தீபாவளி அது ஒரு வலி
எப்பொழுது பட்டாசு கிடைக்கும் என
முதல் நாள் இரவு வரை காத்திருந்த வலி,
மற்றவர் புத்தாடையைக் கண்டு எங்கி,
தீபாவளி அன்று காலை எழுந்து பார்த்ததும்
பறந்திடும் வலி,
பட்டாசை கண்டதும் மலர்ந்திடும் தீப ஒளி!
பல வருடங்கள் அனுபவ அலையில்,
இன்று தீபாவளி வந்தால்,
வந்தது தெரியாமல் பட்டாசு ஒளிகள் மறைந்தே போகிறது.
ஆட்டை அறுத்து கூறு போட்டு,
விற்கும் தாத்தாவிற்கு உதவியாக
கணக்கர் வேலை பார்க்க வேண்டும்,
இடையில் ஆயாவுக்கு கொத்தமல்லி, கருவேப்பிலை வாங்கி வந்து தர வேண்டும்.
ஆட்டுக்கறியை வாங்கி செல்லும்
சித்தப்பு, பெரிப்பா, மாமா, தாத்தா, அண்ணன் மார்களின் பின்னே சென்று பணத்தை வசுலிக்கும் வசூல் மேலாளர் வேலை பார்க்க வேண்டும்.
இடையில் மற்றவர் வெடிக்கும் வெடியை வெறிக்க பார்க்க வேண்டும்,
ஆயா தலைக்கு வைத்த எண்ணெய்யைய்
ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஆசையாய் புது சட்டையும், கைலியும் கட்டி கொண்டு, நமுந்து போகாமல்
அடுப்பனலில் வைத்த வெடியை எடுத்து
வெடிக்கும் போது,
ஏதோ அந்த நாள் இனிதே தொடங்கும்.
முதல் நாள் இரவில் தொடங்கி,
மறுநாள் இரவு முடிய,
எங்கே தீர்ந்துவிடுமே என்று,
மற்றவர் வெடிப்பதை வெறிக்க பார்க்க முடியாமல்,
சரவெடியை பிரித்து ஒன்றன் பின் ஒன்றாக வெடித்த காலங்களின் தழும்புகள் மட்டும் மறைய மறுக்கிறது.
டபுள் ஷாட், டிரிபிள் ஷாட், சவன் ஷாட்டை
கண்டறிந்ததே நாங்கள் தானே.
பின் எப்படி நினைவுகள் மறையும்.
வெடித்த வெடியின் தீப்பொறிகள்
புது சட்டையில் பட்டு ஓட்டை விழுந்து,
தீபாவளி ட்ரெஸ்சுக்கான அடையாளம் விழும்.
இடையில் கறி விற்ற காசில்
புத்துணர்வு பானம் அருந்திய
தாத்தாவும், ஆயாவும் போடும் சண்டையில
தீப்பொறிகளும், வார்த்தை பொறிகளும்
பட்டாசு ஒலியை தோற்கடிக்கும்.
தீபாவளி வருடந்தோறும் வருகிறது.
அனுபவங்கள் மாறியது.
முற்காலம் தாத்தா, ஆயா, மாமாவுடன்,
சில காலம் தங்கச்சியுடன்,
தற்காலம் மனைவியுடன்,
வலிகள் மரித்துவிட்டது.
ஏனோ தழும்புகள் மறைய மறுக்கிறது.
No comments:
Post a Comment