மொட்டை மாடிகளில்
நீரும், உணவும் வைப்போம்
பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்
வெயிலின் தாக்கம் மிகுதியாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?
உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம்.
கத்தரி வெயில் இப்போதே வந்துவிட்டது போல, வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான ஏற்பாடுகளை மனிதர்கள் செய்து கொள்கிறார்கள். ஆனால் பறவைகள் என்ன செய்ய முடியும்? வெயில் காலத்தில் பெரிய பெரிய பறவையினங்கள் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுகின்றன. ஆனால் சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி போன்ற சிறிய பறவையினங்கள் வெயிலால் உயிரிழந்து போகும் அபாயமும் இருக்கின்றன. எனவே வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை இன்று முதலே நாம் மேற்கொள்வது நல்லது. அதனால் பறவைகளின் தாகமும் தீரும். அதன் வாழ்வும் காக்கப்படும். எனவே இந்த முயற்சிகளில் பொதுமக்கள் அனைவருமே ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment