Saturday, 21 July 2018

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை - 1
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
தமிழ்நாட்டில் நடுநாட்டில் கடலூர் மாவட்டம். விருத்தாசலம் வட்டம், பரவளூரில் தாதன் வீட்டு வைரா வசித்து வந்தது, இந்த வைரா மணிமுக்தாற்றை கடந்து அக்கறையில் உள்ள பரவளூரில் கலர் மண்ணிலே வசிக்க தொடங்கினார்கள், அதனால் அந்த ஊர் குப்பமாக மாறி கலரங்குப்பம் என்ற ஊரானது. அந்த ஊரில் ராமசாமியின் தம்பி லட்சுமணன் - கொளஞ்சி தம்பதியருக்கு தலைமகனாகப் பிறந்தேன். அடுத்து தங்கை, ஆச்சிப்பிள்ளை என்ற உமா மகேஷ்வரி. விவரம் தெரியாத வயது, தாய் கொளஞ்சியம்மாளின் பிரிவு. என்னை கலரில் இருந்து பிரித்தது, தாத்தா சீராமனை யார், பாட்டி லட்சுமி, மாமா செல்வராசு ஆகியோர் என் அம்மாவிற்கு கொல்லி வைத்ததும் என்னைத் தூக்கிச் சென்றனர். கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 லிருந்து 5ம் வகுப்பு வரை படித்தேன். மழையை காணாப் பயிரைப் போல தாயில்லாமல், தந்தை அரவணைப்பில்லாமல் வளர்ந்தேன், ஆனால் அந்தக் கவலைத் தெரியாமல் என் பாட்டனும் பாட்டியும் வளர்த்தனர். தொடக்கக் கல்வி முடிந்ததும், இடை நிலைக் கல்விக்காக கானூர் சாமிக்கண்ணு படையாட்சியாரால் கட்டமைக்கப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 லிருந்து 10ம் வகுப்பு வரைப் படித்தேன். 8ம் வகுப்பிலிருந்து நன்றாக படிக்கத் தொடங்கினேன், அதன் விளைவு குருப் லீடர். வகுப்பறை தலைவர் பதவி வகிக்க வேண்டியிருந்தது, அவை என்னிடம் தலைமை மனப்பான்மையை வளர்த்தது, சாந்தி நகர் கோபாலகிருஷ்ணன் தமிழய்யா வாக எனக்கு தமிழ் பாடம் எடுத்தார், அவரின் கற்பிக்கும் முறையே என் தமிழார்வத்தை தூண்டியது என நினைக்கிறேன். அவரின் முயற்சியால் நான் பள்ளிகளுக்கிடையில் வட்டம், குறு வட்டம், மாவட்ட அளவில் நடந்த மேடைப் பேச்சு, பேச்சுப் போட்டி, தனி நடிப்பு, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பாராட்டுக்களையும், சான்றிதழ்களையும், பரிசாக புத்தகங்களையும் வாங்கினேன், முதலில் கிடைத்த பரிசு நூல் மகாத்மா காந்தியின் சுய சரிதை நூல்  தான்.  பின்பு 9, 10ம் வகுப்பு பயின்ற போது பள்ளி மாணவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். நான் படித்த காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்திற்கு ஏற்ற மன்றங்கள் நடக்கும். நான் தமிழ் இலக்கிய மன்ற மாணவர் செயலராக இருந்தேன். மற்ற பாட மன்றங்களில் வகுப்புகள் தான் நடக்கும். தமிழ் இலக்கிய மன்றத்தில் மட்டுமே இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். அதன் விளைவால் கவிதைகள் பல எழுதினேன், சேகரிக்க முடியவில்லை, குடும்ப சூழலால் பாதுகாக்க தெரியவில்லை, 10ம் வகுப்பு முதல் நிலையில் தேர்வு பெற்றவுடன் ஸ்ரீமுஷ்ணம் த .வீ.செ மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு சேர்ந்தேன், அங்கும் எனக்கு நல்லாசிரியர்கள் கிடைத்தனர். குடும்ப சூழல், ஏழ்மை, கானூரில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்ல பஸ்சிற்கு கூட பணம் தர ஆளில்லாத நிலையிலும், நீயெல்லாம் படித்து விட்டு காலேஜிக்கு போக போறியா, போய் சாணத்தை அள்ளு, ஆடு மாடுகளை மேய்க்கப் போ என்ற ஏலனப் பேச்சுக்கள் ( யாரையும் குறிப்பிட முடியவில்லை, ஏன் என்றால் உப்பிட்டவர்கள் அல்லவா ) அதனால் படிப்பை
பாதியில் நிறுத்திவிட்டு நான் திருப்பூருக்கு செல்ல முயன்றேன், என் வகுப்பாசிரியர் திரு ரமேஷ் (தற்போது வேளாண்மை அலுவலராக உள்ளார்) என்னை தடுத்து நிறுத்தி என்னை ஸ்ரீமுஷ்ணத்தில் தென் பாதியில் உள்ள ஒரு அரசு ஆதிதிராவிடர் விடுதியில் சேர்த்து விட்டதுடன் என் படிப்புச் செலவு முழுமையும் பார்த்துக் கொண்டார், அவர் அதற்காக எதிர்பார்த்தது நான் பள்ளி அளவில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே. ஏதோ படித்தேன், அங்கும் எனக்கு திரு  வெங்கடேசன் என்ற தமிழய்யா கிடைத்தார். அவரும் எனக்கு தமிழ் இலக்கியத்தை ஊட்டி வளர்த்தார். 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினேன். இனிமேல் நம் தலையெழுத்து அவ்வளவுதான் என நினைத்து என் சொந்த ஊர் களருக்கு சென்றேன். அங்கு சென்றவுடன் ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, தந்தையும் என்னை படிக்க வைப்பார் என்ற நம்பிக்கை இல்லை. என் மாமா வெங்கடேசன் (அந்த ஊருக்கு அவர் தான் தலைவர்) சொல்லி விருதையில் ஒரு ஆழ் துளை மோட்டார், பைப் விற்கும் கடையில் சேர்த்து விட்டார், பின் ஒரு மாதத்தில் என் உறவினர் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் விற்பனை தொழிலகத்தில் சேர்த்து விட்டார். அங்கு மெக்கானிக் வேலை செய்பவருக்கு உதவியாளராக இருந்தேன். என் உறவினர் தொழிலகமாக இருந்தாலும் நான் அவரிடம் பேசக் கூட தடை இருந்தது, மெக்கானிக் ஷெட்டை விட்டு  ஷோரூமிற்கு வரக்கூடாது என்ற உத்தரவு வேறு.
(பின்னாளில் அந்த உறவினர் என்னை தன் மாமன் மகன் என்றும், நான் செய்தியாளராக இருக்கிறேன் என்று என்னை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தியதும், அவர் நடத்திய நிறுவனத்தில் என்னை பணி செய்ய அழைத்ததும், நானும் அங்கே 2 வருடம் பணி செய்ததும் வேறுக்கதை)
ஏதோ ஒரு மாதத்தை ஒட்டினேன். 12 ம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவு வெளியானது, அந்த ஷோரூமில் பணி செய்த இலியாஸ் என்பவர் என்னை அழைத்து அவர் தொலைபேசி மூலம் என் தேர்வுமுடிவைப் பார்த்தார். வியப்புடன் பார்த்தார். (ஏன் என்றால் இவனா இவ்வளவு மதிப்பெண் வாங்கினான் என்ற பார்வை அது), ஆம் நான் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளேன் எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்து எனக்கு ௹.500 அன்பளிப்புக் கொடுத்து இந்த வேலை உனக்கு வேண்டாம் என்று என்னை அங்கிருந்துப் போகுமாறு கூறினார். மனதில் லேசான மகிழ்ச்சி தான். ஏன் என்றால்  பள்ளியில் யார் முதலிடம் எனத் தெரியவில்லை, உடன் பஸ் ஏறி ஸ்ரீமுஷ்ணம் சென்றேன். அங்கு நான் பஸ்சை விட்டு இறங்கியதும் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர், யாரோ கானூர் பையன் தான் முதல் மார்க் காம், அப்படியென்று அவர்கள் கூறியதும் மனதில் மீண்டும் ஒரு மகிழ்ச்சி. ஆனால் கானூரில் இருந்து வந்து நான் மட்டும் அந்தப் பள்ளியில் படிக்க வில்லையே, அதனால் மீண்டும் சந்தேகம், நான் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதும் என்னை ஆசிரியர்களும், சக மாணவர்களும் கட்டிப்பிடித்து பாராட்டினார்கள். அப்போது தான் நான் முதல் மதிப்பெண் எடுத்தேன் என்பதை உணர்ந்தேன். அந்த மகிழ்ச்சியில் நான் பட்டாம்பூச்சியாய் பறந்து கானூர் சென்றேன். நான் கானூரில் பஸ்சை விட்டு இறங்கியதும் அங்கிருந்தவர்கள் எல்லாம் என்னைப் பாராட்டினார்கள், ஆனால் என் மாமன் மட்டும் என்னை இதெல்லாம் ஒரு மார்க்கா? எனக் கேட்டதும், என் மகிழ்ச்சி காணடிந்தது, கண்ணில் தண்ணீர் பெருக்கெடுத்தது, வீட்டிற்குச் சென்றேன். தாத்தா, பாட்டி, மாமன் மனைவி எனக்கு அக்கா யாருமே  என்னுடன் அந்த மகிழ்ச்சியை கொண்டாடவும் இல்லை, தலையை கோதிவிட ஆளும் இல்லை, ஊரே என்னை பெருமை பேசியது, ஆனால் என்னை வளர்த்தவர்களுக்கு அந்த முதல் மதிப்பெண் தரம் குறித்து அறியவில்லை போலும்,  அப்போதுதான் எனக்கு தாய் இல்லாத குறை தெரிந்தது. உடனே எனக்கு ஆடு மேய்க்கச் செல் என்ற உத்தரவு வர அரை கால்சட்டைக்கு மாறிய நான் ஆடு மேய்ப்பவனாக மாறினேன். ஆடு மேய்க்கும் பணி தான் இனி நிரந்தரம் என நினைத்து அதற்கேற்ப என் மனநிலையை மாற்றினேன், எங்கள் கானூரில் ஆலம்பாடி யார் என்ற எனக்கு தாத்தா முறை. அவருடன் ஆட்டுக்குட்டிகளை 10, 15 உருப்புடிகளை ஓட்டிக் கொண்டு மேய்க்க செல்வோம், காலையில் 9 மணிக்கு புறப்பட்டால் பாளையங்கோட்டை , நாச்சியார்பேட்டை, நெடுஞ்சேரி, பேரூர், கூடலையாற்றூர், காவலன்குடி என்று கானூரைச் சுற்றியுள்ள ஊர் வரை ஆடுகளை மேய்த்து வருவது தான் அன்றாடப் பணி, இதில் காலையில் பழைய சோறு, ஊறுகாய் சாப்பிட்டுச் சென்றால் மீண்டும் இரவு 8 மணிக்குத் தான் உணவு. மதிய உணவு உண்ண முடியாது, தண்ணீர் தான் மதிய உணவு. இந்த ஆடு மேய்க்கும் வேலை இடையில் வந்த வேலை அல்ல, எனக்கு விவரம் தெரிந்து பள்ளி விடுமுறை தினம் மட்டும் அல்ல, பள்ளிக்கு நான் விடுப்பு எடுத்துக் கொண்டும் ஆடு மேய்த்திருக்றேன். ஏன் என்றால் நான் எனது தாத்தா பாட்டி ஆடு மேய்த்தால் தான் நான்,சாப்பிட முடியும் என்ற நிலையில் எங்களை வறுமை வாட்டியது, இப்படியே ஆடு மேய்க்கும் பணி தொடர்ந்தது, ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது. எனக்கு பரிசு வழங்குவதற்காக பள்ளிக்கு வரவேண்டும் என தகவல் வந்தது, நான் தகவல் தந்த அண்ணன் செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் முத்துத்துரையை சந்தித்தேன். என் தலையெழுத்து மாறப் போகிறது எனத் தெரியவில்லை அன்று, என்னை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற துரை அண்ணன் அங்கிருந்த வி.ஐ.பிக்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பரிசளிப்பு விழா தொடங்கியது, பரிசளிப்பவர் தமிழறிஞர் மா.நன்னன்.  ஆனால் எனக்கு முதல் பரிசு இல்லையாம், 2ம் பரிசு தான் என அறிவித்தனர். ஏன் எனக் கேட்டதற்கு 10, 11, 12 ஆகிய 3 வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்றனர். முதல் மதிப்பெண் எடுத்தும் 2 ம் பரிசுப் பெற வேண்டிய அவல நிலை எனக்கு, நான் முதல் மாணவனாக வரக் காரணமாக இருந்த என் ஆசிரியர் ரமேஷ் அவர்களை அழைத்து அந்த பரிசை வாங்கினேன். ஏதோ  அவமானப் பட்டது போல உணர்ந்தேன், மகிழ்ச்சியை கொண்டாடக் கூட முடியவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது, கண்ணீர் பெருக்கெடுத்தது, அதன் பிறகு நான் அங்கே இருக்க வில்லை, விழா முடிவதற்குள் அங்கிருந்து என்னை துரை அண்ணன் அழைத்து காரில் ஏற்றி அவரது கடைக்கு அழைத்துச் சென்றார். அந்த கடைதான் எனக்கு கோவில், அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தந்தார், அவர் தான் எனக்கு திருப்புமுனையை தந்தவர், இன்று நான்  அவரை முன்மாதிரியாக கொண்டு தான் செய்தியாளராகியுள்ளேன். அவரது முயற்சியால் என்னை ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் நிர்வாகி பிரகாஷ் அய்யா அவர்கள் என்னை அந்த  கல்லூரியில் அவர் செலவில் சேர்த்துக் கொண்டார், ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் என 2 வருடத்திற்கு 3 லட்ச ரூபாய் செலவில் பிரகாஷ் அய்யா அவர்களின் அருட்கொடையால் நான் ஒரு ஆசிரியரானேன். அப்போது அந்த கல்லூரியின் விரிவுரையாளர்களாக இருந்த சதீஷ் சார், பாலமுருகன் சார் மற்றும் அனைவருமே எனக்கு உதவி புரிந்தனர், நான் ஆசிரியர் பயிற்சி படிக்கும் வரை துரை அண்ணனின் கடைதான் எனக்கு வீடு, காலை, இரவு உணவும் துரை அண்ணன் வீட்டில் இருந்து வந்து விடும். மதிய உணவு கல்லூரி விடுதியில் கிடைத்துவிடும். நான் கல்லூரி படித்த இரண்டரை வருடக் காலங்கள் துரை அண்ணனின் சகோதரர் நடத்திய ஐஸ் பேக்டரியில் இரவு நேர கணக்குப் பிள்ளை வேலை. காலை 9.30 மணிக்கு கல்லூரி, மாலை 4.30 மணிக்கு நேராக துரை அண்ணனின் கடைக்கு வர வேண்டும், அவருக்கு உதவியாக இரவு 9 மணி வரை இருந்து விட்டு, 9 மணிக்கு மேல் ஐஸ் பேக்டரிக்கு செல்ல வேண்டும். காலை 8 மணி வரை அங்கு கணக்கெழுதும் வேலை, 8 மணிக்கு மீண்டும் கடைக்குச் சென்று கடையை திறந்து வைத்து விட்டு 9.30 மணிக்கு கல்லூரி செல்வேன்.  ஐஸ் பேக்டரியில் வேலை செய்ததற்கு நான் வாங்கிய மாத சம்பளம் ரூ.1200 . கல்லூரி முடிந்தது, ஆசிரியர் பயிற்சி தேர்வில் முதல் நிலையில் வெற்றிப் பெற்றேன்
--------------------------------------
கடந்து வந்த பாதை - 2
- - - - - - - - - - - - - - - - - - -
இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்ததும் எனது தங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டிய நிலை, நான் தான் நடத்தி ஆக வேண்டும். என் தங்கை களரங்குப்பத்தில் அஞ்சலை என்ற குழந்தை இல்லாத பாட்டியிடம் வளர்ந்தாள். நான் படிக்கும் போது  இரவில் பார்த்த பகுதி நேர பணியில்  வந்த ஊதியத்தை சேமித்து வைத்து அந்த செலவில் என் தங்கையின் மஞ்சள் நீராட்டு விழாவை முடித்தேன், மனதில் நிறைவான மகிழ்ச்சி. எப்படியும் வாழ்ந்திடலாம் என்ற எண்ணம் பிறந்தது, இந்நிலையில் துரை அண்ணனின் கடையை அவரது அண்ணன் பார்த்துக் கொண்டார். மேலும் என் மாமன் மது குடிப்பதை கண்டித்தேன். அதனால் அவரிடம் கோபித்துக் கொண்ட நான் கோயமுத்தூர் சென்று விஜயலட்சுமி கிரைண்டர் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியில் இருந்தேன். ஊதியம் 3 ஆயிரம் மட்டுமே. 6 மாதம் பணியில் இருந்தேன். அங்கிருக்கும் போது ஓய்வு நேரங்களில் கவிதைகளை எழுதி பழகினேன். நான் பரிசாக பெற்ற புத்தகங்களை படித்ததால் எப்படியாவது எழுத்தாளராக வேண்டும், சமுகத்திற்காக போராட வேண்டும், சமுக பிரச்சினைகள் களைவதற்கான முயற்சியில் ஈடுபட விரும்பினேன். துரை அண்ணனுடன் 3 வருடங்களுக்கு மேல் பழகிய போது, அவர் மக்களின் பொதுப் பிரச்சினைகளை எழுதியப் போது மக்கள் அவரை கையெடுத்துக் கும்பிட்டதை நேரில் பார்த்து  நானும் நெகிழ்ந்தேன், அவரைப் போல ஒரு செய்தியாளராக வேண்டும் என ஆர்வம் கொண்டேன். அதனால் கோயமுத்தூரில் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களுக்குச் சென்று வேலைக் கேட்டேன். 19, 20 வயது தான் இருக்கும், என் உருவம் அன்று மிகச் சிறிய உருவம். ஒரு குள்ளனாகவே இருந்தேன். அதனால் எனக்கு வேலைத் தரவில்லை என நம்புகிறேன். அதனால் மீண்டும் கானூர் திரும்பிய நான் சென்னை சென்று சென்னையில் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களிலும் வேலைத் தேடினேன், வேலைக்கிடைக்கவில்லை, மீண்டும் கானூர் திரும்பினேன், கடையில் வேலை செய்த அனுபவம் இருந்ததால் 2009ல் கானூரில் ஒரு சிறிய மளிகை கடை ஆரம்பித்தேன்.  என் தங்கையை அழைத்து வந்து கடையை பார்த்துக் கொள்ள செய்தேன். இந்நிலையில் விருத்தாசலத்திற்கு தினத்தந்தியில் நிருபராக பணிபுரிய ஆள் கேட்டு பேப்பர் விளம்பரம் வந்தது. 2010ம் ஆண்டு அந்த விளம்பரத்தின் மூலம் விருத்தாசலம் தந்தி டெப்போ அலுவலகத்தில் நடந்த அந்த  நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன், அதில் கலந்து கொண்ட இளம் வயதுடையவனாக நான் மட்டுமே இருந்தேன். அதில் தேர்வு பெற்ற என்னை  கம்மாபுரம் நிருபராக அப்போதைய மேலாளர் அய்யா செல்வராஜ், எங்கள் குடும்பத்தை வாழவைத்த தெய்வம், சின்ன பையன் என எண்ணாமல் என் மீது நம்பிக்கைக் கொண்டு பணி செய்ய ஊக்குவித்தார், அப்போது விருத்தாசலம் தந்தி நிருபராக இருந்த நாகராஜன் (தற்போது அவர் செய்தி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுவிட்டார்) முதலில் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறகு எனது வளர்ச்சியின் தூண்களில் ஒருவராகி விட்டார். செய்தி எடுப்பது எப்படி, விருப்பு வெறுப்பின்றி செய்தி தருவது குறித்தெல்லாம் பாடம் எடுத்த குரு அவர். தந்தி விளம்பரப் பிரிவு கிருஷ்ணகுமார் எனது வருமானம் பெருக முக்கிய காரணம். இன்று என்னால் ஏழ்மையை அறியாமல் வாழ முடிகிறதென்றால் கிருஷ்ணகுமார் தான் காரணம், என் வளர்ச்சியின் மற்றொரு தூண் அவர்.  அவரது ஊக்குவித்தலால் நான் பன்மடங்கு வளர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
2010 விருந்து 2014 வரை கானூரில் இருந்து கம்மாபுரம் ஒன்றிய கிராமங்களில் பயணம் செய்தேன். முதலில் அறிமுகம் ஆனவர் புகைப்பட கலைஞர் ஜெமினி ரங்கப் பிள்ளை, கோபாலபுரத்தில் நடந்த இலவச கியாஸ் அடுப்பு வழங்கும் நிகழ்வில் சந்தித்தேன். அதன் பிறகு பின்னாளில் எனக்கு உறவினரான விளக்கப்பாடி இளஞ்செழியன், இருவர் மூலமும் பலரது அறிமுகம் கிடைத்தது, ஜெமினி ரங்கப் பிள்ளை அண்ணன் மூலம் அய்யா கவிஞர் அறிவுமதியை அவரது ஊர் சு.கிணனூரில் இருந்து அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவு பெரிய கவிஞர் எனது வாகனத்தில் என்னுடன் அமர்ந்து பயணம் செய்தது எனக்கு பேருவகையாக இருந்தது. அவரைப் போல அல்ல, இருந்தாலும் ஒரு கவிஞராக நாம் எப்போது சமுகத்தில் அடையாளம் காட்டப்படுவோம் என எண்ணி ஏங்கிய நாட்கள் பல உண்டு, நான் செய்தியாளரானதும் அறிமுகமான கம்மாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் முதனை செல்வராசு, அடுத்து பெருந்தலைவரான மருங்கூர் செல்வராசு, அவர்களுடன் பணிபுரிந்த மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் என் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருந்துள்ளனர். என் தங்கைக்கு 2011ல் திருமணம். கானூரில் தான் வரவேற்பு வைத்திருந்தேன். அப்போது புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம். அவர் சமுக நலத்துறை அமைச்சராக என் தங்கையின் வரவேற்பு விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். எங்கள் வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை கார்களாகவே நின்றது , அப்போது தான் கானூரில் வீரபாண்டியன் என்ற ஒருவன் வாழ்வதும், அவன் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ளதும், அந்த திருமண வரவேற்பு விழாவிற்கு அமைச்சரே வந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. மழை சோ என பெய்தும் அதனை பொருட்படுத்தாமல் வந்து நான் யார் என கானூர் கிராமத்திற்கு அடையாளப்படுத்தியவர் அம்மா
செல்வி ராமஜெயம்.  நான் நிருபராக வேண்டும் என ஏன் நினைத்தேனோ  அதுப் படிப்படியாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது, சமுக பொதுப் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வந்தேன். ஓரளவிற்கு என்னால் முடிந்த அளவிற்கு மக்கள் பிரச்சினைகள் தீர போராடி வருகிறேன். அதற்கு நான் சார்ந்த என் நாளிதழிற்குத் தான் நன்றி கடன் பட்டுள்ளேன்.  மன அழுத்தம், மன இறுக்கம், எப்போது என்ன பிரச்சினை வரப் போகிறதோ என்ற அச்சம், கைப்பேசியில் மணியடித்தால் ஒரு வித படபடப்பு, எப்போது வழக்காடி ஒலை வருமோ? என்ற அச்சம், எவ்வளவு மனம் மந்தமாக இருந்தாலும் கைப்பேசி அடித்து ஒரு இடத்தில் செய்தி என்றதும், இரவு மணி இரண்டாகவே இருந்தாலும் அந்த இடத்திற்கு செல்வது,  இவையெல்லாம் என்னை எப்போதும் சுரு சுருப்பாகவே வைத்துள்ளது. அதற்கு காரணம் என் பணி, நான் என் பணியை, என் மனைவியைக் காட்டிலும் அதிகம்  நேசிக்கிறேன். இனியும் நேசிப்பேன் என நம்புகிறேன். என்னால் வெளிக்கொண்டு வந்து தீர்க்க முடியாத மக்கள் பிரச்சினைகளை, கவிதையாக எழுதியுள்ளேன். இடையில் நண்பர்களாக கோபால், சக போட்டியாளராக வந்து என்னை இன்னும் மெருகேற்றினார். எப்படியெல்லாம் செய்தி எடுப்பது என நண்பர் செய்தியாளர் ராஜாவுடன் பழகிய காலங்களில் அறிந்தேன். இந்நிலையில் நண்பர் வடலூர் செய்தியாளர் செந்தில் மூலம் குடும்ப நண்பர், தந்தை ஸ்தானத்தில் நான் வைத்திருக்கும் ஆதித்யா செல்வம் அவர்களின் நட்பு எனது வாழ்க்கையில் மேலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது, அவர் தான் எனக்கு பெண் பார்த்து மண வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர். அவருடைய நண்பர் வே. க.முருகன் என்பவர் அவருடைய அண்ணன் அண்ணாதுரை - தனுசு தம்பதியரின் மகள் சங்கீதாவை எனக்கு மணம் முடித்து என் வாழ்க்கையில் சங்கீதத்தை ஏற்படுத்தியவர், ''மனைவி வாய்ப்பதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்" என்பார்கள். தாய், தந்தை, தோழி என எல்லாம் ஆனவராய் என் மனைவியை எனக்கு கடவுள் பரிசளித்துள்ளார். அவர் சுகபோகமாக இருக்கிறாரோ இல்லையோ? என்னை ஒரு குழந்தையை தாய் எப்படி பார்ப்பாளோ அப்படித்தான் பார்த்துக் கொள்கிறாள். என் உறவுகளிடமும் வெறுப்பைக் காட்டாமல் விருப்பை சம்பாதித்து வருகிறார். பாண்டியன் பொண்டாட்டியை போல எனக்கு மருமகள் வேண்டும் என என் உறவுகள் என்னிடம் கூறும் போது எனக்கு பெருமையாக உள்ளது. நான் என் மனைவியுடன் விருத்தாசலம் பெரியார் நகரில் வசிக்க தொடங்கினேன்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கடந்து வந்த பாதை - 3
_______________________
நான் கம்மாபுரம் செய்தியாளராக இருந்த போது விருத்தாசலம் செய்தியாளராக வேண்டும் என்பதே எனது ஆசை. திருமணம் முடிந்து நான் விருதைக்கு வந்து தங்கியதும் எனக்கு பாண்டிச்சேரி மாலை மலர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. உடனே நேர்காணலுக்கு வருமாறு கூறினார்கள். நான் பாண்டி சென்று விருத்தாசலம் மாலை மலர் செய்தியாளராக விருதைக்கு வந்தேன். சில நாட்களில் நான் தினத்தந்தியில் விருத்தாசலம் செய்தியாளராக வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது. நண்பர் செய்தியாளர்  சதாசிவம் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, விருதையில் எனக்கு இருந்த எதிர்ப்புக்கு மத்தியில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தார். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், வக்கீல்கள் விஜயகுமார்,  அருள்குமார், தொழிலதிபர் சிங்காரவேல், மற்றும் சக செய்தியாளர்கள், பல நண்பர்கள் என்னை அங்கிகரித்து வளர்ச்சிக்கு காரணமாகி உள்ளார்கள். என்னை விருத்தாசலம் செய்தியாளராக அங்கிகரித்த தினத்தந்தி மேலாளர் பால் துரைசிங் அய்யாவின் ஆசியுடன்,  செய்தி ஆசிரியர், துணை செய்தி ஆசிரியர்கள்  உதவியுடன் நன்றாக விருத்தாசலம் செய்தியாளராக பணி செய்து கொண்டிருக்கிறேன். கோ.மாவிடந்தல்  தலைவர் இரா.குப்புசாமி என் கவி ஆர்வத்தை விளக்குத் திரியை தூண்டி விடுவது போல தூண்டி விட்டவர், அவர் என் நலன் விரும்பியும் கூட, அவருக்காக ஒரு சில கவிதைகளை எழுதி கொடுத்துள்ளேன்.  இடையில் உற்ற  நண்பர்கள் தனக்கு எதிராக மாறியும், எதிராக இருந்தவர்கள் உற்ற நண்பர்களாகவும் மாறுவதும் அவ்வபோது நடந்து வருகிறது, விருதை செய்தியாளரானதும் எதிர்ப்பு பலமாக இருந்தது, சக செய்தியாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர், என் வளர்ச்சிக்கு தூணாக  இருந்தவர்கள் கூட எதிரியாக பாவித்தனர். புதிய நண்பர்கள் பலர் இணைந்தனர். அதில் கவிஞர்  பிரபு பாரதி முக்கியமானவர். முகநூல் கவிதை குழுமங்களை அறிமுகப்படுத்தியவர் அவர். என்னுடன் பணிபுரியும் சக செய்தியாளர்களில் முக்கியமானவர். இந்த நூல் வெளிவரக் காரணமும் அவர் தான்.  ஏனோ, தானோ என கிறுக்கிய என் கிறுக்கல்களை கவிதை என்றும், முகநூல் குழுமங்களில் அறிமுகப்படுத்தி அதில் என்னை இணைத்து போட்டி கவிதைகளில் பங்கேற்க செய்தார். தமிழமுது கவிச்சாரல் குழும நிர்வாகி பூங்காவனம் அம்மா என் கவிதைகளை அங்கிகரித்து முதல் ஊக்குவிப்பு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து செந்தமிழ்ச் சாரல், நிலாமுற்றம், செந்தமிழ் கவிதை பூங்கா, ஒரு கவிஞனின் கனவு, டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூங்கா, அமிர்தம், செய்யுட்கலை சூடிகை, சிகரம், முத்தமிழ்க் களம், நிலாச்சோறு, கவிதைகள் களஞ்சியம் ஆகிய குழுமங்களில் ஆயிரகணக்கான கவிஞர்கள் கலந்து கொண்ட போட்டிகளில் பங்கு கொண்டு கவிதைகள் எழுதினேன், 100க்கும் மேற்பட்ட வெற்றி சான்றிதழ்களை பெற்றேன். இதில் தமிழமது கவிச் சாரல் குழுமம் என்னை கவிஞராக அங்கிகரித்து கவிச் சிற்பி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது, மேலும் நிலாமுற்றம் குழுமம் காதல் இளவரசன், காதல் நாயகன் உள்ளிட்ட பட்டங்களை வழங்கியது, கவிதைகள் களஞ்சியம் நடத்திய மின்னல் கீற்றுகள் என்ற போட்டிக்கு ஒருவர்க்கு மட்டுமே சான்றிதழ். அந்த சான்றிதழை நான் பெற்றேன், அந்த குழும நிர்வாகி அந்த சான்றிதழுடன் உணர்வு திருவிழா என்ற கவிதை நூலையும் பரிசாக அனுப்பினார்கள். முக்கியமாக செந்தமிழ்ச் சாரல்  குழும நிர்வாகி சக்தி கிருஷ்ணன் என்னை அந்த குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவராக நியமித்து அழகுப் பார்த்தார். நன்றாக குழும பணியாற்றிய நான் வேலைப் பளு காரணமாக விலக நேரிட்டது, நான் கவிதைகள் எழுதி நான் பெற்ற சான்றிதழை முகநூலில் பதிவிட்ட போது ஏராளமான வாழ்த்துக்கள், பட்டி சு.செங்குட்டுவன் அவர்கள் ஆயிரம் சான்றிதழ் பெற வேண்டும், தொடர்ந்து எழுத வேண்டும் என என் கவி ஆர்வத்தை தூண்டி விட்டார். இனிய நண்பர் அய்யா கார்மாங்குடியார் எனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பாராட்டி வந்துள்ளார். அவர் நான் முகநூலில் பதிவிட்ட கவிதைகளையும், சான்றிதழ்களையும் பார்த்து உங்களை மாலை அணிவித்து விருத்தாசலம் முழுவதும் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கூறியது என்னை மேலும் தமிழ் கவி மீது வெறிக் கொள்ள செய்தது, கவி எழுதினாலும் அதனை புத்தகமாக வெளியிட ஆசை.  அண்ணன், எழுத்தாளர், கவிஞர், நடு நாட்டு சிங்கம் கண்மணி குணசேகரனிடம் எனது ஆசையை தெரிவித்தேன். அவர் ஊக்குவிப்பால் நான் முகநூலில் எழுதிய கவிதைகளை தொகுத்தேன். அய்யா பட்டியாரிடம், கண்மணி குணசேகரனிடமும்  கொடுத்தேன். அவர்கள் கொடுத்த அங்கிகாரமே இன்று உங்கள் கையில் உள்ள இந்த கவிதை நூல் . உடன் அண்ணன் ரங்கப் பிள்ளையிடம் தெரிவித்த போது எழுத்தாளர் ரத்தின புகழேந்தி அவர்களிடம் கவிதை தொகுப்பை கொடுக்குமாறு கூறினார். இருவரும் சென்று அண்ணன் புகழிடம் கொடுத்த போது இன்முகத்துடன் வாங்கி என் கவிகளை திருத்தி இன்று அழகிய கோர்ப்பாய் கோர்த்து அவரது பதிப்பகத்தின் மூலமே இந்த நூலை வெளியிட உதவி புரிந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment