#பட்டியார் (பட்டி.சு.செங்குட்டுவன்) நினைவாஞ்சலி நிகழ்ச்சி
கிருக்கல்களை கவிதை என்றார்,
இலக்கிய உலகிற்கு வரவேற்றார்,
தாய் பாலூட்டி வளர்த்தாள்,
பட்டியார் இலக்கியத்தை ஊட்டி வளர்த்தார்,
கவியுலகிற்கு
அறிமுகப்படுத்திய தாய் அவர்,
இதெல்லாம் கவிதையா? என்றே
எழுத்தாளர்கள்
முடக்கி வைத்தனர்,
இதுதான்யா கவிதை என
முளை விட வைத்தார்,
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் படைப்பாய்,
எழுதி கொண்டே இரு,
என ஆருடம் கூறினார்,
புலிகளின் காலம் படைத்தார்,
காட்டுப் பூனைகளிடம் சிறைப்பட்டார்,
திராவிடம் பேசினார்,
கருத்துக்கள் பதிவதில்,
தீயாய் வெகுண்டெழுந்தார்,
மனதில் பட்டதை சரவெடியாய் வெடித்தார்,
எழுத்துலகில் பசுமரத்தாணியாய் பதிந்தார்,
தமிழ் இலக்கிய உலகில்
உம்மை ஒதுக்கிடவும் முடியாது,
முக்கிய எழுத்தாளர்கள் சிகரத்தை அடைந்தாலும்
முக்காத எழுத்தாளராய் உம்மை நெஞ்சில்
சுமக்கின்றனர் பலர்,
வர வேண்டும், வர வேண்டும்,
இளைஞர்கள் முன் வரவேண்டும்,
விவசாயத்தை காக்க வேண்டும்,
இலக்கியம் படைக்க வேண்டும்,
கவி எழுதி குவிக்க வேண்டும்
இது தானய்யா உமது எண்ணம்,
நீவிர் போட்ட விதையாய் நாங்கள்,
உமது எண்ணத்தை நிறைவேற்றவே நாங்கள்,
உமக்கு எங்களின் அஞ்சலிகள்,
நீவிர் மறையவில்லை,
மணிமுக்தாறு இலக்கிய வட்டமாய்
நாங்கள் முளைத்துவிட்டோம்,
தழைத்தெழுந்து
கவிஞர்களை ஊக்கப்படுத்துவோம்,
வளர்த்தெடுப்போம்,
எங்களது உறுதியை, உமக்கு அஞ்சலியாய் மலர் தூவி காணிக்கையாக்குகிறோம்.
#இல #வீரபாண்டியன்
*கவிஞர் பட்டி சு.செங்குட்டுவனார் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம்*
கவிஞர் பட்டி சு.செங்குட்டுவன் அவர்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி கூட்டம் (11-12-2020) விருத்தாசலம் பெரியார் நகர் சிவலட்சுமி அரங்கில் நடைபெற்றது.
மணிமுத்தாறு இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பில், கவிஞர் இரத்தின.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் ஆ.மலர்தாசன், கவிஞர் சி.சுந்தரபாண்டியன், ஏ.கே.அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் சு.அகிலன் முன்னிலை வகித்தார். கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.
எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தமிழக உழவர் முன்னணி நிர்வாகி க.முருகன், செநதமிழ் மரபுவழி வேளாண் நடுவம் கண்ணதாசன்,
பத்திரிகையாளர் ஆழி வீரமணி, கவிஞர் சிலம்புசெல்வி, கவிஞர் பூவனூர் கோ.அரங்கநாதன், கவிஞர் இல.வீரபாண்டியன், ஆசியர் முருகன்குடி பழனிவேல், தமிழிளைஞர் கூட்டமைப்பு லலித்குமார், செய்தியாளர் பொன்.செல்வசுப்ரமணியன் ஆகியோர் பட்டியாரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் நடத்துவது எனவும்,
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
பட்டி சு.செங்குட்டுவனார் பெயரில் நினைவு விருது வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கவிஞர் இராம.சீனிவாசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment