்கள் அழிந்து வருகின்றன. இவற்றைக்காக்க, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடரி கிராமத்தில் காணப்படும் பழந்தின்னி வவ்வால்களை காப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தால் வவ்வால்கள் அச்சத்தில் பரந்து வேறு எங்கேயாவது சென்று விடும் என்பதால், அப்பகுதியில் பட்டாசு வெடிக்காமல் மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல மேளதாளங்கள் அடிக்காமல் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை கொண்டாடுகின்றனர்.
மேலும் வவ்வால்கள் தங்கியுள்ள மரங்களை தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர்.புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்ததும் இந்த மரங்களை வழிப்பட்ட பிறகே ஊருக்குள் நுழைகின்றனர். வவ்வால்களையும், அவை வசிக்கும் மரங்களை காக்கவும், இப்பகுதி மக்களே தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி இளைஞர்கள் வவ்வால் இனம் பெறுகுவதற்காக அப்பகுதியில் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் பல கிலோமீட்டர்கள் சென்று பழங்களை எடுத்துவந்து இப்பகுதியில் தின்பதால் அவற்றின் உதவியுடன் இப்பகுதியில் பல அரிய வகை மரங்கள் வளர்ந்து வருகின்றன. அடரிப் பகுதியில் காடுகள் பெறுகுவதற்கு இந்த வவ்வால்கள் காரணியாக உள்ளன.
தீபாவளி பண்டிகையின் போது எல்லோரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நேரத்தில் வவ்வால் இனம் அழியாமல் காக்க இப்பகுதி மக்கள் தங்கள் சுக துக்கங்களையே தியாகம் செய்துள்ளது போற்றத்தக்கக் கூடிய செயலாகும். தமிழக அரசு இது போன்ற அழிந்து வரும் இனங்களை காக்க மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.









No comments:
Post a Comment